அஞ்சேல் 15 | கெத்தாக இருக்கப் பழகு - கலை இயக்குநர் ஜெயஸ்ரீ

'பிசாசு', 'சார்லி' மூலம் கவனம் ஈர்த்ததுடன், சமகால தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரே பெண் கலை இயக்குநர் ஜெயஸ்ரீ பகிரும் அனுபவக் குறிப்புகளின் நிறைவு பகுதி.

கீட்சவன்
7th Feb 2018
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

(தமிழ்த் திரைத்துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் தாங்கள் எதிர்கொண்ட சவால்களையும், மேற்கொண்ட போராட்டங்களையும் பகிரும் தொடர்.)

கலை இயக்குநர் சாபு சிரில் சாரிடம் பணிபுரிந்தது மகத்தான அனுபவத்தைக் கொடுத்தது. சினிமாவில் கலை இயக்கத்தை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. இளம் திறமையாளர்களுக்கும், புது முயற்சிகளில் களமிறங்குவோருக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கும் மும்பை மாநகரம் என்னையும் அரவணைத்தது. மும்பை எனக்கு நிறையவே தந்தது. அதேநேரத்தில் வாடகை வீடு கிடைப்பதும், அன்றாட செலவுகளைச் சமாளிப்பதும்தான் பெரிய சவலாக இருந்தது.

கலை இயக்குநர் ஜெயஸ்ரீ

கலை இயக்குநர் ஜெயஸ்ரீ


என் உடன் பணிபுரிந்த சீனியர்களில் பெரும்பாலானோரும் கலை இயக்கத்துக்கு முறைப்படி படித்துவிட்டு வந்தவர்கள். நானோ அனுபவ ரீதியில் கற்று வருபவள். அவர்களில் சிலரது போட்டி மனப்பான்மையைப் பக்குவமாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. உதாரணமாக, ஒரு சீனியரின் அணுகுமுறையைச் சொல்கிறேன். என்னிடம் இருந்து 'தெரியாது' அல்லது 'முடியாது' என்ற வார்த்தையைப் பிடுங்குவதற்காக, நீண்ட தூரம் பயணித்து செட் ப்ராப்பர்ட்டிகளைப் பார்த்து வரச் சொல்வார். அதாவது, செங்கல்பட்டில் ஷூட்டிங் என்றால் எழும்பூர் வரை செல்ல வேண்டும். எனக்கோ பரிச்சயமில்லாத ஊர். ஆனாலும் சென்றாக வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் தெரியாது என்று மறுக்காமல், அதை எப்படியாவது செய்துவிட வேண்டும்.

இதுபோல சிற்சில சமாளிக்கக் கூடிய சவால்கள் இருந்தாலும், கலை இயக்கத்தில் பெண்கள் பலரும் ஈடுபடுவதால் எந்த விதமான மனத்தடங்கலுமின்றி நம் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தும் நல்ல சூழல் இருந்தது. இந்த இடத்தில் நம் சென்னையின் நிலையுடன் ஒப்பிட விரும்புகிறேன்.

சென்னையில் ஒரு படப்பிடிப்புத் தளத்தில், "சாம்பார் பிடிக்கிற கையில எதுக்கு சுத்தியல் பிடிக்கணும்?" என்ற நக்கலான வாக்கியத்தை எதிர்கொண்டேன். அவர் ஓர் ஆணாம். என் செட்டில் பணிபுரிவர். அதுபோன்றவர்களைப் பொறுத்தவரையில், பெண்கள் என்றாலே சமையலறையில்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பு. இதுபோன்ற போக்கு மும்பையில் கிடையாது. ஏனெனில், அங்கே கலை இயக்கத்தில் பெண்கள் நிறைய வருகிறார்கள். இங்கும் அப்படி நிறைய பேர் வந்தால்தான் சமநிலை ஆகும். அப்போதுதான், ஆர்ட் டைரக்டரை ஆர்ட் டைரக்டராகப் பார்ப்பார்களேயன்றி, ஒரு பெண்ணாக மட்டும் பார்க்க மாட்டார்கள்.

