இந்தியாவை சுத்தம் செய்ய அமெரிக்க வேலையைவிட்ட இந்தியர்கள்!
இந்தியாவில் குப்பைகளும் கழிவுகளும் மோசமாக நிர்வகிக்கப்படுவதைப் பார்த்த இரண்டு இளைஞர்கள், அமெரிக்காவில் தாங்கள் பார்த்து வந்த வேலையையும் ஆய்வுகளையும் நிறுத்திவிட்டு, இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியாவுக்கு வந்தனர். குப்பை, கழிவுகள் மறுசுழற்சியில் புதிய வழியை காட்டுகிறார்கள்.
'பான்யன்' (Banyan) என்பது அதிநவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியாவின் குப்பை மற்றும் கழிவுகள் மறுசுழற்சி மதிப்புச் சங்கிலியில் (recycling value chain) உண்டாகும் பிரச்னைகளுக்கு தீர்வுகள் கண்டறியும் சமூக நோக்கம் கொண்ட ஒரு தொழில் முயற்சி. மூலக் கழிவு/குப்பைப் பொருட்களை வகைப் பிரித்தல், பூமியில் கொட்டப்படுவதை முடிந்தவரையில் தவிர்த்தல் ஆகிய செயல்பாடுகளை மேம்படுத்த இந்த அமைப்பு புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை பயன்படுத்துகிறது.
மறுசுழற்சி மதிப்புச் சங்கிலியில் உள்ள செயல்திறமையின்மைகளை களைய முயற்சிக்கிறது இந்தப் புதிய நிறுவனம். இதற்காக மறுசுழற்சி செயல்முறையில் வகைப்படுத்துவதற்கு முந்தைய நிலை (pre sorting) மற்றும் சேகரித்தல் (collecting) முதல் வகைப்படுத்தல் முடிந்த நிலை (post sorting) மற்றும் மறுசுழற்சி பொருட்களை முறைப்படுத்தும் (processing of recyclates) செயல்முறை வரை எல்லா அம்சங்களிலும் புதிய முறைகளை புகுத்துவதன் மூலம் வேரறுக்க முயல்கிறது இந்த புதிய நிறுவனம்.
அதிரடி ஆரம்பம்
எங்கு பார்த்தாலும் சுகாதாரக் கேடு, அழுக்கு, மற்றும் தூய்மையற்ற நிலை இயல்பானதாக காணப்படும் இந்தியாவில் பயணிக்க நேர்ந்த போது, அந்த அவல நிலை, மணியின் மனத்தில் ஆழமாக பாதித்தது. இதை மாற்ற ஏதாவது செய்ய வேண்டுமென்ற உத்வேகம் உண்டானது. இந்த எண்ணமே, தொழில்நுட்ப புதுமைகள், சிறந்த வழிமுறைகள் மற்றும் அடிநிலை செயல்பாடு (grassroot activism) ஆகியவற்றின் மூலம் இந்தியாவில் திடக்கழிவு மேலாண்மை துறையை உருமாற்றும் ஒரு நிறுவனத்தைத் உருவாக்க வேண்டுமென்ற உத்வேகத்தை அவருக்கு அளித்தது.
ஸ்டீவ் ப்ளேங்க்-இன் லீன் லான்ச் பேட் ப்ரோக்ராம் (Steve Blank’s lean launch pad program) மற்றும் கொலம்பியா பிசினஸ் பள்ளியின் க்ரீன்ஹவுஸ் இன்குபேட்டர் போன்றவற்றிலிருந்து பான்யன் அமைப்பின் வணிக மாதிரியை மணி உருவாக்கினார். இந்தியாவை பீடித்திருக்கும் சமூகத்தை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகளுக்கு தீர்வுகாண தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் பேரார்வம் கொண்ட தொழில்நுட்பவியலாளரான ராஜ் மதனகோபால் ஆறு மாதங்களுக்கு பிறகு வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்தார்.
“எங்கள் கூட்டணி 2002லேயே தொடங்கிவிட்டது என்று கூறலாம். டெலாவரிலுள்ள நெவார்க் யுனிவர்சிட்டி டவுனில், வகுப்புகளை ஒன்றாக கட்டடித்துவிட்டு சுற்றுவோம். அப்போதே நெருங்கிய நண்பர்களானோம்” என்கிறார் மணி. பின்பு இருவரும் டெலாவர் பல்கலைக்கழகத்தில் படித்தனர். மின்னியல் பொறியியலில் (வயர்லெஸ் கம்யூனிக்கேஷன்ஸ்) மணி பி.எச்.டி ஆய்வை செய்ய, இயந்திரப் பொறியியலில் (ரோபோடிக்ஸ்) முதுநிலைப் படிப்பில் சேர்ந்தார் ராஜ்.
பல்கலைக்கழகப் படிப்புக்கு பிறகு இருவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்தனர் – சான் டியாகோவிலுள்ள க்வால்காம் நிறுவனத்தில் மணி இணைய, சியாட்டில் நகரில் ஒரு புதிய மொபைல் நிறுவனத்தில் சேர்ந்தார் ராஜ். பத்தாண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் தொலைப்பேசியில் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்த போது, இந்தியாவில் தான் மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கும் திடக்கழிவு மேலாண்மை பிரச்னைகளுக்கான தீர்வுகளையும், பெர்க்லி மற்றும் கொலம்பியா பிசின்ஸ் ஸ்கூல்களில், தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் பிசினஸ் மாதிரியைப் பற்றிய எண்ணங்களை அவருடன் மணி பகிர்ந்துகொண்டார்.
கொலம்பியாவின் க்ரீன்ஸ்ஹவுஸ் இன்குபேட்டர் திட்டத்தின் பகுதியாக, ஹைதராபாத், பெங்களூரு நகரங்களில் வாடிக்கையாளர்களைத் தேடியும் ஆக்டிவேஷனுக்காகவும் மணி, ராஜ் இருவரும் பயணம் செய்தனர். “பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஃபெசிலிட்டிஸ் மேனேஜர்களிடம் பேசினோம், ஹைதராபாத்தின் பல்வேறு நகராட்சிகளை சென்று பார்வையிட்டோம், நகர முனிசிபல் கமிஷனர்கள், தனியார் கழிவு மேலாண்மை ஒப்பந்ததாரர்கள், நகரிலுள்ள குப்பைப் பொறுக்குபவர்கள், ஸ்க்ராப் டீலர்கள் (ரட்டிவாலா), சைக்கிள் வாகனங்களில் வரும் சில்லறை குப்பை சேகரிப்பாளர்கள் (கபடிவாலா) என பலரையும் சந்தித்தோம்.” என்று மேலும் கூறுகிறார் மணி.
முழுமையான சந்தை ஆய்வு, மக்களுடன் பேசுவது என மூன்று மாதக் காலத்தில், மதிப்புச் சங்கிலியின் முழுமையும் -குப்பைகள் & கழிவுகளை சேகரிப்பது மற்றும் அவற்றை எடுத்துச்செல்லும் போக்குவரத்து தொடங்கி நிலத்தில் கொட்டும் மேலாண்மை வரை, மறுசுழற்சி செய்வது மற்றும் குப்பையிலிருந்து ஆற்றலை உற்பத்திச் செய்வது என இந்தியாவுக்கு ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்தின் தேவையின் அவசியத்தை உணர்ந்தார்கள்.
அமெரிக்காவுக்கு திரும்பியவுடன் அடுத்த மூன்று மாதங்களுக்கு, அங்குள்ள கழிவு மேலாண்மை செயல்முறைகளை புரிந்துகொள்வது, வளைகுடா பகுதி மற்றும் நியூயார்க் நகரத்தை சுற்றியுள்ள கழிவுகள் கொட்டப்படும் இடங்கள், கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் இடங்கள், மறுசுழற்சி நிலையங்கள் போன்ற இடங்களை பார்வையிடுவது என இருவருன் செலவிட்டனர்.
