மகளிர் தினத்தன்று கூகுல் டூடிலில் இடம்பெற்றுள்ள இந்திய பெண்ணின் கைவண்ணம்!
ஒவ்வொரு சிறந்த தினத்திற்கும் கூகுள் தன் முன் பக்கத்தில் டூடலை சமர்பிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பன்னிரண்டு நாடுகளில் இருந்து பெண் கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் படைத்த படைப்பை வெளியிட்டு கௌரவப்படுத்தியுள்ளது.
அந்த பன்னிரண்டு பெண்களில் ஒருவர் நம் இந்திய பெண் காவேரி கோபால கிருஷ்ணன். இவர் பெங்களூரை சேர்ந்த ஒரு சுய காமிக்ஸ் தயாரிப்பாளர் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர். அலஹாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் படிப்பை முடித்த காவேரிக்கு சிறுவயதில் இருந்தே வரைவதிலும், காமிக் தயாரிப்பிலும் அதிக ஈடுபாடு இருந்துள்ளது.
அவரது டூடில் ஓர் சிறுவன் கூரையில் அமர்ந்து புத்தகம் படிப்பது போலும் அதன் பின் சிறகு முளைத்து மேலே பறப்பது போன்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது.ஃபர்ஸ்ட் போஸ்ட்டில் அவர் அளித்த பேட்டியில்,
“என் சிறுவயதில் மாடியில் ஒளிந்து கொண்டு செய்யும் செயல்கள் நினைவுக்கு வந்தது. அந்த நினைவுகளே கைவண்ணமாக வந்தது...” என குறிப்பிட்டார்.
’வளர்ச்சி’ சார்ந்த டூடிலாக வரைப்படம் இருக்கவேண்டும் என கூகுல் அறிவித்த பொழுது தனக்குத் தோன்றிய, புத்தகத்தால் ஒரு சிறு உயிர் வளர்ந்து வலுவான மனிதனாக உருவாவதை, வரைப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் காவேரி.
சம்பக் போன்ற பல ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இவர் பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமின்றி தி ரூம், டிராயிங் தி லைன், ஃபர்ஸ்ட் ஹான்ட் போன்ற பதிப்பகங்களிலும் இவரது காமிக் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் திரைப்படங்கள் மற்றும் கல்வி புத்தகங்களுக்கும் வரைந்து கொடுத்துள்ளார். பெரும்பாலும் டிஜிட்டலை விட கையில் வரைவதையே விரும்புகிறார் காவேரி.
“ஒரு கலையை கலையாக பார்க்கவேண்டும் அதில் ஆண் பெண் என எந்த வேறுபாடும் இருக்கக் கூடாது. மேலும் என் வரைபடம் மூலம் மக்களுடன் ஒன்றிப் போகும் செயல்களை கதையாக சொல்ல விரும்புகிறேன்,”
என தெரிவித்தார் காவேரி.
கட்டுரை: நெளஷின்