கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ரத்தன் டாடா 500 கோடி ரூபாய் நன்கொடை!
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தேவை அதிகமுள்ள முக்கியத் தருணம் இது என்று ரத்தன் டாடா குறிப்பிட்டுள்ளார்.
கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளுக்காக தொழிலதிபர் ரத்தன் டாடா 500 கோடி நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தேவை அதிகமுள்ள முக்கியத் தருணம் இது என்று டாடா ட்ரஸ்ட் தலைவர் ரத்தன் டாடா சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
“கோவிட்-19 மனித இனம் சந்திக்கும் மிகவும் கடினமான சவால் ஆகும். இத்தகைய மோசமான காலகட்டத்தில் இதை எதிர்த்துப் போராடுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகிறது,” என்றார்.
பாதிக்கப்பட்ட அனைத்து சமூகங்களையும் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் டாடா ட்ரஸ்ட் ஐந்து முக்கிய பகுதிகளில் கவனம் செலுத்தி 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
- களப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள்
- அதிகரித்து வரும் நோயாளிகளின் சிகிச்சைக்காக சுவாசிக்க உதவும் உபகரணங்கள்
- தனிநபர் பரிசோதனைகளை அதிகரிக்க பரிசோதனைக் கருவிகள்
- தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நவீன சிகிச்சை வசதிகள்
- சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சியளித்தல் ஆகியவற்றிற்குப் பயன்படுத்தப்படும்.
இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இந்த வைரஸ் தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடியாக தீர்வுகாணவேண்டும் என்கிறார் ரத்தன் டாடா.
“இந்த சிக்கலான சூழலை எதிர்த்துப் போராட டாடா ட்ரஸ்ட், டாடா சன்ஸ், டாடா குழுமம் ஆகியவை உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்ட்னர்களுடனும் அரசாங்கத்துடனும் ஒருங்கிணைந்த பொது சுகாதார தளத்தில் ஒன்றிணைகிறது. இந்தத் தளமானது நலிந்த, பின் தங்கிய மக்களைச் சென்றடையத் தொடர்ந்து போராடும்,” என்றார்.
அவர் மேலும் கூறும்போது, “இந்த நோய் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் எங்களது நன்றியையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்றார்.
இந்தச் சூழலை எதிர்கொள்வதில் உதவ பல்வேறு இந்திய நிறுவனங்கள் முன் வந்துள்ளன.
கோவிட்-19 நோயை எதிர்த்து போராடுவதற்கு உதவ மஹாராஷ்டிரா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஆரம்பக்கட்டமாக 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்குதலை எதிர்த்துப் போராடுவதில் பங்களிக்கும் வகையில் 7,500 ரூபாய் மதிப்பிலான நவீன செயற்கை சுவாச கருவியை அறிமுகப்படுத்த உள்ளது. இதுபோன்ற கருவியின் விலை 10 லட்ச ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பஜாஜ் குழுமம் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராடும் நடவடிக்கைகளுக்காக 100 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. தினக்கூலிகள் மற்றும் வீடில்லாமல் தவிக்கும் குடும்பங்களுக்குத் தேவையான உணவு மற்றும் இருப்பிடம் வழங்குவதற்காக இந்தத் தொகையில் பெரும்பங்கு ஒதுக்கப்படுகிறது.
இதில் ஒரு பங்கு புனேவில்முக்கியச் சுகாதார பராமரிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும். அதாவது ஐசியூ-க்களை மேம்படுத்துவதற்கும் செயற்கை சுவாசக் கருவிகள், பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்கும் பரிசோதனைகளை மேம்படுத்துவதற்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் பகுதிகளை அமைப்பதற்கும் இந்தத் தொகையில் ஒரு பகுதி பயன்படுத்தப்படும்.
ஆங்கில கட்டுரையாளர்: ராஷி வர்ஷினி | தமிழில்: ஸ்ரீவித்யா