தங்கள் வேலைகளை விட்டுவிட்டு இந்தியாவுக்கு திரும்பியவுடன், நகராட்சிகளின் திடக்கழிவுகளை கையாள்வதை முதன்மைப் பணியாகக் கொண்ட பான்யன் நிறுவனத்தை ஜூலை 2013ல் தொடங்கினர். “நாடு முழுவதும் விடப்பட்ட டெண்டர்களை ஆய்வு செய்த பின்னர், சான் ஃப்ரான்சிஸ்கோவிலுள்ள எரிவாயுவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு முன்னணி நிறுவனத்துடன் பங்குதாரராக இணைந்து, கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒப்பந்தத்தில் ரூர்கேலா ஸ்டீல் ப்ளாண்ட் நிறுவனத்துடன் பங்கெடுத்தோம்“ என்கிறார் ராஜ்.
புதிய தொழில் முயற்சிகளை பாதிக்கும் சிவப்பு நாடா முறையும், தன்னாட்சி இல்லாத நிலையும்
சிவப்பு நாடா முறையுடன், சுயமாக முடிவெடுக்க முடியாத அதிகாரிகளின் நிலையும் சேர்ந்துகொள்ள, டெண்டர் விடும் செயல்முறையும், பேரப் பேச்சுவார்த்தைகளுமே ஐந்து மாதங்களுக்கு மேலாக இழுத்துச் சென்றுவிடுகிறது. ஜூன் 2013ல் ரூர்கேலா ஸ்டீல் ப்ளாண்ட் நிர்வாகம் விட்ட டெண்டர் இன்னும் திறந்தே இருக்கிறது. “இந்த அத்தியாயம் எங்களுக்கு விலைமதிப்பில்லாத ஒரு பாடத்தைக் கற்றுத் தந்தது – ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை நிறுவனத்துக்கு மிக மிகத் தேவை இருந்தாலும், நகர உள்ளாட்சி நிர்வாகத்துக்கு புதுமைகளை பயன்படுத்துவதிலும் ரிஸ்க் எடுப்பதிலும் வரம்புக்குட்பட்ட ஆர்வமே இருந்தது,” என்கிறார் மணி.
ஏன் புதிய நிறுவனங்கள் அரசிடமிருந்து தள்ளியே இருக்கின்றன?
இது அடுத்த முன்னோடித் திட்டத்துக்கு இட்டுச் சென்றது – அரசு அல்லது நகர உள்ளாட்சி அமைப்புகளை தங்கள் முக்கிய வருவாய் வழிகளாக சார்ந்திருக்காத ஒரு மாதிரியின் மூலம் திடக் கழிவு மேலாண்மை வெளியில் நுழைவது. ”மறுசுழற்சி என்பது எங்களுக்கு பொருந்தி வந்த ஒன்று. ஒவ்வொரு ஆண்டும், கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை உண்டாக்கும் 6.7 மில்லியன் டன்கள் மறுசுழற்சி பொருட்களை (3.1 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் ரூ 19,000 கோடி) தனது சுகாதரமற்ற குப்பைக் கொட்டுமிடங்களில் கொட்டுகிறது இந்த நாடு” என்று மேலும் கூறுகிறார் மணி.
இந்த மறுசுழற்சி மதிப்புச் சங்கிலியின் முதுகெலும்பாகவும், உலகிலேயே உயர்ந்த அளவான, 70% மறுசுழற்சி அளவை சாதிக்க காரணமாக இருப்பதும் முறைசாரா துறைதான். நகைமுரணாக, இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள குப்பை சேகரிப்பாளர்கள் சமூகரீதியாக விலக்கப்பட்டவர்களாகவும், தெருத்தெருவாக குப்பைகளை சேகரிப்பவர்கள் மற்றும் அருகிலுள்ள காயலான்கடை வைத்திருப்பவர்கள் – சங்கிலியில் அடியில் இருப்பவர்கள் – தங்கள் வாழ்வாதாரத்துக்கும் வேலை மூலத்தன தேவைகளுக்கும் இடைத்தரகர்களையே நம்பியிருக்கிறார்கள்.
குப்பைப் பொறுக்குபவர்கள், சேகரிப்பவர்கள், காயலான்கடை வைத்திருப்பவர்கள் இவர்களுக்கெல்லாம் முறைசாரா கடன்கள் அளித்து, அவர்களை தங்கள் பிடியில் வைத்திருக்கும் இடைத்தரகர்கள், சந்தை விலையைவிட குறைந்த விலைக்கு அப்பொருட்களை தங்களிடமே விற்க வேண்டுமென்று அவர்களை நிர்ப்பந்திக்கிறார்கள்.
