உலகில் அதிக டவுன்லோட்கள் பெற்ற டாப் 10 ஆப்’களில் டெய்லி ஹன்ட்-ன் Josh!
மே மாத முன்னணி பத்து செயலிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய செயலியாக டெய்லி ஹண்டின் ஜோஷ் திகழ்வதாக சென்சார் டவட் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டெய்லி ஹண்ட் நிறுவனத்தின் குறும் வீடியோ செயலியான Josh, கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் மே மாதத்தில் முன்னணி பத்து செயலிகளில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
ஜோஷ் செயலி உலகின் பத்தாவது அதிகம் தரவிறக்கப்பட்ட செயலியாக விளங்குவதாகவும், பிளேஸ்டோரில் 8வது அதிகம் டவுன்லோட் செய்யப்பட்ட செயலியாக திகழ்வதாகவும் சென்சார் டவர் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறும் வீடியோ சேவைக்காக அறியப்படும் டிக்டாக் 80 மில்லியன் எண்ணிக்கையில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக இருக்கிறது. டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு, ஜோஷ் செயலி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிரிவில், இன்மொபி-யின் ரோபோசோ, எம்.எக்ஸ் டகாடக், ஷேர்சாட்டின் மோஜ், சிங்காரி உள்ளிட்ட இந்திய செயலிகள் உள்ளன.
மே மாதம் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் சமூக ஊடக செயலிகள் தாக்கம் செலுத்துகின்றன. 53 மில்லியன் எண்ணிக்கையில், இரண்டாவதாக அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத செயலியாக ஃபேஸ்புக் இருக்கிறது. ஃபேஸ்புக்கின் தரவிறக்கத்தில் இந்தியாவின் பங்கு 27 சதவீதமாக உள்ளது.
ஜோஷ் வளர்ச்சி
2020 செப்டம்பர் மாதம் அறிமுகமான ஜோஷ் வேகமாக பிரபலமாகி, 45 நாட்களில் 50 மில்லியன் தரவிறக்கத்தை கடந்து, ஒரு பில்லியன் வீடியோ இயக்கத்தைக் கொண்டிருந்தது.
”எங்கள் முன்னோட்ட அறிமுகத்தில் 45 நாட்களில் 23 மில்லியன் தீவிர தினசரி பயனாளிகளை அடைந்தோம். இப்போது உள்ளூர் மொழி சந்தை வேகமாக வளர்கிறது. எங்களிடம் நல்ல சேவை உள்ளது. இதன் மூலம் பிரதமரின் தற்சார்பு இந்தியா கோரிக்கைக்கு ஏற்ப செயல்பட்டிருக்கிறோம்,” என்று இதற்கு முன்னர் யுவர்ஸ்டோரியிடம் பேசிய போது, டெய்லிஹண்ட் இணை நிறுவனர் உமாங் பேடி கூறினார்.
கடந்த டிசம்பர் மாதம் டெய்லி ஹண்ட், ஆல்பாவேவ், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து 100 மில்லியன் டாலர் திரட்டி யூனிகார்ன் அந்தஸ்து பெற்றது. ஜோஷ் வளர்ச்சிக்கு இந்த நிதியை பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஜோஷ் 12 மொழிகளில் செயல்படுகிறது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வளரச்செய்ய இந்த மேடை பயன்படுத்தப்படும் என டெய்லி ஹண்ட் தெரிவித்துள்ளது.
ஆங்கிலத்தில்: ஷோஹினி மிட்டர் | தமிழில்: சைபர் சிம்மன்