15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி: முன்பதிவு செய்வது எப்படி?
இந்தியாவில் 15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டு வர உள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாவும், ஜனவரி 1 முதல் கோவின் தளத்தில் தொடங்குவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
இந்தியாவில் 15-18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டு வர உள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாவும், ஜனவரி 1 முதல் Cowin தளத்தில் தொடங்குவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் விதமாக மக்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 29 லட்சத்து 93 ஆயிரத்து 283 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 141.70 கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதேபோல், இன்றைய நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 148.37 கோடிக்கும் மேற்பட்ட (1,48,37,98,635) தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கியுள்ளது. ஒருபுறம் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்தி வரும் அதே நேரத்தில், மற்றொருபுறம் கோவிட் 19ன் தொற்றின் உருமாறிய ஒமிக்ரான் தொற்று இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது.
டெல்லி, மகாரஷ்ட்ரா, கேரளா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 19 மாநிலங்களில் 578 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்/ அதிகபட்சமாக டெல்லியில் 142 பேருக்கும், மகாராஷ்ட்ராவில் 141 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இப்படித் தீயாய் பரவி வரும் ஒமைக்ரான் தொற்றைக் கட்டுக்குள் கொண்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு, இரவு நேர ஊரடங்கு, கொண்டாட்டங்களுக்குத் தடை உள்ளிட்ட பல்வேறு விதமான நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 15 - 18 வயது சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
15-18 வயதுக்குட்பட்ட சிறார்கள் கொரோனா தடுப்பூசி:
கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், இணை நோய் பிரச்சனை உள்ளவர்கள் என பல தரப்பினருக்கும் மருத்துவர்கள் ஆலோசனையுடன் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தனித்தனியே மாநிலம் தோறும் சிறப்பு முகாம்களையும் அந்தந்த மாநில அரசுகள் நடத்தி வருகின்றன. தற்போது ஒமைக்ரான் பரவல் தீவிரமடைந்து வருவதால் சிறுவர்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில்,
15 முதல் 18 வயது பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி 3ம் தேதியும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 10ம் தேதி முதல் தொடங்கும் எனவும் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த CoWIN போர்டலின் தலைவர், மருத்துவர் ஆர்.எஸ்.சர்மா கூறுகையில்,
“தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பமுள்ள 15 முதல் 18 வயது வரையிலான சிறுவர்கள் ஜனவரி 1ம் தேதி முதல் CoWIN தளத்தில் முன்பதி செய்துகொள்ளலாம். பெரியவர்களைப் போல் சிறுவர்களிடம் ஆதார் கார்டு போன்ற முறையான ஆவணங்கள் இருக்காது என்பதால், அவர்கள் 10ம் வகுப்பு அடையாள அட்டையைக் கொண்டு CoWIN தளத்தில் முன்பதிவு செய்யலாம். இதன் மூலம் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நாள், நேரம், இடம் போன்ற விவரங்களை அறிந்து கொள்ளலாம்,” எனத் தெரிவித்துள்ளார்.
சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏன்?
முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ள தகவலின் படி 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் எனக்கூறப்படுகிறது.
லண்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2லட்சத்து 50 ஆயிரம் சிறார்களை வைத்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில் 12 முதல் 17 வயதுள்ள குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சில குழந்தைகள் முதல் வாரத்திலும், பல குழந்தைகள் 4 வாரங்கள் வரையிலும் சிகிச்சை பெற்ற பின்னரே பூரண குணமடைந்ததும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இந்த குழந்தைகள் தொற்றிலிருந்து மீண்ட பிறகும் உடல் சோர்வு, தலைவலி போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதும் ஆய்வின் முடிவில் அதிர்ச்சிகரமான தகவலாக வெளியாகியுள்ளது. எனவே தான் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது கட்டாயம் என்ற முடிவை பெரும்பாலான நாடுகள் எடுத்து வருகின்றன.
ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம், செக் குடியரசு, சீனா, இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி வரும் நிலையில், இந்தியாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
CoWin தளத்தில் பதிவு செய்வது எப்படி?
பெரியவர்களுக்கு பதிவு செய்ததை போலவே 15 வயது முதல் 18 வயதான சிறார்களுக்கும் கோவின் தளத்தில் தடுப்பூசி செலுத்த பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை பொறுத்தவரை மட்டுமே ஆதார், பான் கார்டு போன்றவற்றிற்கு பதிலாக 10ம் வகுப்பு ஐ.டி.கார்டை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம் என்ற மாற்றம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதன்படி,
1. கோவின் தளத்திற்குள் உள்நுழைந்ததுமே முகப்பு பக்கத்தில் உங்களுடைய மொபைல் எண்ணை உள்ளீடு செய்து, OTP பட்டனை கிளிக் செய்ததுமே, உங்கள் மொமைபல் போனுக்கு 6 இலக்கத்தில் ஒரு OTP எண் வரும்.
2. அதன் பின்னர், கோவின் போர்டலில் OTP சரிபார்க்கும் திரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள், அங்கு 6 இலக்க OTP எண்ணை அதில் உள்ளிட்டு, சரிபார்க்கவும் என்னும் பட்டனை அழுத்தவும். அங்கு OTP சரிபார்க்கப்பட்டதும், வரவேற்பு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
3. அதில் ‘பயனாளர்களை பதிவு செய்க’ (Register) என்பதை கிளிக் செய்தால், நீங்கள் முன்பதிவு திரைக்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
4.அங்கு ட்ராப் டவுன் மெனுவில் 10ம் வகுப்பு அடையாள அட்டையை தேர்வு செய்ய வேண்டும். (இதுவே பெரியவர்கள் என்றால் பதிவுசெய்ய விரும்பும் ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டையைத் தேர்ந்தெடுக்கும் வசதி இருக்கும்).
5. அதனைத் தொடர்ந்து உங்கள் பெயர், பாலினம், பிறந்த வருடம் ஆகியவற்றை, உங்களின் அடையாள அட்டையில் உள்ளதைப்போலவே உள்ளிடவும்
6.அனைத்து தகவல்களையும் முறையாக பதிவு செய்துவிட்டீர்கள் என்றால் Register என்ற பட்டனை தட்டுங்கள்.
7.ஷெட்யூல் என்னும் பட்டனை அழுத்தி, இப்போது ”Schedule Now” என திரையில் தோன்றும் பொத்தான் மீது க்ளிக் செய்யவும்.
8.அதன்பிறகு திரையின் கீழ் தோன்றும், இப்போது திட்டமிடவும் என்னும் பட்டனைக் க்ளிக் செய்யவும்.
9. இப்போது ஷெட்யூல் என்று திரையில் தோன்றும் பாப்-அப்பைக் க்ளிக் செய்ததும், தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் திரைக்கு அழைத்துச்செல்லப்படுவீர்கள்.
10. அங்கு உங்களுடைய பகுதியில் அமைந்துள்ள தடுப்பூசி மையத்தை பின்கோடு மூலம் தேடலாம். குறிப்பிட்ட தடுப்பூசி மையத்தை தேர்வு செய்த பின்னர், உங்களுக்கு வசதியான நேரத்தை தேர்வு செய்யலாம்.
11. நேரத்தை தேர்வு செய்து முடிந்ததும், உறுதிப்படுத்தும் பட்டனைக் க்ளிக் செய்யவும். உடனடியாக உங்களது செல்போனுக்கு உங்கள் தடுப்பூசி முன்பதிவு வெற்றிகரமாக பதிவுசெய்யப்பட்டது என்ற மெசெஜ் வரும்.
12. தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக மாணவர்கள் செல்லும் போது 10ம் வகுப்பு அடையாள அட்டையையும் கையில் எடுத்துச் செல்வது கட்டாயம் ஆகும்.