கொரோனா வைரஸ் தொற்றுதலைத் தவிர்க்க ‘சமூக விலகல்’ அவசியம்!
இந்தியாவிலும் கொரானோ: ‘சமூக விலகல்’ என்றால் என்ன? அலெர்ட்டாக இருக்க என்ன செய்யலாம்? சில ஆலோசனைகள்...
உலகையே அச்சுறுத்திய கொரானோ இந்தியாவிலும் நுழைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுவரை இந்திய அளவில் 70 பேர் வரை பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்வேறு மாநிலங்களில் கொரானோ அறிகுறியுடன் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நோயின் அச்சுறுத்தலால் இந்தியா மட்டுமன்றி உலகெங்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக கூடுவதைத் தவிர்க்க அரசு அறிவுறுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுதலை தடுப்பதற்காக உலகெங்கும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்த வைரல் பரவுவதை தடுக்க நோய் என்னவெல்லாம் செய்யலாம், செய்யக்கூடாது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டியது அத்தியாவசியமானதாகும்.
கொரோனா வைரஸ் தொற்றுதலை தவிர்க்க செய்யவேண்டியவை: ‘சமூக விலகல்’ (Social Distancing) எனப்படும் பிறரை விட்டு தள்ளி நிற்கும் முறையை கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு (WHO). இதன் கூற்றுப்படி,
உங்களுக்கும், இருமல் அல்லது தும்மல் உள்ள நபருக்கும் இடையே குறைந்தபட்சம் ஒரு மீட்டர் (அதாவது சுமார் 3 அடி) தூரத்தை பராமரிக்கும் படி அறிவுறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுக்க பின்பற்றப்படும் தடுப்பு நடவடிக்கையான இதுவே சமூக தூரமாகும். இதனையே அமெரிக்க சுகாதார நிறுவனம் குறைந்தது ஆறு அடி அல்லது இரண்டு மீட்டர் தூரமாக பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏனெனில் யாராவது இருமல் அல்லது தும்மும்போது அவர்களின் மூக்கு அல்லது வாயிலிருந்து வெளிப்படும் மிகச் சிறிய கண்ணுக்குத் தெரியாத திரவத் துளிகளை தெளிக்கிறார்கள், அதில் வைரஸ் இருக்கலாம். அது நீங்கள் மிகவும் நெருக்கமாக இருந்தால், அது உங்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாலே இந்த சோஷியல் டிஸ்டன்சிங் முறை பின்பற்றப்படுகிறது. கொரானோ நோயை பரப்பும் COVID-19 வைரஸ் இவ்வாறுதான் பரவுகிறது.
தற்போது உள்ள சூழலில் இந்நோய்க்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் இதனை கட்டுப்படுத்த ஓரே வழி, ஓர் மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாமல் தடுப்பதே தற்காலிகத் தீர்வாக உள்ளது. எனவே இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும்.
அதேபோல வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை உரிய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி பின்பே நாட்டுக்குள் அனுமதிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும், காய்ச்சல் சளி போன்ற உடல் உபாதைகள் இருப்பவர்கள் முடிந்தளவுக்கு வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நலம் பயக்கும். மேலும், வெளியிடங்களுக்குச் செல்லும்போது நோய்த் தொற்றிலிருந்து தப்பிக்க முகக் கவசங்களை அணிதல் பயனளிக்கும்.
கைகளை அவ்வப்போது பரிந்துரைக்கப்பட்ட கிருமிநாசிகளால் தூய்மைப்படுத்துதல். மேலும், தூய்மைப்படுத்தாத கைகளால் கண்கள், மூக்கு, வாய் போன்றவற்றை தொடாமல் இருத்தல், கைக்குலுக்குவதை தவிர்த்தல், மக்கள் அதிகக் கூட்டம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்தல் போன்றவையும் மிகச்சிறந்த நோய்த் தடுப்பு முறைகளாகும்.
சரியாக சமைக்காத இறைச்சியை உண்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இறைச்சியை முழுமையாக வேகவைத்த பின்னரே சாப்பிட வேண்டும். நல்ல பச்சைக் காய்கறிகளை மட்டுமே சமைத்து உண்பது பாதுகாப்பானதாகும்.
அதேபோல இறைச்சி வெட்டப்படும் இடங்கள், விலங்குகள் கொல்லப்படும் இடங்கள், விலங்கு பண்ணைகள் போன்ற இடங்களுக்குச் செல்வதை தவிர்க்கவேண்டும். ஏனெனில் சீனாவில் இறைச்சி கூடங்களில் இருந்தே மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவியதாக நம்பப்படுகிறது. இந்த வைரஸின் மூலம் எதுவென்று இன்றுவரை அடையாளம் காணப்படவில்லை. தற்போது இந்த நோய்க்கான தடுப்பு மருந்துகளும் ஏதும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.
இந்நோய் சீனாவின் வூஹான் நகரில் இருந்து தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சலும், தொடர்ந்து வறட்டு இருமலும் ஏற்பட்டு, இறுதியில் நுரையீரல் பாதிப்பேற்பட்டு மரணம் நிகழ்கிறது.
கொரானோ பீதி காரணமாக சாதாரண சளி, இருமல் காய்ச்சலைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை. அதே நேரத்தில் மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்வதும் மிகவும் அவசியம்.
கோடை காலத்தில் கடும் வெப்பம் நிலவும் நம் நாட்டில் இந்த வைரஸ் தாக்குபிடிக்காது என்பதால் நாம் சற்று தைரியமாகவே இருக்கலாம். ஏனினும் இந்திய அரசு ஏப்ரல் 15ஆம் தேதி வரை சுற்றுலா விசாவில் வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைவதை தடை செய்துள்ளது. வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் நாம் எப்போதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை.