கொரோனா: தமிழகத்தில் முதல் பலி, தனிமைக் கண்காணிப்பில் 12 ஆயிரம் பேர்!
கொரோனாவிற்கு தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தனிமைக் கண்காணிப்பில் உள்ளனர். இதில் சுமார் 2,647 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஸ்டிக்கர்களை மாநகராட்சி ஒட்டியுள்ளது.
தமிழகத்தில் கோவிட்–19 வைரஸ் தனது கோரத்தாண்டவ ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து அரசு உத்தரவிட்ட நிலையில் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்களை அறிவித்தார் பிரதமர். மக்கள் உயிர் வாழத் தேவையான அத்தியாவசியத் தேவைகளான பால், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்டவை தங்குதடையின்றி கிடைக்கின்றன.
போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்வது தடுக்கப்பட்டுள்ளது. எனினும் சொந்த வாகனங்களில் பயணிப்போரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா நோய்க்கு 54 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்த வந்தவர்கள், அவர்கள் மூலமாகக் குடும்பத்தினருக்கு என தமிழகத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இவர்கள் சென்னை, மதுரை, ஈரோடு அரசு மருத்துவமனைகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
தாய்லாந்தில் இருந்து சுற்றுலா வந்திருந்தவர்களை வரவேற்று உபசரித்த 54 வயது கட்டிடத் தொழிலாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவருக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்ததால் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியான முதல் முதியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து தாய்லாந்தில் இருந்து வந்த 8 பேரில் யாருக்கேனும் கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா என்று பரிசோதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் தோப்பூர் அரசு காசநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 பேரும் மாலைப்பட்டி பள்ளிவாசலில் 4 நாட்கள் தங்கி இருந்ததாகவும், மார்ச் 31ம் தேதி அவர்கள் தாய்லாந்து நாட்டிற்கு திரும்பச் செல்ல இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இவர்கள் எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்த்தனர், யார் யாருடன் பேசினர் என்பன உள்ளிட்ட தகவல்களைத் திரட்டி முன்னெச்சரிக்கையாக அவர்களை கண்காணிக்கவும், தனிமைப்படுத்தவும் சுகாதாரத்துறையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் 965 பேர் வீட்டில் தனிமை கண்காணிப்பை முடித்திருக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிற்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மேலும் சென்னை திருவொற்றியூர், மணலி, மாதவரம், ராயபுரம், கோடம்பாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2,647 பேர் வீட்டில் தனிமை காண்காணிப்பில் உள்ளனர். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் விவரங்களை சென்னை மாநகராட்சி அவர்கள் வீட்டு முகப்பில் ஸ்டிக்கரில் விவரங்களுடன் ஒட்டியுள்ளது. மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்கும் வண்ணம் ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களில் எத்தனை நபர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர், அவர்கள் எத்தனை நாட்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விவரங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் வீட்டு கண்காணிப்பில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்றவர்களில் 26 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பை முடித்துள்ளனர். 44 பேர் தற்போது வீட்டு காண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர சென்னை வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை போன்றே தமிழகத்தின் பிற பகுதிகளில் சுமார் 12 ஆயிரத்து 567 பேர் தனிமை வீட்டுக் கண்காணிப்பில் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள், தனிமைபடுத்ததில் இருப்பவர்கள் வெளியே நடமாடக் கூடாது இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
தனிமைப்படுத்தலை அலட்சியம் செய்பவர்களைக் கருத்தில் கொண்டு அவர்கள் எத்தனை நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற தகவல்களுடன் கூடிய சீல் ஒன்றை அரசு பாதிக்கப்பட்டவர்களின் கைகளில் இட்டு வருகிறது.
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தலால் கண்காணிப்பில் இருந்த இருவர் தப்பியோடினர். தாய்லாந்தில் இருந்து திரும்பிய 695 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். கட்டுப்பாடுகளுடன் கையில் சீல் வைத்து கண்காணித்து வந்திருந்த நிலையில் இருவர் தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நோய் பாதித்தவர்கள் எளிதில் மற்றவர்களுக்கு இதை பரப்பி விட முடியும் என்பதாலேயே தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. தன்னலம் மட்டுமின்றி பொதுநலமும் கருதி அவர்கள் வீட்டிலேயே இருப்பது அவசியம், இதனை உணராமல் வெளியில் சுற்றித் திரிந்தால் அவர்கள் கைகளில் சீல் இருப்பதைக் கண்டால் மக்களே இது குறித்து தமிழக அரசின் கொரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கலாம்.
கட்டுரை தொகுப்பு : கஜலெட்சுமி