1 லி கோமியம், 1 கிலோ சாணம்-ரூ.500: கொரோனா வதந்தியால் களைக்கட்டிய வியாபாரம்!
கொரோனா வைரஸ் பரவுதலுடன் வாட்ஸ் அப் வதந்திகளும் கன்னாபின்னமாய் பரவியதில், கோமியத்துக்கு டிமாண்ட் வந்தது. ஆனால், கோமியத்தை விற்பனை செய்த பால்வியாபாரி என்ன ஆனார் தெரியுமா?
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு மேற்கொண்டு வருகையில் நித்தம் நித்தம் தினுசுதினுசாய் பரவுகின்றன வாட்ஸ் அப் வதந்திகள். சிக்கன் சாப்பிடுவதால் கொரோனா பரவுவதாக வதந்தி பரவ, கோழி வியாபாரம் கடும் சரிவை கண்டது. அதேபோல்,
மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் கொரோனா வைரசிடமிருந்து தற்காத்து கொள்ளலாம் போன்ற அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவியது. இச்சூழலை பயன்படுத்தி கொண்ட மேற்கு வங்கத்தை சேர்ந்த பால் வியாபாரி ஒருவர், மாட்டின் கோமியத்தை பாட்டிலில் அடைத்தும் சாணத்தை பேக்கிங் செய்தும் ரூ500க்கு விற்பனை செய்யத் தொடங்கினார்.
மேற்குவங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாபூத் அலி. பால் வியாபாரியான அவர் வாட்ஸ் அப் வதந்திகளை நம்பி பால் வியாபாரம் செய்துவிட்டு, மாட்டின் கோமியத்தையும், மாட்டு சாணத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.
கொல்கத்தாவிலிருந்து 25 கி.மீ தூரத்தில் இருக்கும், டான்குனி என்ற பகுதியில் சாலை ஓரத்தில் தற்காலிகக் கடை அமைத்து, ஒரு லிட்டர் மாட்டு சிறுநீரை ரூ.500-க்கும், சாணத்தை ரூ.500-க்கும் விற்பனை செய்தார். கோமியத்தைப் பருகினால் கொரோனா தொற்று ஏற்படாது என விளம்பரப் பலகை வைத்து விற்பனை செய்வது பற்றி தகவலறிந்த ஹூக்ளி பகுதியைச் சேர்ந்த காவலர்கள் மாபூத் அலியைக் கைது செய்தனர். ஏமாற்றுதல் மற்றும் மத உணர்வுகளைக் காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹூக்ளி மாவட்டத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாபூத் அலி மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 295 ஏ பிரிவு(திட்டமிட்டு தீங்கிழைக்கும் செயல்கள் மற்றும் மத உணர்வுகளை சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுதல்) மற்றும் 120பி பிரிவு (குற்றச்சதி திட்டத்திற்கான தண்டனை), மருந்துகள் மற்றும் மாய வைத்தியம் (ஆட்÷ சபனைக்குரிய விளம்பரங்கள்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பிரிவுகளும் ஜாமீன் பெற முடியதாவை,” என்று இந்தியா டுடே-விடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் விசாரணையில்,
“மார்ச் 14-ம் தேதி இந்து மகா சபா சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் அவர்களது ஆதரவாளர்கள் மாட்டு கோமியத்தை பருகினர். அதை பார்த்த பின்னரே எனக்கு இந்த யோசனை தோன்றியது. என்னிடம் 2 மாடுகள் உள்ளன. ஒன்று நாட்டுப் பசு மற்றொன்று ஜெர்சி பசு. பால் விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறேன்,” என மாபூத் அலி கூறியுள்ளார்.
இந்து மகா சபா நடத்திய நிகழ்ச்சியை டிவியில் பார்த்தேன். அப்போதுதான் மாட்டு கோமியத்தையும் சாணத்தையும் விற்றால் அதிகம் லாபம் ஈட்டலாம் என்று தோணியது. பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்தையும் காசாக மாற்ற முடியும் எனத் தெரிந்தது. அதனால் நான் சாலையில் கடை அமைத்து விற்பனை செய்ய முடிவு செய்தேன். ஜெர்சி பசுவின் கோமியத்தை ரூ300-க்கு விற்பனை செய்தேன்,” எனக் கூறியுள்ளார் மாபூத் அலி.
கடந்த செவ்வாய்கிழமையன்று (மார்ச் 16ம் தேதி) கைது செய்யப்பட்ட மாபூத் அலி, ஹூக்ளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். விசாரணையின் முடிவில், அவரை நான்கு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அமேசான், ஃபிளிப்கார்டு போன்ற ஆன்லைன் வணிகத்தளங்களில் வட்டவடிவ வறட்டி அமோகமாய் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மாட்டுச்சாண எருவாட்டிகள் பல ஆண்டுகளாக அடுப்பு எரிக்கவும், கோமியம் மத சடங்குகளுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டின் சுவருகளும் பல வறட்டிகளை உலர்த்துவதற்காக தாங்கி நிற்கும்.
கிராமப்புறங்களில் வெகு எளிதாகக் கிடைத்தாலும், சிட்டிகளில் வாழும் மக்களுக்கு வறட்டிகள் கிடைப்பதில் வறட்சியிருந்தது. அதனை அறிந்து கொண்ட மாட்டு உரிமையாளர்கள் பால் விற்பனைக்கு அடுத்தப்படியாக வறட்டிகளை விற்க தொடங்கினர். இப்படி பிசினஸ் ஆன்லைனில் தளங்களில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வேகமாய் பரவ தொடங்கியது.
‘‘எங்களது தளத்தில் பல விற்பனையாளர்களும் மாட்டுசாணத்தை விற்க பதிவு செய்துள்ளனர். அதற்கு ஏற்றவாறு கஸ்டமர்கள் ஆர்டர்களும் குவிகிறது. பெரும்பாலான ஆர்டர்கள் நகர்புறங்களில் இருந்து வருகின்றன,'' என்று தி இந்துவிடம் தெரிவித்துள்ளார் அமேசானின் செய்திதொடர்பாளர் மாதவி கோச்சார்.
ராஜஸ்தானின் கோட்டா நகரில் 120மாடுகளை கொண்டு செயல்படும் பால்பண்ணை ஒன்று பால்வியாபாரத்திற்கு இணையாக வறட்டிகளை விற்பனை செய்து வருகிறது. ஒரு டஜன் வறட்டியை 120ரூபாயுக்கு விற்பனை செய்கிறது அந்நிறுவனம்.
அமேசானில் 200மி.லிட்டர் முதல் 20லிட்டர் கேன் வரை கோமியம் கிடைக்கிறது. சராசரியாய் ஒரு லிட்டர் கோமியத்தின் விலை ரூ.200. அதே போல், வறட்டிகளும் விதவித சைசுகளில் எண்ணிக்கை கணக்கிலும், எடைக் கணக்கிலும் விற்பனை செய்யப்படுகிறது. ஹோலி பண்டிகையின் முக்கியச் சடங்கான ஹோலி தகான் நிகழ்விற்காக பிரத்யேக ‘மாட்டு சாண மாலை'-களும் விற்பனை செய்யப்படுகிறது. 2 வறட்டி மாலையின் விலை ரூ72!.
வறட்டிக்கு வந்த கிராக்கியா பாத்தீங்களா!!