சினிமாவில் சில பிரிவுகளில் ஆண்களும் இப்படிக் கிண்டல்களுக்கு ஆளாவது உண்டு. மேக்கப் - காஸ்ட்யூம் டிசைனில் செயல்படும் ஆண்களை 'என்னப்பா லேடீஸ் மாதிரி இந்த ஏரியாவைப் பார்த்துக்குற?' என்று கிண்டல் செய்வதையும் பார்த்திருக்கிறேன். இதை ஆண்கள் செய்யவேண்டும்; அதைப் பெண்கள் செய்யவேண்டும் என்று பிரித்துவைத்த முட்டாள்தனமான பொதுபுத்தியின் விளைவு இது. சினிமா மட்டுமல்ல எந்தத் துறையிலுமே திறமை இல்லாமல் ஒருபோதும் எவராலும் சிறந்து விளங்க முடியாது.

கலை இயக்கத்தில் திறமையை வெளிப்படுத்துவதே போராட்டம் என்பதால், இன்னொரு பக்கம் இந்தப் பிரிவில் அன்றாடம் இயங்குவதே பெரிய போராட்டமாக இருந்தது. ஆனால், இவை எல்லாம் நம்மை நாம் நிரூபிக்கும் நாள் வரை மட்டும்தான் என்பது தெளிவாகப் புரிந்தது.

வனமகன் படப்பிடிப்புத் தளத்தில்...

வனமகன் படப்பிடிப்புத் தளத்தில்...


படப்பிடிப்புத் தளத்தில் நம்மிடம் பணிபுரிபவர்களிடம் வேலை வாங்கும்போது, எப்போதாவது குரல் உயர்த்துவது இயல்பானது. 'இன்னும் எவ்ளோ நேரம் பண்ணுவீங்க?' என்று உரக்கச் சொன்னதை, என் பிரிவில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் எப்படி ரியாக்ட் செய்தார் தெரியுமா?

'ஒரு லேடி என்கிட்ட எப்படி சத்தம் போடலாம்?' - இப்படி அலட்சியமாக அவரால் எப்படிக் கேட்க முடிந்தது என்று யோசித்துப் பார்த்தால் சமூக அரசியல் விளங்கும்.

நான் கலை இயக்கம் பொறுப்பை வகிக்கிறேன். நான் சொல்லும் பணிகளை அவர் செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. மாறாக, அவர் என்னை ஒரு பெண்ணாக மட்டுமே பார்க்கிறார். இந்தச் சில்லறைத்தனங்களுக்கு எல்லாம் எதிர்வினையாற்றிக் கொண்டிருப்பது வீண். என் அடுத்த ப்ராஜக்ட்டில் அவரை என் குழுவில் சேர்க்க மாட்டேன். இதுதான் என்னளவில் நான் காணும் தீர்வு.

என் இடத்தில் ஓர் ஆண் கலை இயக்குநர் இருந்து எப்படிப் பேசினாலும் அவர் கவலைப்படப் போவதில்லை. ஆனால் என்னிடம்..? என்ன மாதிரியான மனநிலை இது?

நான் ஒட்டுமொத்தமாக, நம் சினிமாவில் இயங்கும் எல்லாரையுமே குறை சொல்லவில்லை. களத்தில் செயல்படும் பெண் கலைஞர்களை இளக்காறமாகப் பார்க்கும் எண்ணிக்கைக்கு இணையாகவே உண்மையான அக்கறையுடன் விசாரிப்பவர்களும் இங்கு உண்டு.

image


சரி, என் பயணத்துக்கு வருகிறேன். மும்பையில் சாபு சிரிலுக்குப் பிறகு கலை இயக்குநர் பிரியாவிடம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன். விளம்பரங்களுக்குத் தனியாகப் பணிபுரிய ஆரம்பித்ததும் சென்னைக்குத் திரும்பினேன். சினிமா போன்ற படைப்புத் தொழிலில் எப்போது சரியான வாய்ப்பு வரும் என்று நமக்குத் தெரியாது. எனவே, நாம் எப்போதுமே தயார் நிலையில் இருக்க வேண்டும். சரியான வாய்ப்பு கிட்டும்போது, அதைத் தவறவிடாமல் பற்றிக்கொள்ள வேண்டும். இதை இன்று வரை பின்பற்றுகிறேன்.

