இந்தியாவுக்கு கோவிட் கருவிகள், மருத்துவப் பொருட்கள், நன்கொடை வழங்கிய அலிபாபா அறக்கட்டளை!
அலிபாபா, மற்றும் ஜாக் மா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்களின் முதல் பகுதி இந்தியா வந்தடைந்தது. இதன் மதிப்பு எவ்வளது தெரியுமா?
ஜாக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை, கொரோனா பரவலை கட்டுப்படுத்த இந்தியா மற்றும் ஆறு நாடுகளுக்கு அத்தியாவசிய மருத்துவப் பொருட்கள், முகக்கவசங்கள், கோவிட்-19 சோதனைக் கருவிகள் ஆகியவற்றை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்தியா மற்றும் ஆறு நாடுகளுக்கு மொத்தமாக, 1.7 மில்லியன் முகக்கவங்கள், 1,65,000 பரிசோதனைக் கருவிகள், மருத்துவப் பொருட்கள், வென்டிலேட்டர்கள், தெர்மோமீட்டர் ஆகியவை அளிக்கப்படும் என இந்த அறக்கட்டளைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியா தவிர, அசர்பைஜான், பூட்டான், கஜகஸ்தான், கிரிக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்னாம் ஆகிய நாடுகள் இந்த உதவியை பெற உள்ளன.
இந்தியாவுக்கான பொருட்களின் முதல் பகுதி சனிக்கிழமை இரவு தில்லியை வந்தடைந்தது. இந்திய செஞ்சிலுவைச்சங்கம் அதை பெற்றுக்கொண்டது. இது, இந்த பொருட்களைத் தேவையான மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்யும். உதவி பொருட்களின் எஞ்சிய பகுதி வரும் நாட்களில் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு அறக்கட்டளைகளும், மருத்துவப் பொருட்களை 23 ஆசிய நாடுகளுக்கு வழங்கியுள்ளன.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் துணை செயலாளர் நீல் கமல், ஜாக் மா அறக்கட்டளை, அலிபாபா அறக்கட்டளை பிரதிநிதி அலிபாபா கிளவுட் இந்தியா மேலாளர் விவேக் சேகலிடம் இருந்து, சீன துணைத்தூதர் மா ஜியா முன்னிலையில் உதவிப் பொருட்களுக்கான ரசீதை பெற்றுக்கொண்டனர்.
"கோவிட்-19 தாக்குதலுக்கு எதிரான குடும்பங்களைக் காப்பதற்கான இந்த கடும் போராட்டத்தில் நாம் ஒரு உலக சமுதாயமாக நிற்கிறோம். மாற்றத்தை ஏற்படுத்த எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம். குறிப்பாக, மருத்துவப் பொருட்களை சேகரித்து, வழங்கும் பணியை செய்ய உறுதி கொண்டுள்ளோம்,” என்று அறக்கட்டளைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19 நெருக்கடியை எதிர்கொள்ள, மருத்துவப் பொருட்களை சேகரித்து, ஆசிய, வட அமெரிக்கா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி; பிடிஐ | தமிழில்: சைபர்சிம்மன்