ஆகஸ்ட் 15 முதல் கொரோனா தடுப்பூசி; 12 மருத்துவமனைகளில் மனிதப் பரிசோதனை!
தமிழகம் உட்பட 12 மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி ‘Covaxin’ ஜூலை 7க்கு பிறகு மனிதப் பரிசோதனை தொடங்க ICMR முடிவு.
இந்திய நிறுவனம் ‘பாரத் பயோடெக்’ வெற்றிகரமாக தயாரித்துள்ள ‘Covaxin' தடுப்பூசி வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அளவில் அறிமுகமாகும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்தின் மனிதப் பரிசோதனை இம்மாதம் முதல் நடைப்பெற்று வரும்.
ICMR மற்றும் NIV-ன் வழிகாட்டுதல்களுடன் பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் ‘Covaxin' தடுப்பூசியை தயாரிப்பின் முதல் கட்டத்தை வெற்றிகரமாக அடைந்து, இரண்டாம் கட்டமான மனிதப் பரிசோதனைக்கு தயார் நிலையில் இருப்பதாக அண்மையில் அறிவித்தது. அதன்படி, தேசிய மருந்தக ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது.
“இது இந்தியாவில் முற்றிலும் தயாரான முதல் உள்நாட்டு தடுப்பூசி ஆகும். இதுவே அரசின் தற்போதைய தலையாய பணியாகவும், மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் இதை கூர்ந்து கண்காணித்து வருகின்றனர்,” என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இந்தத் தடுப்பூசி மருந்தின் மனிதப் பரிசோதனை இம்மாதம் தொடங்கி, அதில் திருப்திகரமான முடிவுகள் வந்த பின்னரே இதற்கு உரிய அனுமதி வழங்கப்படும்.
“மனிதப் பரிசோதனை வெற்றிகரமாக முடிந்துவிட்டால், வரும் ஆகஸ்ட் 15, கோவிட்-19 தடுப்பூசி இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படும். பாரத் பயோடெக் இந்த தேதியை மனதில் கொண்டு வேகமாக செயல்பட்டு வருகிறது. எனினும் மனிதப் பரிசோதனையில் ஈடுபடும் அனைவரின் ஒத்துழைப்பைப் பொறுத்தே இதன் முடிவுகள் அமையும்,” என ஐசிஎம்ஆர் இயக்குனர் தடுப்பூசியை அனுப்பிவைத்த மருத்துவமனைகளுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் 12 மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி ‘Covaxin'-ன் மனிதப் பரிசோதனைக்காக தேர்ந்தெடுத்துள்ளது ICMR.
மருத்துவப் பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், காட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ளன.
“தற்போது கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள அவசர மருத்துவ நிலையை கருத்தில் கொண்டு, இந்த தடுப்பூசியை கூடிய விரைவில் அறிமுகம் செய்யவே முயற்சிக்கிறோம். அதனால் இதற்குத் தேவையான அனுமதிகளை விரைவாக செய்து, வரும் ஜூலை 7ம் தேதிக்குள் மனிதப் பரிசோதனைக்கான நடவடிக்கைகள் தயார் நிலையில் இருக்க கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளதாகவும்,” அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICMR மனிதப் பரிசோதனையை வேகப்படுத்த கேட்டுக்கொண்டதை ரஜினிகாந்த் ஸ்ரீவஸ்தவா உறுதி படுத்தியுள்ளார். மலையாள மனோராமா இடம் பேசிய பாரத் பயோடெக் இணை நிறுவனர் சுசித்ரா எல்லா,
“ஆரம்பக்கட்ட பணிகள் முடிவடைந்து விட்டன. ஜூலை மத்தியில் கோவிட் தடுப்பூசி மருந்துக்கான மனிதப் பரிசோதனை 3 மாதங்களுக்குள் முடிவடையும் என எதிர்ப்பார்ப்பதாக,” கூறினார்.
2021 தொடக்கம் முதல் இந்த தடுப்பூசி சந்தையில் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.