கலைஞர் 95: முத்தமிழுக்கு தாலாட்டு நாள் வாழ்த்துகள்...
'கருணாநிதி' என்ற இந்த பெயர் கடந்த 60 ஆண்டுகால தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத ஒன்று. சுயமரியாதை இயக்க முன்னோடி பட்டுக்கோட்டை அழகிரியின் தீரமிகு பேச்சால் கவரப்பட்டு அரசியல் களத்திற்கு வந்தவர் கருணாநிதி.
கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
1939ல் எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார். இது தான் கருணாநிதியின் முதல் மேடை பேச்சு.
மாணவ பருவத்திலேயே, மாணவ நேசன் என்கிற பத்திரிக்கையையும் நடத்தி வந்திருக்கிறார். மாத இதழான மாணவ நேசன் 1941ல் வெளியானது. முரசொலிக்கு முன்னோடி மாணவநேசன். இதே போல் முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு 'தமிழ் மாணவர் மன்றம்'. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.
50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி, மலைக்கள்ளன்.
கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம். எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான். கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.
1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.
பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான 'ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான்'. அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92.
கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார். 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார். இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.
கருணாநிதியைப் பொறுத்தவரை எழுத்து அவரை அரசியலில் ஈர்த்ததா? அல்லது அரசியல் நிமித்தம் அவர் எழுத ஆரம்பித்தாரா? என்று பட்டி மன்றம் நடத்தலாம். அந்த அளவிற்கு எழுத்தை காதலியாக நேசித்தவர் கலைஞர்.
நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
கருணாநிதியின் திரைப்பட வசனம் என்றாலும் சரி, அரசியல் வசனம் என்றாலும் சரி பராசக்தி வசனம்தான் பலருக்கும் நினைவில் வரும். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரும் வசனங்கள் அனைத்தும் அந்த திரைப்படம் வெளிவந்த காலகட்டத்திலிருந்து இப்போது வரை பிரபலமாக இருக்கிறது.
பராசக்தியின் நீதிமன்ற காட்சியில் மட்டுமல்ல, படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வசனங்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதை போல் அரசியல் பேசும். மருதநாட்டு இளவரசி, மந்திரிகுமாரி பராசக்தி என அன்றைய சினிமாவின் தவிர்க்க முடியாத முகமாக கருணாநிதி இருந்தார்.
“மனசாட்சி உறங்கும்பொழது மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பி விடுகிறது,“ என்ற பூம்புகார் வசனம்தான் அந்த காலத்தில் மேடைப் பேச்சு பயில விரும்புவர்களுக்கெல்லாம் ஆத்திச்சூடி.
தமிழ் மரபில் சங்ககாலத்திலிருந்தே எழுத்து பேச்சு அரசியல் என மூன்றிலும் உச்சம் தொட்டவர்கள் வெகு சிலரே. அந்த வகையில், அண்ணாவும் கருணாநிதியும் பேச்சு எழுத்து அரசியல் என மூன்றிலும் உச்சம் தொட்டவர்கள்.
அண்ணாவை மட்டுமல்ல, கருத்து வேறுபாடு கொண்ட கண்ணதாசன் போன்றவர்களையும் கவிதை நயத்தால் நனைத்தவர் கருணாநிதி…
“எவ்வளவோ அபிப்ராய பேதங்கள் இருந்தாலும் கண்ணதாசனுக்கும் எனக்கும்தான் பிரச்சனையேத் தவிர, கண்ணதாசனோடு இருந்த நட்புக்கு பிரச்சனை இல்லை,” என்பார் கருணாநிதி.
மேலும், “கண்ணதாசன் பலமுறை என்னை தாக்கிப் பேசியபோதும் யாரும் கோபப்படவில்லை. ஏனென்றால் அவருடைய தமிழ் ஒத்தடம் கொடுத்துவிடும்,” என்று தனது அரசியல் எதிரியும் தனிப்பட்ட நண்பனுமாகிய கண்ணதாசனுக்கு வக்காலத்தும் வாங்கினார்.
