‘முன்பிருந்த இயல்பு வாழ்கைக்கு நாம் திரும்புவது சந்தேகம்’ - சுந்தர் பிச்சை
முழுநேரம் வீட்டில் இருந்து எல்லா ஊழியர்களும் பணிபுரிவது தங்கள் நிறுவனத்துக்கு சாத்தியப்படாது என்றும் தெரிவித்துள்ளர் பிச்சை.
கொரோனா வைரஸ் சற்றும் குறையாமல் தொடர்ந்து பரவி வருகிறது. புதிய வைரஸ் என்பதால் இதன் போக்கைத் தீர்மானிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இதற்கான மருந்தும் தடுப்பூசியும் கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
இருப்பினும் இது உடனடியாக சாத்தியப்படாது என்பதால் நாம் கொரோனா வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ளவேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
இன்று பெரும்பாலான நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிந்து வரும் சூழலில் இந்த நிலை எத்தனை காலம் நீடிக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. சில தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் ஆண்டு இறுதி வரையிலும் வீட்டிலிருந்து பணிபுரியலாம் என்று பரிந்துரை செய்துள்ளது. இந்தச் சூழலில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இது குறித்து The Wired-க்கு பேட்டியளித்துள்ளார்.
“கொரோனா நோய் தொற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நமது கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு இருக்கும் என்பதை நாங்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்தோம். உடனே எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தினோம்,” என்று சுந்தர் பிச்சை குறிப்பிட்டுள்ளார்.
“கொரோனா தொற்று ஏற்படுவதற்கு முன்பிருந்த இயல்பு வாழ்கைக்கு நம்மால் மீண்டும் ஒரு போதும் செல்லமுடியாது என்று நினைக்கிறேன்,” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தியுள்ள இதே வேளையில், கூகுள் தன் ஊழியர்கள் வொர்க் ஃப்ரம் ஹோம் செய்வது பற்றி பகிர்ந்த சுந்தர் பிச்சை,
“முழுநேரம் வீட்டில் இருந்து எல்லா ஊழியர்களும் பணிபுரிவது எங்கள் நிறுவனத்துக்கு சாத்தியப்படாது. இருப்பினும் இச்சமயத்தில் வொர்க் ஃபர்ம் ஹோம் சூழலில் சமாளித்து வருகிறோம்,” என்றார்.
கூகுள் நிறுவனத்தின் புதிய கட்டுமானப் பணிகள் குறித்தும் புதுப்பிக்கும் பணிகள் குறித்தும் கேள்வியெழுப்பபட்டபோது ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருகை தந்து ஒருவரோடொருவர் நேரடியாக கலந்துரையாடுவதன் முக்கியத்துவத்தை சுந்தர் பிச்சை வலியுறுத்தினார்.
“சூழல் எப்படிப்பட்டதாக அமைந்தாலும் ஊழியர்கள் நேரடியாக ஒருவரை ஒருவர் சந்தித்து ஒன்றிணைவது மிக அவசியம். வருங்காலத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் வகுத்துள்ளோம். சில மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படும் என்று திடமாக நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து பேசிய அவர், கூகுள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த திட்டங்கள் இச்சூழலால பாதிக்கப்பட்டாது என்றும், அவை உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை.
தகவல் உதவி: The wired