ஒளிப்பதிவாளர் 'வைட் ஆங்கிள்' ரவிஷங்கர் சார் மூலமாக இயக்குநர் மிஷ்கின் சாரை சந்தித்தேன். 'பிசாசு' பற்றி விவரித்தார். அதுவே என் முதல் படம் ஆனது. ஐஸ் ஃபாக்டரி, டெட் பாடி, அபார்ட்மென்ட்... எனக்கு திறமைக்குத் தீனி கிடைத்தது. குறிப்பாக, ஐஸ் ஃபேக்டரி செட் வெகுவாகப் பேசப்பட்டது. சினிமாவை மிஷ்கின் சார் அணுகும் விதம் தனித்துவமானது. எனக்கு நற்பெயரைப் பெற்றுத் தந்தது 'பிசாசு'. என் திறமையை அடையாளம் கண்டு, அவர் எனக்கு மிகப் பெரிய பொறுப்பை அளித்தது மறக்க முடியாத அனுபவம்.

அதன்பிறகு, மலையாளத்தில் 'டபுள் பேரல்' என்ற பெரிய படம். பின்னர், லால் ஜோஸ் சாரின் 'நினா'வில் பணிபுரிந்ததும் நல்ல அனுபவம் தந்தது. அப்புறம்தான் தெரியும், மலையாள திரைப்பட வரலாற்றிலேயே அங்கு முதல் பெண் கலை இயக்குநர் நான்தான் என்பது. எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்தப் படங்களின் மூலமாகவே துல்கர் - பார்வதி நடித்த 'சார்லி' எனும் மிகப் பெரிய வாய்ப்பு கிடைத்தது. முழுக்க முழுக்க கலைப் பிரிவை அடிப்படையாகக் கொண்ட திரைக்கதை அது. இயக்குநர் மார்டின் ப்ரக்கட், ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் ஆகியோர் என் திறமையை வெகுவாக நம்பினர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தேன். கேரள அரசின் விருதும் கிடைத்தது.

சார்லி படப்பிடிப்பில் கலை இயக்குநர் ஜெயஸ்ரீ

சார்லி படப்பிடிப்பில் கலை இயக்குநர் ஜெயஸ்ரீ


தீவிர சினிமா ஆர்வலர்கள் மட்டுமின்றி, சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே எளிதில் கலை இயக்கத்தின் நேர்த்தியைக் கண்டுகொள்ளக் கூடிய வகையில் அமைந்த கதை கொண்ட படம் 'சார்லி'. என் திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் என்றும் சொல்வேன். அதில் என் பங்களிப்பைப் பார்த்துவிட்டு, ரோஹித் ஷெட்டி தன் படத்துக்காக அழைத்தார். நீரவ் ஷா, ஆர்.டி. ராஜசேகர் முதலான நான் வியந்த கலைஞர்கள் பலரும் அழைத்துப் பேசினர். இவை அனைத்துக்கும் மேலாக, பொதுமக்கள் பலரும் கடிதம் எழுதி நெகிழவைத்தனர். நிறைய பேர் 'சார்லி' மாதிரி ஆஃபிஸ் செட் பண்ணியிருக்கேன்", "என் வீடும் சார்லில வர்ற மாதிரி செதுக்கியிருக்கேன்"னு சொல்வதைக் கேட்கும்போது அப்படி ஒரு பரவசம். 

அப்புறம், 'ஜேக்கபிண்டே சுவர்க்கராஜ்ஜியம்' படம். கேரளாவில் ஓராண்டிலேயே நான்கு படங்கள் முடித்தேன். மீண்டும் சென்னை வந்தபிறகு இயக்குநர் விஜய் சாரிடம் 'வனமகன்' படத்தில் பங்காற்றினேன். அடுத்து பணியாற்றிய 'கரு' வெளியாகும் நிலையில் உள்ளது.அடுத்தடுத்து தமிழிலும் இந்தியிலும் படங்கள் அமைந்தவண்ணம் இருக்கிறது.