பாடல்களை மட்டுமே இசைத் தட்டுக்களாக கேட்ட தமிழர்களை வசனங்களை இசைத் தட்டுகளாக கேட்க வைத்தவர் கலைஞர் என்று வைரமுத்து சொன்ன கூற்று கலைஞரின் பேச்சு எந்த அளவிற்கு தமிழகத்தின் அடையாளமாகிவிட்டது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்.
கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார். இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.
கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கலைஞரிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.
சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி.
"அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்," என்றார்.
மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.
தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.
நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல் தொழில்நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான். ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.
சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் ’உடன்பிறப்பே’ என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் ’உயிரினும் மேலான உடன்பிறப்பே’ என்று பேசவும் துவங்கினார். கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த ’உடன்பிறப்பே’ என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.
முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம். தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.
கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.
சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.
கிரிக்கெட் காதலர் கலைஞர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடியும் இருக்கிறார்.
’டயட்’ என்ற வார்த்தை கடந்த 10 அல்லது 15 ஆண்டுகளில்தான் தமிழகத்தில் பிரபலமானது. ஆனால், 50 வருடங்களுக்கு முன்பே அதைக் கடைபிடித்தவர் கருணாநிதி. அவர் 44 வயதில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனதுமே, தனது வாழ்க்கை முறையை மாற்றிவிட்டார். காலை சரியான நேரத்துக்கு உணவு, 11 மணிக்கு பழச்சாறு, மதியம் 1.30 மணிக்குள் மதிய உணவு, 3 மணிக்கு குட்டித் தூக்கம், 5 மணிக்கு சிற்றுண்டி என்று வழக்கப்படுத்திக் கொண்டார். 9 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுவார்.
கருணாநிதி அசைவம் விரும்பி. ஆனால், அவர் மாமிசம் சாப்பிடுவதில்லை. அவருக்கு ஆட்டுக்கறி குழம்பு பிடித்தமானது. ஆனால், அதில் உள்ள கறித்துண்டுகளை எடுத்துக் கொள்ளமாட்டார். கோழிக்கறி அறவே கிடையாது. ஆனால், மீன் நிறைய சாப்பிடுவார். இப்போதும் அவருக்கு மீன் சமைத்து முட்களை நீக்கி அடிக்கடி பரிமாறுவார்கள். அதை விரும்பி சாப்பிடுவார். கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்வார். முட்டை சாப்பிடுவார். ஆனால், அதில் மஞ்சள் கருவை தவிர்த்துவிடுவார். தாளிக்காத குழம்பு, சட்னிதான் பல காலமாக அவர் சாப்பிடுகிறார். எந்த நிலையிலும், இந்த வழக்கங்களில் இருந்து அவர் பின்வாங்கியதே இல்லை.
1953ல் செய்திகளில் அடிபட்ட கருணாநிதி, 69 களுக்குப் பிறகு தினம்தோறும் தலைப்புச் செய்தியானார். தலைப்புச் செய்திகளை தீர்மானித்தார்.
இவ்வளவு வேலைகளுக்கு இடையில் தன்னுடைய முகநூல் பக்கத்தையும் அவர் பார்த்துக் கொள்வார். அந்தப் பக்கங்களை நவீன் என்பவர் நிர்வகிக்கிறார். ஆனால், அதில் கருணாநிதியின் பதிவுகளுக்கு லைக்குகள் குறைந்தால்,
’என்னய்யா... லைக் எல்லாம் குறையுது என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். எது டிரெண்டிங் செய்தி என்பது வரை அப்டேட் செய்து கொள்வார். உற்சாகமாக உழைக்கவே பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பார். ஏனென்றால், அவர் கருணாநிதி.
கருணாநிதியின் அரசியல் வரலாறு என்பது தமிழ்நாட்டின் 60 ஆண்டுகால அரசியல் வரலாறும் கூட. கலைஞருக்கு 95வது பிறந்தநாள் வாழ்த்துகள்...