இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள சென்னையில் உருவான நிறுவனம் 'Rapid Response’
இயற்கை பேரிடர்கள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். இந்திய சூழலில் நிலைமையை எதிர்கொள்ள நிதி மற்றும் வசதிகள் மட்டும் இருந்தால் போதாது. ஒரு முறையான திட்டமும் பேரழிவை சமாளிக்க தயார்நிலையில் இருப்பதும் அவசியம்.
நாட்டை பாதுகாப்பான இடமாகவும், பேரிடர்களை தாக்குப்பிடிக்கும் இடமாகவும் மாற்றுவதற்காக சென்னையைச் சேர்ந்த 35 வயதான மொஹமத் ஃபரூக் ‘ரேபிட் ரெஸ்பான்ஸ்’ ’Rapid Response’ எனும் நிறுவனத்தை நிறுவியுள்ளார். இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியான பயனுள்ள நிவாரணம் வழங்கப் போராடுகிறது இந்நிறுவனம்.
இயற்கை பேரழிவிற்கு ஒரு உடனடி எதிர்செயல்
படித்துமுடித்து UK வில் ஒரு லாப நோக்கமற்ற துறையில் ஏழு வருடங்கள் பணியாற்றிய ஃபரூக் இந்தியாவிற்கு திரும்பி அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு புதுமையான லாப நோக்கமற்ற நிறுவனத்தை நிறுவ முடிவெடுத்தார்.
நாட்டில் பருவநிலை மாற்றம் காரணமாக இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருவதை நன்கறிந்ததால் ஃபரூக் அவசரகால நடவடிக்கைகளில் கவனம் செலுத்த திட்டமிட்டார். 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட நாட்டில், பல்வேறு இடர்களால் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில் அவரச காலங்களை எதிர்கொள்ளத் தேவையான நிபுணத்துவம் நம்மிடையே இல்லை. இதன் காரணமாக 2013-ல் உருவாக்கப்பட்டதுதான் ரேபிட்ரெஸ்பான்ஸ். அப்போதிலிருந்து இந்தியாவில் ஏற்படும் மிகப் பெரிய நெருக்கடி நிலைகளுக்கு உதவி புரிகிறோம்” என்கிறார் ஃபரூக். அவசரகால நிவாரணங்களில் ஏன் கவனம் செலுத்த விரும்பினார் என்கிற கேள்விக்கு ஃபரூக் பதிலளிக்கையில்,
“நம் நாட்டில் இதற்கான தேவையைத் தாண்டி பேரிடர்களுக்கு எதிராக செயல்படுவதில் எனக்கு அதீத ஆர்வம் இருக்கிறது. 2004-ம் ஆண்டு சுனாமியின்போது தமிழகத்திலுள்ள அடிமட்ட அரசுசாரா நிறுவனங்களுக்காக தன்னார்வலராக தீவிர ஈடுபாட்டுடன் UK-வில் நிதியை உயர்த்தினேன். பேரிடர் மேலாண்மையில் கவனம் செலுத்துவதற்கு அதுதான் ஆரம்பப்புள்ளியாக அமைந்தது.”
அவரது அதீத ஆர்வத்துடன் பேரிடரை சமாளிப்பதற்கான ஒரு தொண்டு நிறுவனத்தின் தேவையும் ஒன்றிணைந்ததால் ரேபிட் ரெஸ்பான்ஸ் உருவாக்கப்பட்டது. ஃபில்லிஃபைன்ஸ் நாட்டின் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் ரீகன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ஜப்பானின் ரிட்சுமைகான் பல்கலைக்கழகம் போன்றவை ஃபரூக்கை தேர்ந்தெடுத்து பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சியளித்தனர்.
