கொரோனா தாக்கம்: நீங்கள் செய்ய வேண்டிய நிதி சார்ந்த 8 நடவடிக்கைகள்!
அவசரகால நிதி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில், நாம் உடனடியாக நிதி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய 8 நடவடிக்கைகள் இவை...
கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருவது யாவரும் அறிந்ததே. இந்தியப் பங்குச்சந்தைகள் சரித்திரம் காணாத அளவில் சரிந்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பும் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், நாடு முழுவதுமே அடுத்த 15 நாட்களுக்கு அதிகாரப்பூர்வ முடக்கங்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிலவகை தொழிலுக்கு வேண்டுமானால், 'ஓர்க் ஃப்ரம் ஹோம்' ஓரளவுக்குக் கைகொடுக்கலாம். ஆனால், உடலுழைப்பும் கள-வேலைகளும் நிரம்பிய நம் நாட்டில் பெரும்பாலானோருக்கும் இது துணைபுரியாது என்பதான் நடைமுறை உண்மை.
குறிப்பாக, மாதாந்திர ஊதியத்துக்கு வேலைக்குச் செல்வோர், சுயதொழில் புரிவோர், சிறு - குறு தொழில்புரிவோர், தொழில்முனைவோர் என பல தரப்பினருக்கும் இது மிகவும் மோசமான காலக்கட்டம்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தேச அளவில் பேரிடராக மத்திய அரசே அறிவித்துள்ள நிலையில், இந்தப் பேரிடர் காலத்தில் நம்மை நாமே காப்பதில் கவனம் செலுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் அடிப்படைக் கடமை. அத்துடன், நம்மைச் சார்ந்தவர்களையும் காத்திடவேண்டியதும் மிக மிக அவசியம்.
முதலில் கொரோனாவிடமிருந்து நம்மைத் தற்காத்துக்குக்கொள்ளும் விஷயங்களைக் கவனிப்போம். இதற்கு வழிகாட்டும் அடிப்படைத் தகவல்களை உள்ளடக்கிய கட்டுரைகள்:
* கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன தற்காத்துக் கொள்வது எப்படி?
* கொரோனா வைரஸ்: இணையத்தில் நீங்கள் செய்யக்கூடாத 10 விஷயங்கள்!
* கொரோனா வைரஸ்: உலா வரும் வதந்திகளும், உண்மைகளும்…
* கொரோனா: வீட்டில் தனிமைப் படுத்தப்படுபவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் என்ன?
* இந்தியர்கள் கொரோனா வைரஸ் பற்றி சரியாக புரிந்து கொண்டுள்ளார்களா?
* ‘கொரோனா’ பெயரில் தீங்கு விளைவிக்கும் இந்த 14 சைட்டுகளை தவிர்த்திடுங்கள்!
அவசரகால நிதி நிர்வாகம்:
இயற்கைப் பேரிடர்கள், போர்ச் சூழல்களுக்கு ஒப்பானதுதான் கொள்ளை நோய் பரவும் காலமும். எனவே, கொரோனா வைரஸ் பரவல் - பாதிப்புகளையும் இந்த ரீதியில்தான் நாம் அணுக வேண்டும். இது அச்சுறுத்தல் அல்ல; மாறாக, அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்பதற்கான சுட்டிக்காட்டல் மட்டுமே. இந்தப் பின்னணியில்தான் நாம் அவசரகால நிதி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
அதன்படி, நாம் இப்போது நிதி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய 8 நடவடிக்கைகளைப் பார்ப்போம்.
1) புதிய முதலீடுகள் வேண்டவே வேண்டாம்!
பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி கண்டுவரும் நிலையில், அதையும் சிலர் முதலீடு செய்வதற்கான வாய்ப்பாக கருதக்கூடும். தற்போது நிலவி வருவது குறுகிய கால பிரச்னை என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், உலக அளவில் கொரோனாவின் தாக்கம் எப்போது கட்டுக்குள் வரும்; எப்போது இயல்புநிலைத் திரும்பும் என்பது யாருக்குமே தெரியாது.
எனவே, கண்மூடித்தனமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரிஸ்க் எடுக்க நினைக்கக் கூடாது. மிகக் குறிப்பாக, சிறு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை முதலீடுகள் பக்கம் சிறிது காலம் தலைவைத்து படுக்காமல் இருப்பது மிகவும் பாதுகாப்பானது என்று நிபுணர்கள் எச்சரிப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள்தான் என்றில்லை, சிறியதோ - பெரியதோ எந்த வகையிலான - எந்தத் தொழில் சார்ந்த புதிய முதலீட்டிலும் இப்போதைக்கு மிகுந்த கவனமும் நிதானமும் காட்டுவது நல்லது.
2) திட்டமிடலுக்கு சரியான நேரம்
வேலையும் தொழிலும் முழுமையாக நடக்காதபடி முடக்கம் ஏற்படும் சூழல்கள்தான் நம் எதிர்கால முன்னேற்றத்துக்கான வழிகளை வகுக்கக் கூடிய காலகட்டம்.