இந்தக் காரணிகள் இந்தியாவில் கழிவு மற்றும் குப்பை மேலாண்மை சுழற்சியில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு பிசினஸ் மாதிரியை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஏற்படுத்தின. இந்தியாவுக்கான சரியான பிசினஸ் மாதிரி எது என்று மணிக்கும் ராஜுக்கும் தெளிவு ஏற்பட்ட உடனே, அடுத்த ஒரு வாரக் காலத்துக்குள் அவர்களின் நண்பர்களும் குடும்பத்தினரும் 1 லட்சம் அமெரிக்க டாலர்கள் நிதி ஏற்பாடு செய்தார்கள்.
பான்யனின் தொடக்கம் தொழில்நுட்பமே
பான்யனின் மென்பொருள் தளமானது ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட இன்ஃபார்மல் செக்டார் லீட் ஜெனரேட்டர் செயலி மற்றும் முறைசாரா துறையிலுள்ள முன்னேற்றமான மறுசுழற்சியாளர்களை அடையாளம் கண்டு வளர்க்கும் குறுஞ்செய்தியை (எஸ்.எம்.எஸ்.) அடிப்படையாகக் கொண்ட ஒரு வணிக தளம் (trading platform), அனைத்துச் செயல்முறைகளையும் கட்டுப்படுத்தி அதிகபட்ச செயல்திறத்தை எட்டவும், பல செயல்கள் செய்யவும், தினசரி அடிப்படையில் செயல்திறனை மேம்படுத்தும் தகவல்களை பகுப்பாய்வு செய்யும் டேட்டா அனலிடிக் எஞ்சின் ஆகியவற்றை உள்ளடக்கியது. சேகரித்தல் மற்றும் போக்குவரத்து செலவுகளை குறைப்பதற்கு வழி செய்யும் ஜிபிஎஸ் அடிப்படையிலான ரோட்டிங்(routing) மற்றும் ட்ராக்கிங்(tracking) எஞ்சினும் இதில் உண்டு.
மதிப்புச் சங்கிலியின் ஒவ்வொரு புள்ளியிலும் சேகரிக்கப்படும் தகவல்களை பயன்படுத்தி காலாந்திர குப்பைக் கழிவு பகுப்பாய்வு அறிக்கையை உருவாக்க பயன்படுத்துகிறது பான்யன். இதன் மூலம், குடிமக்களிடையே விழிப்புணர்வை உருவாக்குவதுடன், கொள்கை மாற்றங்களை தூண்டும், இந்தப் பகுதியில் வளங்குன்றா முன்னெடுப்புகளை தூண்டவும் வழிவகுக்கும் மதிப்புமிக்க பார்வைகளை நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு அளிக்கிறது.
வருவாய் மாதிரி
உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச கமாடிடி மார்கெட்களில் உள்ள ரீப்ராசசர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பேல்கள், பெல்லெட்கள் மற்றும் சிப்ஸ் வடிவில் விற்கப்படும் முறைபடுத்தப்பட்ட மறுசுழற்சிப் பொருட்கள் (processed recyclate) மூலம் இதன் முதன்மையான வருவாய் கிடைக்கிறது.
புதுமையான இயக்கம்
சேகரிப்பு மற்றும் போக்குவரத்து முதல் ப்ராசசிங் மற்றும் விற்பனை வரை தொழில்முறை சேவையளிப்பதன் மூலம், முழுமையாக சப்ளை செயினை தனது சிறப்பான கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதுடன், தனது சப்ளையர்கள் வலைப்பின்னலில் முறைசாரா துறையையும் சேர்த்து வளப்படுத்துவதன் மூலம், பான்யன் தன் போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுகிறது.
இந்தப் புதிய நிறுவனம் இந்த மாத முடிவுக்குள் இப்பகுதியிலுள்ள 1500க்கும் அதிகமான காயலான் கடை வியாபாரிகளை தனது சப்ளையர் நெட்வொர்க்கில் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. வருங்காலத்தில், தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் பெரிய நகரங்களில் ஒரே நேரத்தில் தனது சேவையை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.