'கருப்பட்டி கடலைமிட்டாய்' தொழிலில் கலக்கும் பொறியியல் பட்டதாரி!
முதற்கடியில் “கடக்” என ஒரு சத்தம், உள்ளங்கையில் கொஞ்சம் இனிப்பு பிசுக்கு, ஒருமுறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் சுவை... நிலக்கடலையையும், கருப்பட்டியையும் சேர்த்து பதமாக செய்யக்கூடிய ஒரு சிறிய உலக உருண்டை அது….!

எங்கேயோ பார்த்தும், கேட்டும், சுவைத்தும் உணர்ந்ததை போன்ற நினைவு வருகிறதா? இது விடுகதை அல்ல, மறக்கப்பட்ட தமிழ் கலாச்சார தின்பண்டமான “கருப்பட்டி கடலைமிட்டாய்” பற்றி தான் சொல்கிறேன்.
இதைச் சாப்பிட்டால் என் சிறுவயது நாட்கள் நினைவிற்கு வருகிறது என, இன்றும் பலர் விரும்பி மகிழ்ந்து உண்ணக்கூடிய கருப்பட்டி கடலை மிட்டாயை தயாரிக்கும் “மதர்வே” Motherway, நிறுவனத்தின் நிறுவனர், ஸ்டாலின் அவர்களுடன் தமிழ் யுவர்ஸ்டோரி நடத்திய சுவையான உரையாடல் இதோ.
மதர்வே நிறுவனம் தொடங்கிய கதை
விருதுநகர் மாவட்டம், காரியப்பட்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான ஸ்டாலின், ஒரு பொறியியல் பட்டதாரி. பொறியியல் படிப்பில் பெரிதும் ஆர்வம் இல்லை என்றாலும் பெற்றோரின் ஆசைக்கிணங்க கல்வி ஆண்டை வெற்றிகரமாக கடந்த ஸ்டாலின், சில ஆண்டுகள் எம்பெடிங் துறையில் பணிபுரிந்து, பின்னர் மின்சார இருசக்கர வாகனத்தின் ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தன் அனுபத்தை வளர்த்துக் கொண்டார்.
இயந்திர வாழ்க்கையில், மிகுந்த இன்னல்கள் ஏற்பட்டு அதன் தாக்கத்தால் ஒரு கட்டத்தில் ஸ்டாலின் பொறியியல் சார்ந்த பணியில் இருந்து வெளியேறினார்.

சிறுவயதில் இருந்தே கூட்டு மனப்பான்மையுடன் வளர்ந்த ஸ்டாலின், சமுதாய நற்பணியில் ஆர்வமிக்கவர். தன் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து குழந்தைகள் மற்றும் அனைத்து வயதினருக்கு உதவும் பல நல்ல புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் “Cuckoo” என்றும் குழந்தைகள் வேலியை நடத்தி வருகிறார். நம்மாழ்வரின் சீடர்களில் ஒருவரான ஸ்டாலின், மூன்று ஆண்டுகள் அவரின் நிழலில் வளர்ந்து வந்தார்.
“நஞ்சில்லாத உணவு, சுவரில்லாக் கல்வி, மருந்தில்லா மருத்துவம்” ஆகிய நம்மாழ்வரின் மூன்று முக்கிய வழிமுறையை பின்பற்றும் வண்ணம் நாடகக்கலை, கலாச்சாரம், ஆரோக்கியமான உணவு முறை, நல்லொழுக்கம் ஆகிய நல்வாழ்க்கையின் அறநெறிகளை குக்கூ இல்லத்தில் கற்பித்து வருகிறார்.
குழந்தைகள் இன்று உட்கொள்ளும் பல தின்பண்டங்கள் ஆரோக்கியமற்றது. அவை பலவும் கவர்ச்சியான விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு வருபவை என்பதை கூர்ந்து ஆராயத் தொடங்கிய ஸ்டாலின், தன் குழந்தை பருவத்தில், தான் வளர்ந்த சூழலை சற்று நினைவுக் கூறினார்.
“பள்ளிக்கூட வாசலில் அன்று மரத்தடியில் பாட்டி ஒருவர் மாங்காய், புளிப்பு மிட்டாய், தேன்மிட்டாய், கடலை மிட்டாய் போன்ற தின்பண்டங்கள் விற்று வருவார். சில சில்லரைகள் கொடுத்து அதையே வாங்கி சாப்பிட்டு நாங்கள் வளர்ந்தோம். ஆனால் இன்றைய குழந்தைகள் ரசாயன சாக்குலேட், பிஸ்கட் போன்றவை சாப்பிட்டு ஆரோக்கியமின்றி வளர்ந்து வருகின்றனர். அன்றைய உணவு கலாச்சாரம் எங்கே போனது அவை அனைத்தும் மீண்டும் நினைவிற்கு கொண்டு வரவேண்டும்" என்று நான் எண்ணினேன்.
தாத்தா, பாட்டி என, பலரிடம் இதைப்பற்றி நானும் என் நண்பர்களும் பேசினோம், கருப்பட்டியின் நன்மை பலவற்றை பற்றியும் தெரிந்து கொண்டோம், இதுவே கருப்பட்டி கடலை மிட்டாய் நாங்கள் தயாரிப்பதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தாய்வழி உணர்வு இருக்க வேண்டும் என்பதால் இதற்கு “மதர்வே” என பெயர் சூட்டினோம்”
சிக்கல்கள் பல சந்தித்தோம்
ஆரம்பத்தில், “இன்ஜினியரிங் படித்துவிட்டு ஏன் இந்த தொழிலை செய்கிறாய்?” என பலர் கேள்வி எழுப்பியும், இயற்கை முறை ஆரோக்கிய உணவு தயாரிக்க வேண்டும், அதை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேரக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன் என்கிறார் ஸ்டாலின்.
தொடங்கிய சில காலங்களில் கருப்பட்டி கடலைமிட்டாயின் உண்மையான சுவை கிடைப்பதற்காக பெறும் பாடு பட்டோம். அதனால் நிறைய உணவுப் பொருட்கள் சரியான சுவை கிடைக்காததால் வீணாக்கப்பட்டது.
எங்கள் குடும்ப நபர்கள் நான்கு பேர் மட்டுமே முதலில் ஒன்று கூடி இத்தொழிலை ஆரம்பித்ததால் வேலை ஆட்களுக்கு தேவை ஏற்படவில்லை. பின்னர் சில நாட்கள் கழிந்து அதிக அளவில் வரவேற்பும் ஆர்டரும் கிடைத்ததால் தயாரிப்பும், வேலை பலுவும் அதிகரித்தது. அதனால் உதவிக்கு எங்கள் உறவினர்களையே பயன்படுத்திக் கொண்டோம். அவர்கள் செய்யும் வேலைக்கு சரியான சம்பளமும் கொடுக்கப்பட்டது. “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்பதும் இதில் நன்கு உணரமுடிந்தது, என்கிறார்.
பெரியளவில் கடலை மிட்டாய் வியாபாரம் செய்யும் சில தனியார் நிறுவனங்கள், 'மதர்வே'யின் வளர்ச்சியைக் கண்டு, எங்கள் தொழிலை கைப்பற்றிக்கொள்ள விலைபேசினார்கள். ஆனால் அவை எதற்கும் நாங்கள் தலை சாய்க்கவில்லை என பெருமிதமாக கூறும் ஸ்டாலின்,
"சமூக வலைதளங்கள் மூலம் கருப்பட்டி கடலை மிட்டாய்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது, வெளிநாட்டினர் பலர் எங்களை அணுகி கருப்பட்டி கடலைமிட்டாயினை மொத்தமாக ஆர்டர் செய்யத் தொடங்கினர். அதனால் நல்ல வருமானம் கிடைக்க தொடங்கியது" என்றும் மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
________________________________________________________________________
படிக்கவேண்டிய தொடர்பு கட்டுரை:
மும்பைவாசிகளை காலையில் தட்டி எழுப்பும் 'ஜூசிஃபிக்ஸ்'
________________________________________________________________________