ஆம், தனி நபராக இருந்தாலும் சரி, சிறு - குறு தொழில்புரிபவராக இருந்தாலும் சரி, தொழில்முனைவராக இருந்தாலும் சரி, நிதி சார்ந்த திட்டமிடலுக்காக மந்தநிலை- பேரிடர் காலத்தைப் பயன்படுத்திக்கொள்வதே புத்திசாலித்தனம்.
குடும்ப பட்ஜெட் என்றால் வீட்டில் அனைவரும் சேர்ந்து தற்போது செயல்படுத்திக் கொண்டிருக்கும் பட்ஜெட்டை மறுபரிசீலனை செய்து, தேவையற்ற செலவுகளைக் குறைத்து, அத்தியாவசியங்களைக் கண்டறிந்து, சேமிப்பைக் கூட்டும் திட்டங்களைத் தீட்டுங்கள். குடும்பத்தில் நிதி சார்ந்த விஷயங்களை இணையர்கள் இருவரும் இணைந்து ஓப்பனாகப் பேசுங்கள். பரஸ்பரம் புரிதலுடன் கூடிய நிதி நிர்வாகத்தை கட்டமைப்பது எளிதாகும்.
இதேபோன்றுதான் வேலை - தொழிலிலும். வேலைக்குச் செல்வோர் தங்களது அடுத்தகட்ட நகர்வுக்கான திட்டமிடலில் தீவிரம் காட்டலாம். தொழில்புரிவோர் தங்களது தொழிலை மேம்படுத்துவதற்கான திட்டமிடுதலுடன், தேவையற்ற செலவினங்களைக் குறைப்பது, ஸ்மார்ட்டாக செலவு செய்வது, புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்துவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
3) அவசரகால நிதி சேமிப்பு
தனிநபரோ, நிறுவனமோ யாராக இருந்தாலும் 3 முதல் 6 மாதங்கள் வரையிலான வழக்கமான செலவினங்கள் - தேவைக்கு உரிய பணத்தை இருப்பில் வைத்திருப்பது அவசியம் என்று பொதுவாக அறிவுறுத்துவார்கள். இது, எல்லாருக்குமே சாத்தியம் இல்லாதது என்பதுதான் யதார்த்தம். ஆனால், இதன் அவசியத்தை உணரும் காலக்கட்டத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோம். ஆம், செயற்கைப் பேரிடர்களும், இயற்கைப் பேரிடர்களும் எதிர்பாராத வகையில் நம்மைத் தாக்க முற்படும்போது, இந்த அவசரகால நிதி சேமிப்புதான் முதலில் கைகொடுக்கும்.
'அவசரகால நிதி சேமிப்பு எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவில் இப்போது இல்லையே' என்று சலித்துக்கொள்பவர்கள் கவலைப்பட வேண்டாம். இப்போது, நாம் கற்றுக்கொண்ட பாடமாகக் கருதி, எதிர்காலத்துக்கான அவசரகால நிதிக்கு இப்போதே உங்கள் சேமிப்பைச் சிறுகச் சிறுக தொடங்கலாம். ஆம், Better Late than Never!
4) மருத்துவக் காப்பீடு
கொள்ளை நோய் பரவல் போன்ற பேரிடர் காலங்களில் மருத்துவம் சார்ந்தவற்றில் அரசுகளின் உறுதுணை நிச்சயம் இருக்கும். அதேவேளையில், பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அரசால் முழுமையான பாதுகாப்பு அளிக்க முடியாமல் போகலாம். எது எப்படி இருந்தாலும், எந்தச் சூழலிலும் யாரையும் சார்ந்து இருக்காமல் வாழ்வதே நமக்கு நல்லது என்பதை உணரவேண்டும்.
ஏற்கெனவே மருத்துவக் காப்பீடு எடுத்து, அதை சரியாக ப்ரீமியம் செலுத்தி நிர்வகித்து வந்தால் மிகவும் பாராட்டுக்குரியது. ஆனால், நம்மில் பலரும் மருத்துவக் காப்பீடு - ஆயுள் காப்பீடு - டெர்ம் இன்ஷூரன்ஸ் போன்றவற்றில் அக்கறை கொள்வது இல்லை. இனியாவது, அந்த அக்கறை நம்மைத் தொற்றும்பட்சத்தில் நம்மை நாமே காத்திட பேருதவியாக இருக்கும். மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது பல ஒப்பீடுகள், விசாரிப்புகள், அறிவுறுத்தல்களை சரியானவர்களிடம் இருந்து பெற்று, சரியான காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பதே நல்லது.
5) இணையத்தில் இணைந்திருங்கள்!
