இந்தியாவின் கொரோனா பாதிப்பில் 44% இந்த 6 மாவட்டங்களில் மட்டுமே ஏற்பட்டது!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 429 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. இதில் முதன்மையாக இருக்கும் 6 மாவட்டங்கள் எவை தெரியுமா?
கொரோனா தொற்றால் இந்தியாவில் உயிரிழப்போர் விகிதம் தற்போது 3.1 சதவீதமாக உள்ளது என்றும், நோயிலிருந்து குணம் அடைவோர் எண்ணிக்கை 20% ஆக உள்ளது என்றும் மத்திய அரசு தெரிவிக்கிறது. இது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது பரவாயில்லை என்பதாகவே உள்ளது.
நாட்டில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது, தொகுப்பு மேலாண்மை மற்றும் நோய் பரவாமல் தடுப்பதற்கான உத்திகள் ஆகியவற்றால் இவ்வாறு நேர்மறை விளைவு ஏற்பட்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம்.
நாட்டில், கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இருமடங்காக அதிகரிப்பதற்கு, தற்போது சராசரியாக 9.1 நாட்கள் எடுக்கிறது.
இதுவரை 5602 பேர் இந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இது 20.66% சதவீதம் ஆகும். நேற்று முதல் புதிதாக 1429 பேர் கோவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 24 ஆயிரத்து 506 பேருக்கு கோவிட் 19 நோய் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் கொரோனா தொற்றின் மொத்த எண்ணிக்கை 429 மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அதில் டெல்லி, அஹமதாபாத், ஜெய்ப்பூர், ஹைதராபாத், இந்தூர், மும்பை, ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 44% தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் 11.6% தொற்று, அஹமதாபாத்தில் 7.7% தொற்று, இந்தூரில் 4.5% தொற்றும், மும்பையில் 13.8% தொற்று, ஜெய்ப்பூரில் 3.8% தொற்று, ஹைதராபாத்தில் 2.7% தொற்று கண்டறியபட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 62.4% தொற்று அஹமதாபாத்தில் கண்டறியப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 55.9% தொற்று ஹைதராபாத் மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் 54.6% தொற்று இந்தூரில் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரையில் இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 1.9% தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 23.2% தொற்று சென்னையில் கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் கோவையில் 8.2 சதவிகிதமும் திருப்பூரில் 6. 7 சதவிகிதமும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தகவல்: பிஐபி/ News18