கலைப் பிரிவில் படப்பிடிப்புத் தொடங்குவதற்கு முன்புதான் வேலையே. நாங்கள் செய்யும் வேலை யாருக்குமே தெரியாது. சொகுசான சூழலை எதிர்பார்க்கவே முடியாது. வெயிலோ, பனியோ, இரவோ எதையும் கண்டுகொள்ளக் கூடாது. இது மட்டுமின்றி, உளவியல் ரீதியிலான அணுகுமுறையும் தேவைப்படும். ஒருபக்கம் உழைக்கும் தொழிலாளர்களிடம் தெளிவாகப் பேசிப் புரியவைத்து வேலை வாங்க வேண்டும்; மறுபக்கம் இயக்குநர் - ஒளிப்பதிவாளர்களிடம் பேசி அவர்கள் மனதில் விஷுவல் செய்துவைத்ததைக் காட்சிப்படுத்த தயார் செய்யவேண்டும். இவை அனைத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பதற்குத் திறமையுடன் கலை மீதான காதலும் அவசியம்.

உயிரில்லாத பொருட்களுடன்தான் வேலை.... ஆனால், திரையில் ஒவ்வொரு காட்சிகளுக்கும் உயிர்க் கொடுப்பதில் மிக முக்கியப் பங்குக் கொண்ட கலை. சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பு கலை இயக்கத்தில் இருந்த அதே பெருங்காதல் இப்போதும் நீடிக்கிறது. அதுவே, என் பயணத்தை செம்மையாக்குகிறது.

'பிசாசு' முதல் படம் செய்வதற்கு முன்பு கலை இயக்குநர் ஆவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தபோது, நான் ஒரு பெண் என்பதாலேயே பட வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. "ஆர்ட் டிபார்ட்மென்ட்ல லேடிஸ் இருந்தால் நிறைய செலவு பண்ணுவாங்க, கரெக்டா ஒர்க் போகுமான்னு தெரியாது..." - இப்படி முட்டாள்தனமாகச் சிலர் கருத்துகளை முன்வைத்தார்கள். திறமையை அறிந்தபின் ஒரு வாய்ப்பைக் கொடுக்காமலேயே பெண் என்பதாலே இப்படி முன்முடிவுகளை எடுப்பது எந்த வகையில் நியாயம்?

அப்போது நான் எதுவும் பேசவில்லை. இப்போது என் படங்கள் என் கலைத் திறனை பேசுகின்றன.

எந்தத் துறையாக இருந்தாலும், பாலினப் பாகுபாடு இல்லாமல் உறுதியாக செயல்பட விரும்பும் பெண்கள் ஒருபோதும் தாங்கள் பெண் என்பதாலே சலுகைகளை எதிர்பார்த்துவிடக் கூடாது. அப்படி எதிர்பார்த்தால், நம் திறமையைக் குறைவாகவே எடை போடுவார்கள். அதற்கு இடம் தரவேக் கூடாது. நம் திறமைக்கு ஏற்ப கெத்தாக இருக்கப் பழக வேண்டும்.

ஜெயஸ்ரீ (30): சமகால தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரே பெண் கலை இயக்குநர். மிஷ்கினின் 'பிசாசு' மூலம் அறிமுகம். மலையாளத்தில் 'சார்லி' மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர். கேரள ஃபிலிம் க்ரிட்டிக் விருது பெற்ற சிறப்புக்குரியவர். திரைக்குப் பின்னால் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளில் சினிமாவில் பெண்கள் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர்களில் மிக முக்கியமானவர். தென்னிந்திய சினிமாவில் பாலினப் பாகுபாடு களைவதற்கு, அனைத்துப் பிரிவுகளில் பெண்கள் களம் கண்டு சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவதுடன், அதற்கான ஊக்கத்தை ஆர்வமிக்க பெண் கலைஞர்களுக்கு அளித்து வருபவர். தன் கலை இயக்கத் திறமையால் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கக் கூடிய நாட்களை விரைவில் இவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயம்: அஞ்சேல் 14 | அதீதத்தையும் அணுகு - கலை இயக்குநர் ஜெயஸ்ரீ

'அஞ்சேல்' தொடரும்...

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags