32 ஐரோப்பிய நாடுகள், துருக்கி, யூகே-வில் இருந்து மார்ச் 31 வரை பயணிகள் இந்தியா வர தடை!

கொரோனா வைரஸ் நோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31 வரை கட்டுப்பாடுகளும், தடைகளையும் அறிவித்துள்ளது இந்திய அரசு. அவை என்னென்ன?

17th Mar 2020
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close

கோவிட் -19 குறித்த அமைச்சர்களின் உயர்நிலைக் குழு கூட்டம் நிர்மாண் பவனில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ். பூரி, வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், உள்துறை இணை அமைச்சர் நித்யானந்தா ராய், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.


அமைச்சர்கள் குழுவின் இந்த ஏழாவது கூட்டத்தில், கோவிட் - 19 நோயைக் கட்டுப்படுத்துவது மற்றும் கையாள்வது தொடர்பான விஷயங்கள் பற்றி விரிவாகப் பேசப்பட்டது. விரிவான கலந்தாடலுக்குப் பிறகு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  பொது இடங்களில் தள்ளி இருத்தல் என்ற நடைமுறையை எப்படி பின்பற்ற வேண்டும் என்பது குறித்து யோசனைகள் தெரிவிக்கப்பட்டன.

Coronavirus

நாட்டில் கோவிட் - 19 நோயைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. மார்ச் 31 வரையில் அமலில் இருக்கக் கூடிய தற்காலிக நடவடிக்கையாக இது இருக்கும். முக்கியமான விஷயங்கள் பின்வருமாறு:

1.அனைத்துக் கல்வி நிலையங்கள் (பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளி்ட்டவை),  உடற்பயிற்சிக் கூடங்கள், அருங்காட்சியகங்கள், கலாச்சார மற்றும் சமூக மையங்கள்,  நீச்சல் குளங்கள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட வேண்டும். மாணவர்கள் வீடுகளில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட வேண்டும். ஆன்லைன் மூலமான கல்வியை ஊக்குவிக்க வேண்டும்.

2. அவசியமற்ற பயணங்கள் தவிர்க்கப்பட வேண்டும். பேருந்துகள்,  ரயில்கள்,  விமானங்களில் சமூக இடைவெளி பராமரித்தலின் அங்கமாக முறையாக கிருமிநாசினிகள் கொண்டு, மக்கள் கை வைக்கும் இடங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

3. தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் அலுவலர்களை வீடுகளில் இருந்தே பணியாற்றும் நடைமுறையை ஊக்குவிக்க வேண்டும்.

4. முடிந்த வரையில், கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்த வேண்டும். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள கூட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் அல்லது வேறு தேதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். அவசியம் இருந்தால் தவிர கூட்டம் நடத்த வேண்டாம்.

5. மக்கள் அடிக்கடி தொடக் கூடிய இடங்களை முறையாக அடிக்கடி சுத்தம் செய்வது மற்றும் கை கழுவுதல் நடைமுறைகளை உணவகங்கள் உறுதி செய்ய வேண்டும். டேபிள்களுக்கு இடையில் (குறைந்தபட்சம் 1 மீட்டர்) இடைவெளி பராமரிக்க வேண்டும்; வாய்ப்பிருந்தால் திறந்தவெளி இடங்களில், போதிய இடைவெளி விட்டு உணவருந்த ஏற்பாடு செய்து ஊக்குவிக்கலாம்.

6. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கூடுவதற்கு வாய்ப்புள்ள விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யும் உள்ளூர் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தி,  நிகழ்ச்சிகளைத் தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்ளலாம்.

7. அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கருத்துருவாக்கம் செய்யும் அந்தஸ்தில் இருப்பவர்கள் மற்றும் மதத் தலைவர்களை உள்ளூர் அதிகாரிகள் வலியுறுத்த வேண்டும். அதிகக் கூட்டம் சேராதிருத்தல் / ஒரு மீட்டர் இடைவெளியை பராமரித்தலை உறுதி செய்யும்படியும் அவர்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.

8. அத்தியாவசியச் சேவைகள் அளிக்கப்படும் சந்தைகள், பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள், தபால் நிலையங்கள் போன்ற இடங்களில் தகவல் தெரிவிக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று, உள்ளூர் வர்த்தகர் சங்கத்தினர் மற்றும் தொடர்புடையவர்களை உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக் கொள்வதுடன், வர்த்தக நேரத்தை மாற்றி அமைத்துக் கொள்வது, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொள்ளலாம்.

9. மக்களுக்கு தொடர்ச்சியாக, தகவல்களை தெரிவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

 

பயணத்துக்கான கூடுதல் அறிவுறுத்தல்: 

அதிக பாதிப்புள்ள பிராந்தியங்களில் இருந்து கோவிட் - 19 பரவாமல் தடுப்பதற்கு, பயணத்துக்கான கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப் பட்டுள்ளன.

  • ஐக்கிய அமீரகம், கத்தார், ஓமன், குவைத் நாடுகளில் இருந்தோ அல்லது அந்த நாடுகளின் வழியாகவோ பயணம் செய்து இந்தியாவுக்கு வருபவர்களைக் கட்டாயமாக தனிமைப்படுத்தி வைத்து சிகிச்சை அளிப்பதற்கான காலம் அதிகரிக்கப்படுகிறது. 2020 மார்ச் 18 ஆம் தேதி கிரீன்விச் நேரத்தின்படி 1200 மணியில் இருந்து இது அமலுக்கு வரும்.
  • ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள், ஐரோப்பிய தாராள வர்த்தகச் சங்க அமைப்பு பிராந்தியம், துருக்கி மற்றும் பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு பயணிகள் வருகைக்கு 2020 மார்ச் 18 ஆம் தேதியில் இருந்து தடை விதிக்கப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து 2020 மார்ச் 18 ஆம் தேதி கிரீன்விச் நேரம் 1200 மணியில் இருந்து, இந்தியாவுக்கு எந்த ஒரு பயணியையும் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் அழைத்து வரக்கூடாது. விமானம் புறப்படும் விமான நிலையத்தில் இருந்தே விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் இதை பின்பற்ற வேண்டும்.
  • இவை இரண்டுமே தற்காலிக நடவடிக்கைகள், 2020 மார்ச் 31 வரையில் அமலில் இருக்கும், அதன் பிறகு மறு ஆய்வு செய்யப்படும்.

 

ஈரானில் இருந்து வெளியேற்றி இந்தியாவுக்கு 4வது குழுவாக அழைத்து வரப்படும் 53 பேர் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் ஜெய்சல்மார் ராணுவ முகாமில் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் யாருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை என்றாலும், நடைமுறைகளின்படி அவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.


4 புதிய பாதிப்புகள் - ஒடிசா, ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் கேரளாவில் தலா 1 என - புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. இன்றைய நிலவரத்தின்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பு 114 பேருக்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமாக்கப்பட்ட 13 பேரும், உயிரிழந்த 2 பேரும் இதில் அடங்குவர். இவர்களுடன் தொடர்பு கொண்ட மற்றவர்களை பின்தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டதில் 5,200க்கும் மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருடைய உடல்நிலையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Want to make your startup journey smooth? YS Education brings a comprehensive Funding and Startup Course. Learn from India's top investors and entrepreneurs. Click here to know more.

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close