மதர்வேயின் சிறப்பம்சம் என்ன?
ஒரு பொருளை உருண்டையாக செய்யும் பொழுது அதற்கு வரவேற்பு அதிகம் என்பது பொதுவான நம்பிக்கை. அதனால் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் சுத்தமான முறையில் கலப்படம் ஏதுமின்றி உருண்டை வடிவில், ஜீரணசக்தியை அதிகரிக்கும் தூய்மையான பனைமரக் கருப்பட்டியை, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலக் கடலையைப் பயன்படுத்தி செய்யப்படுவதே இதன் சிறப்பம்சமாகும்.
மேலும் வீட்டில் திருமணம், பிறந்தநாள் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களுக்கு தாம்பூல பையில் “இனிப்புப் பரிசாக” கருப்பட்டி கடலைமிட்டாய் பாக்கெட்டுகள் சேர்த்து கொடுக்கும் தனிச்சிறப்பையும் நாங்கள் தொடங்கியுள்ளோம்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் மறந்த நம்முடைய கலாச்சார பண்டமான கருப்பட்டி கடலை மிட்டாயைப் பற்றி தெரிய வேண்டும் என்பதற்காக, 125 கிராம் 45 ரூபாய்க்கும், 250 கிராம் 85 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
எதிர்காலத்தில், தேன்மிட்டாய் மற்றும் கருப்பட்டியில் செய்யக்கூடிய பல சுவையான தின்பண்டங்கள் தயாரிக்க உள்ளது 'மதர்வே' நிறுவனம். மேலும் சுவாரஸ்யமான தமிழநாட்டு பாரம்பரிய தின்பண்டங்கள் பற்றி பகிர்ந்து கொண்ட ஸ்டாலின்,
“நம்ம மண்ணு கொடுக்கிறத நாம சாப்பிட்டாத்தான், நாம மண்ணுக்கு போகும்போது மண்ணுக்கு செறிக்கும்” என்னும் பழமொழியை நம்முடன் பகிர்ந்து கொண்டு விடைபெற்றார்.
இணையதள முகவரி: Motherway, Facebook
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
இது போன்ற பாரம்பரிய, இயற்கைமுறை உணவுத்தொழில் கட்டுரைகள்:
சென்னைவாசிகளை கிராமத்துக்கு அழைத்துச் செல்லும் “ஊர் சந்தை”
சொந்த இழப்பில் இருந்து மீண்டு சுனில் சூரி மற்றவர்களுக்கு உதவியது எப்படி?