'Freetamilebooks.com'- இணையத்தில் ஒரு புத்தக புதையல்

  3rd May 2016
  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close

  நீங்கள் டிஜிட்டல் வடிவத்தில் (PDF,EPUB,MOBI) தமிழ் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை படிக்க விருப்பம் கொண்டவரா? ஆம், எனில் நீங்கள் தவறாமல் படிக்க வேண்டிய பகுதி இது, பிறகு மறவாமல் பார்க்க வேண்டிய தளம் www.freetamilebooks.com

  ஒருவரிடம் உரையாடும் பொழுது அவர் புரிந்துகொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் உரையாடினால் அது அவரது காதுகளுக்கு மட்டுமே சென்றடையும். ஆனால் அதுவே அவரது தாய்மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்திற்கே சென்றடையும் இந்த உன்னதமான உண்மையைக் கூறியவர் கறுப்பின மக்களின் கலங்கரை விளக்கம் நெல்சன் மண்டேலா.

  image


  'புத்தகம், மனிதனை சிறகில்லாத பறவையாக மாற்றுகிறது', என்கிறது ஒரு ஜப்பானிய பழமொழி.

  சரி நாம் இதுவரை பார்த்த பொன்மொழிகளுக்கும், இனிமேல் பார்க்க போகும் இந்தக் கட்டுரைக்கும் என்ன தொடர்பு என பார்ப்போம்.

  இணைய உலகம் இணையற்ற பல எழுத்தாளர்களை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வகையில் தமிழ் மொழி மீது ஆர்வம் கொண்ட கணினி தொடர்பான நிறுவனங்களில் வேலை பார்க்கும் நபர்களால் அணியாகச் சேர்ந்து தொடங்கப்பட்டது தான் இந்த இலவச மின்நூல் புத்தகக் களஞ்சியம்.

  இங்கு பல்வேறு தலைப்புகளில் பல வகையான புத்தகங்களை பதிவிறக்க முடியும், நீங்கள் விரும்பினால் உங்களுடைய புத்தகங்களை கட்டற்ற முறையில் வெளியிடவும் முடியும்.

  இதுகுறித்து இத்தளத்தின் நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீனிவாசன் அவர்களிடம் அளவளாவிய பொழுது அவர் கூறியவை பின்வருமாறு,

  சமீபகாலமாக பல்வேறு எழுத்தாளர்களும், பதிவர்களும், சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய விவரங்களைத் தமிழில் எழுதத் தொடங்கியுள்ளனர். அவை இலக்கியம், விளையாட்டு, கலாச்சாரம், உணவு, சினிமா, அரசியல், புகைப்படக்கலை, வணிகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழ் அமைகின்றன.

  நாம் அவற்றையெல்லாம் ஒன்றாகச் சேர்த்து தமிழ் மின்புத்தகங்களை உருவாக்க உள்ளோம். அவ்வாறு உருவாக்கப்பட்ட மின்புத்தகங்கள் Creative Commons எனும் உரிமத்தின் கீழ் வெளியிடப்படும். இவ்வாறு வெளியிடுவதன் மூலம் அந்தப் புத்தகத்தை எழுதிய மூல ஆசிரியருக்கான உரிமைகள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்படுகின்றன. அதே நேரத்தில் அந்த மின்புத்தகங்களை யார் வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், இலவசமாக வழங்கலாம். எனவே தமிழ் படிக்கும் வாசகர்கள் ஆயிரக்கணக்கில் சமீபத்திய தமிழ் மின்புத்தகங்களை இலவசமாகவே பெற்றுக் கொள்ள முடியும்.

  இதில் நீங்கள் படிப்பது மட்டுமில்லாமல் பங்களிக்க விரும்புகிறீர்களா?

  நீங்கள் உங்கள் படைப்புகளை வெளியிட விருப்பினால் இங்கே வெளியிடலாம் அல்லது மற்றவர்களின் படைப்பை அதற்குரியவர்களின் அனுமதியுடன் புத்தகமாக வெளியிடலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் தமிழில் எழுதப்பட்டிருக்கும் வலைப்பதிவுகளிலிருந்து பதிவுகளை எடுத்து, அவற்றை LibreOffice/MS Office போன்ற wordprocessor-ல் போட்டு ஓர் எளிய மின்புத்தகமாக மாற்றி freetamilebooksteam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். மேலும் இது தொடர்பான தகவல்களுக்கு இந்த இணைப்பை தொடரவும் 

  இந்தத் திட்டத்தின் மூலம் பணம் சம்பாதிப்பவர்கள் யார்?

  யாருமில்லை... இந்த வலைத்தளம் முழுக்க முழுக்க தன்னார்வலர்களால் செயல்படுகின்ற ஒரு வலைத்தளம் ஆகும். இதன் ஒரே நோக்கம் என்னவெனில் தமிழில் நிறைய மின்புத்தகங்களை உருவாக்குவதும், அவற்றை இலவசமாக பயனர்களுக்கு வழங்குவதுமே ஆகும்.

  உங்கள் கைபேசி மற்றும் கணினியில் இருந்து இந்த தளத்தில் உள்ள புத்தகங்களை உங்களுக்கு வேண்டிய வடிவில் இலவசமாக பதிவிறக்கிக் கொள்ளலாம். இந்த தளத்திற்கென android, ios இயங்கு தளத்தில் செயலிகளும் உள்ளது.

  200 ஆவது மின்னூலுடன், FreeTamilEbooks.com தனது இரண்டாவது ஆண்டை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

  இந்த தளம் குறித்த தகவல்களுக்கு : www.freetamilebooks.com

  ஃபேஸ்புக் பக்கம், மின்னஞ்சல் முகவரி: freetamilebooksteam@gmail.com

  • +0
  Share on
  close
  • +0
  Share on
  close
  Share on
  close
  Report an issue
  Authors

  Related Tags

  Latest

  Updates from around the world

  Our Partner Events

  Hustle across India