நாடு முழுவதும் அதிக பேரழிவிற்கு உள்ளான பகுதிகளில் இந்நிறுவனம் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. உத்தர்காண்ட் வெள்ள நிவாரணம் 2013, ஜம்மு-காஷ்மீர் வெள்ள நிவாரணம் 2014, சென்னை வெள்ள நிவாரணம் மற்றும் மறுவாழ்வு 2015, மராத்வாடா வறட்சி நிவாரணம் 2016, அசாம் வெள்ள நிவாரணம் 2016 மற்றும் பிஹார் வெள்ள நிவாரணம் உள்ளிட்டவை இந்நிறுவனம் செயல்பட்ட நிவாரணபணிகளில் சில.
இயற்கை பேரழிவிற்கு எதிர்செயலாற்றுவது மட்டுமன்றி இந்தியாவிலுள்ள பாதிக்கப்பட்ட சமூகத்தினர் பலருக்கும் பேரிடர்களை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பதற்காக பல்வேறு திட்டங்களை நடத்துகிறது. சமூகம் நிர்வகிக்கும் பேரழிவு இடர்குறைப்பு திட்டம், விரிவான பள்ளி பாதுகாப்பு திட்டம், எஸ்எம்எஸ் சார்ந்த பேரழிவு தயார்நிலை மற்றும் ஆரம்ப எச்சரிக்கை அமைப்பு போன்ற திட்டங்களை நடத்திவருகிறது.
போர்வை திட்டம் (Blanket Project)
செப்டம்பர் மாதம் 2014-ல் ஜம்மு காஷ்மீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நிவாரணப் பணிகளுக்காக ’ரேபிட்ரெஸ்பான்ஸ்’ ஜம்மு காஷ்மீர் நோக்கி விரைந்தது. அந்த நேரத்தில் ஃபரூக்கும் அவரது குழுவினரும் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை உணர்ந்தனர். பொருட்களின தேவைகளைத் தாண்டி பாதிக்கப்பட்டவர்கள் இரவு தூக்கத்தைக்கூட தொலைக்கவேண்டிய சூழல் நிலவியது. இது குறித்துஃபரூக் கூறுகையில்,
”நானும் என் குழுவினரும் ஸ்ரீநகரை அடைந்தபோது வெள்ளத்தால் நகரம் முழுவதும் மின்சார சேவை பாதிக்கப்பட்டிருந்ததை அறிந்தோம். ஹோட்டலில் மின்சாரமின்றி மிகுந்த சிரமத்தை உணர்ந்தோம். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும், வயதானவர்களும் போர்த்திக்கொள்ள போர்வைகூட இல்லாமல் வீதிகளில் படுத்துக் கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது. இந்தக் காட்சி எங்கள் நெஞ்சை உலுக்கியது.”
இதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்கிற முடிவில் ஸ்ரீநகரிலிருந்து புறப்பட்டனர். இடம் பெயர்தல், தங்குமிடமின்மை, நகரின் வெப்பநிலை குறியீடு ஆகியவை குறித்து குழுவினர் விரிவான ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின் ஆறு இந்திய நகரங்களில் போர்வை திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அவர்களின் தன்னார்வ குழுக்களையும், நிதி வாய்ப்புகளையும் கருத்தில் கொண்டு டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், லக்னவ், ஸ்ரீநகர், கௌஹாத்தி ஆகிய ஆறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதுவரை இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளில் தங்குமிடமின்றி தவித்த 3454 பேருக்கு 3454 போர்வைகளை வழங்கியுள்ளது. மேலும் ரேபிட் ரெஸ்பான்ஸின் மற்ற திட்டங்களும் நிவாரணப் பணிகளும் நாட்டின் மற்ற மாநிலங்களில் விரிவடைந்து வருகிறது.
”பல்வேறு திறன் கொண்ட இளம் திறமைகளை தேடி வருகிறோம். மாற்றத்தை ஏற்படுத்தவும் இக்கட்டில் இருப்பவர்களுக்கு உதவவும் எங்களிடம் பல சிறந்த வாய்ப்புகள் உள்ளன,” என கூறி விடைப் பெற்றார்.
ஆங்கில கட்டுரையாளர் : ஹேமா வைஷ்ணவி