'முதல்நிலை வேலைவாய்ப்பை உருவாக்கும் முதலீடுகள் அதிகம் தேவை' - டாவோஸ் மாநாட்டில் டி.ஆர்.பி.ராஜா!
ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றுள்ளார். வேலைவாய்ப்பை உருவாக்கும் எந்த முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அது இந்திய பொருளதாராத்திற்கும் ஊக்கம் அளிக்கும், என்றார்.
ஸ்விட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றுள்ளார். இந்த மாநாட்டின் போது என்டிடிவிக்கு பேட்டி அளித்துள்ள அவர்,
“பொருளாதாரத்திற்கு ஊக்கம் தரும் விதத்திலான உயர்நிலை வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முனைப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பை உருவாக்கும் எந்த முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அது இந்திய பொருளதாராத்திற்கும் ஊக்கம் அளிக்கும்,” என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் “உற்பத்தி தலைமையிடம்” தமிழ்நாடு என்பதை அடிக்கோளிட்டு கூறிய அவர்,
“முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு சிறப்பு, தமிழ் கலாச்சாரத்திற்கு உள்ளது. ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக் மற்றும் டெக்ஸ்டைல் துறைகளில் தமிழ்நாடு மிகவும் சக்திவாய்ந்த மாநிலமாக இருக்கிறது. எங்களின் பலத்தை காட்டும் பாரம்பரியமான துறைகள் இருந்தாலும் வாழ்வியலுக்கு தேவையானவற்றை உருவாக்குவதிலும் நாங்கள் தயாராக உள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்.
40,000 தொழிற்சாலைகளுடன் நாட்டின் முதன்மை உற்பத்தி நகரம் என்கிற இடத்தை தமிழ்நாடு கொண்டிருந்தாலும் வளர்ச்சி கண்டுள்ள தொழிற்சாலைகளைப் போல திறன்பட செயல்பட வேண்டிய அவசியம் தமிழ்நாட்டிற்கும் இருப்பதாகக் கூறினார்.
தொழில்நுட்ப வளர்ச்சி நான்காவது தொழில் புரட்சிக்கு அடித்தளமிடும், எனவே அவற்றிற்கு ஏற்ப வளர்ச்சி காணும் நிறுவனங்களே முதன்மை உற்பத்தியாளர்களாக முடியும் என்ற உலக பொருளாதார மன்றத்தின் முன்னெடுப்பை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்தார். தொழிற்சாலைகள் மற்றும் தொழில் முறைகளின் செயல்பாடுகள், நிலைத்தன்மையில் மாற்றங்கள் தேவை என்று உலக பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.
கடல்சார்ந்த மாநிலமான தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் பருவநிலை மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்துவதை ஒப்புகொண்ட ராஜா, இதனை கருத்தில் கொண்டே காடுகள் விரிவாக்கம், சதுப்பு நிலக்காடுகள் பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு போன்றவற்றில் அரசு கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.
உலக பொருளாதார மன்றத்தில் இந்திய அரசு அமைத்துள்ள அரங்கங்களைப் போலவே தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களும் அரங்கங்கள் அமைத்துள்ளன. முதலீட்டாளர்களை தங்கள் மாநிலங்களுக்கு ஈர்க்கும் விதத்தில் இந்த அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தமிழ்நாடு தொழில்துறையில் புதிய தொடக்கங்களை எதிர்பார்க்கிறது. டாவோஸில் நடைபெறும் பொருளாதார மன்றக் கூட்டங்களில் தவறாமல் தமிழ்நாடு பங்கெடுத்து வருகிறது. உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்ப பல்வேறு கொள்கை முன்னெடுப்புகள் மற்றும் புதிய திட்டங்களை உலகம் முழுவதில் இருந்து வந்திருக்கும் தொழிற்சாலைகள் காட்சிப்படுத்தியுள்ளன.