வீட்டிலிருந்தபடியே வேலை, வீட்டிலிருந்தபடியே தொழிலை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு என்றெல்லாம் வரும்போது, சமூகத்துடன் தனித்து இருக்கக் கூடிய 'சோஷியல் டிஸ்டன்சிங்' சூழலை எதிர்கொள்ள நேர்வது இயல்பு. இதற்காக, உங்களது பிராண்ட்பேண்ட் திட்டங்களில் இணையவசதி அதிகமாகவும் வேகமாகவும் கிடைக்கக் கூடிய ப்ளான்களைப் பெறுங்கள். இது, ஒருபக்கம் வேலை நிமித்தமாக உதவும். மறுபக்கம் குடும்பத்தினருடன் பொழுதுபோக்குத் தளங்களை நாடுவதற்கும் வசதியாக இருக்கும்.
சினிமா, விளையாட்டு, பொழுதுபோக்கு சேனல்கள் மட்டுமின்றி, கல்வி சார்ந்த சேனல்களையும் சப்ஸ்க்ரைப் செய்யுங்கள். உங்கள் பிள்ளைகளை உருப்படியாக எங்கேஜிங்காக வைத்துக்கொள்வதும் மிக மிக முக்கியம்.
6) ஆன்லைன் பரிவர்த்தனை
பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம் என்பதால், ஆன்லைன் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களது டெபிட் / கிரெடிட் கார்டுகளை சரியாகப் பயன்படுத்தி, அவசியமானவற்றை மட்டுமே ஆன்லைன் ஷாப்பிங் செய்து பெறுங்கள். ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போதுகூட, டெலிவரி சமயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
7) மாற்றத்துக்குத் தயாராகுங்கள்!
ஆன்லைன் வர்த்தகம் கோலோச்சுவதற்கு, 'சார்ஸ்' மிக முக்கியக் காரணம் என்று சொல்வது உண்டு. அதுவும் சீனாவில் இருந்து பரவிய வைரஸ்தான். இப்போது, 'கொரோனா'வால் உலக அளவில் மிகப் பெரிய மாற்றம் ஒன்று பிறந்திருக்கிறது. ஆம், நம் அமைந்தகரை முதல் அமெரிக்கா வரை வீட்டிலிருந்தே வேலை செய்யும் பழக்கம் பரவலாக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி மற்ற துறையினரும் இந்தப் போக்கை கடைப்பிடிக்க முன்வந்திருக்கிறார்கள்.
இந்தச் சூழலில், நம்மையும் நம் குடும்பத்தினரையும் 'ஒர்க் ஃப்ரம் ஹோம்' கலாசாரத்தை எப்படி அணுகுவது என்பதற்காகத் தயார்படுத்தத் தொடங்க வேண்டும். தொழில்புரிவோர் தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலைக்கு அமர்த்துவதால், ஏற்படும் சாதக - பாதகங்களை அலசி, சாதகங்களைக் கூட்டுவதற்காகத் திட்டமிட்டு செயல்பட வேண்டும். எதிர்காலத்தில், தொழில்புரிவோரின் செலவினங்களைக் குறைக்கவும், வேலை செய்வோரின் வருவாய் கூடுவதற்கும் வீட்டிலிருந்தபடி வேலை செய்யும் முறைதான் கைகொடுக்கும் என்பது நிபுணர்களின் கணிப்பு.
8) நிதியுதவிகளை அளித்தலும் பெறுதலும்!
பொருளாதார மந்தநிலை, பேரிடர் காலங்களில் நமக்கு அவசியத் தேவை ஏற்படும்போது, நமக்கு நெருக்கமானவர்களிடம் உதவிகளை நாடுவதற்குத் தயங்க வேண்டாம். அதுபோல் உதவிகளை நாடும் அதேவேளையில், நமக்கு எல்லாம் சரியானவுடனே அந்தக் கடனைத் திருப்பித் தர முன்னுரிமை அளிக்க வேண்டும்.
நாம் நிதிப் பிரச்னையின்றி இருக்கும்போது, நமக்கு நெருக்கமானவர்களுக்கு அவசரகால நிதி உதவிகள் தேவைப்படுவது நமக்குத் தெரியவந்தால், மனமுவந்து உடனடியாக உதவிக்கரம் நீட்டத் தயங்கக் கூடாது. எனினும், தொழில் ரீதியிலான உதவிகள் என்று வரும்போது, நம்மிடம் உதவி பெறுபவரால் உரிய காலத்தில் திருப்பித் தரக்கூடிய பின்புலம் இருக்கிறதா, நம்பகத்தன்மை மிக்கவரா என்பன உள்ளிட்ட அம்சங்களையும் ஆழமாகக் கவனிக்க வேண்டும்.
மனிதர்களுக்கு மனிதர் உதவி செய்வதும், உறுதுணையாக இருப்பதும் மட்டுமே நம்மால் பேரிடர்களை வெல்லக் கூடிய பேரன்பு ஆயுதம் என்பதை மறவாதீர்கள்.
பாதுகாப்பாக இருப்போம். கொரோனாவை வெல்வோம். மாற்றத்துக்குத் தயராவோம்.
கட்டுரை - ப்ரியன்