ஜூலை முதல் மனித பரிசோதனை: இந்தியாவின் முதல் கோவிட் தடுப்பூசி ‘COVAXIN'
பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத் நிறுவனம் நடத்திய முதல் கட்ட ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில், மனித பரிசோதனைக்கான அனுமதியை அரசு அளித்துள்ளது.
கொரோனாவை எதிர்த்த போராட்டத்தில், உலகமெங்கும் அதற்கான மருந்து, தடுப்பூசி என பலரும் பலமுனைகளில் தீர்வு காண முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஹைதராபாதைச் சேர்ந்த ‘பாரத் பயோடெக்’ 'COVAXIN' என்ற முதல் கோவிட்-19 தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளனர். இதுவே இந்தியாவில் உருவாக்கப்படும் முதல் கொரோனா தடுப்பூசி ஆகும்.
பாரத் பயோடெக், ஐசிஎம்ஆர், தேசிய வைரலாஜி மையம் (NIV) ஆகியோருடன் இணைந்து இந்த தடுப்பூசி மருந்தை தயாரித்துள்ளனர். SARS-CoV-2-வின் சேகரிக்கப்பட்ட, இழைகள் NIV பூனேவில் இருந்து பாரத் பயோடெக் ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அதில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் பயனாக, அந்நிறுவனம் தடுப்பூசி ஒன்றை ஜெனோம் வேலி ஹைதராபாத்தில் உள்ள அதிநவீன தனிமைப்படுத்தப்பட்ட நிறுவன லேபில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்திய மருந்தக , மத்திய சுகாதார அமைச்சகம் இதற்கான முதல் கட்டத்துக்கு அனுமதி அளித்து, தற்போது இரண்டாம் கட்டமான மனிதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் அளித்த முதல் கட்ட ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையிலும், அதில் காட்டப்பட்ட பாதுகாப்பு முடிவுகளின்படியும் மனித பரிசோதனைக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மனிதப் பரிசோதனை இந்தியா முழுவதும் ஜூலை முதல் தொடங்கும் என்று பாரத் பயோடெக் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் Dr.கிருஷ்ண எல்லா தெரிவித்துள்ளார்.
“ஐசிஎம்ஆர் மற்றும் NIV-ன் ஒத்துழைப்புடன் இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம். CDSCO-வின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன் இந்த ஆராய்ச்சியை நடத்தியுள்ளோம். இதற்காக ஓய்வின்றி உழைத்து புதிய தொழில்நுட்ப யுக்திகளை பயன்படுத்தி ஆய்வினை முடித்துள்ளோம்,” என்றார்.
தேசிய ஒழுங்குமுறை நெறிமுறைகளின் அடிப்படையில், நிறுவனம் தங்களது மருத்துவ ஆய்வுகளின் முதல் கட்டத்தை முடித்துள்ளது. இதில் பெறப்பட்ட முடிவுகள் நம்பிக்கை அளிப்பதாகவும், தகுந்த பாதுகாப்பு முறைகளுடன் சிறந்த பலனை அளிப்பதாகவும் அமைந்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத் பயோடெக் நிர்வாக இயக்குனர் சுசித்ரா எல்லா இதுபற்றி கூறுகையில்,
“நாங்கள் ஏற்கனவே நடத்திக் கொண்டிருந்த ஆராய்ச்சி மற்றும் தொற்றுக்கள் பற்றிய ஆய்வின் பலனாக இன்று இந்த H1N1 பாண்டமிக்குக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்க வழி செய்துள்ளது. எங்களது நிறுவனத்தின் BSL-3 கட்டுப்படுத்தப்பட்ட லேபில் இதற்காக பிரத்யேகமாக ஆய்வுகளும், மருந்து உருவாக்குதலும் நடைப்பெற்றது,” என்றார்.
இதற்கு முன்னர் பாரத் பயோடெக், வெரோ செல் கல்ச்சர் என்ற தொழில்நுட்ப தளத்தை உருவாக்கி, அதன் மூலம் போலியோ, ரேபீஸ், ரோட்டாவைரஸ், ஜப்பானீஸ் என்செபலிடிஸ், சிக்கன்குன்யா மற்றும் ஜிக்கா போன்ற தொற்றுக்களுக்கு பல தடுப்பூசிகளை தயாரித்துள்ளது.
இதனிடையே கோவிட்-19 தடுப்பூசி உருவாக்குவதில் மற்ற இந்திய நிறுவனங்களான Zydus Cadila, Serum Institute of India, மற்
றும் Panacea Biotec பணிகள் செய்துவருகிறது.