#100UNICORNS | ‘யுனிக்’ கதை 41 - FirstCry: குழந்தைகளின் தேவைகளில் வெற்றிக் கோட்டை அமைத்த இரு நிறுவனர்கள்!
குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் ‘Firstcry’ நிறுவனத்தின் மகத்தான வெற்றிக் கதை இது.
இப்போதைய தலைமுறைகளுக்கு ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் இ-காமர்ஸ் வசதியை பெறுவது எளிது. ஆனால், அதுவே 90ஸ் கிட்ஸ்களுக்கு அது அவ்வளவு எளிதானதாக இல்லை. அவர்கள், ஆன்லைன் ஷாப்பிங்கை கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. அப்படியான நிலையில் இருந்தபோது ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய சிந்தனை மேலோங்கினால், கற்பனை செய்து பார்க்க முடியவில்லைதானே?
ஆனால், நிஜத்தில் அப்படியான சிந்தனை தோன்றி, அதன் விளைவாக ஒரு யூனிகார்ன் நிறுவனம் உருவான கதைதான் இந்த யூனிகார்ன் எபிசோடில் நாம் பார்க்கப்போகிறோம்.
‘ஃபர்ஸ்ட் க்ரை’ (FirstCry) தான் அந்த நிறுவனம். ஃபர்ஸ்ட் க்ரை எனும் பெயரை கேட்டதும் நமக்கு தோன்றுவது போல, குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் தளம்.
இந்த நிறுவனத்தை பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு, அது தொடங்கப்படுவதற்கு காரணமான இருவரை அறிந்துகொள்ளலாம். அவர்கள் சுபம் மகேஸ்வரி மற்றும் அமிதவா சாஹா.
சுபம் மகேஸ்வரி & அமிதவா சாஹா...
சுபம் மகேஸ்வரி டெல்லி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டமும், ஐஐஎம் - அகமதாபாத்தில் எம்பிஏ பட்டமும் பெற்றவர். ஐஐஎம்மில் படித்த அவரது சகாக்களைப் போலல்லாமல், சுபம் மகேஸ்வரி அதிக சம்பளம் தரும் வேலையைத் தேடாமல் சிறிய நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.
சுபம் மகேஸ்வரி முதல் தலைமுறை தொழில்முனைவர். இந்தியாவின் மிகப் பெரிய லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான XpressBees-இல் முக்கியப் பங்காற்றினார். இந்த நிறுவனத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியவர்தான் அமிதவா சாஹா. ஐஐடி வாரணாசியில் பி.டெக் பட்டமும், ஐஐஎம் லக்னோவில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
இவர்கள் இருவரும் 2000-ம் ஆண்டில் ‘பிரைன்விசா டெக்னாலஜிஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கினர். இ-லேர்னிங் தளமான பிரைன்விசா டெக்னாலஜிஸுக்கு நல்ல மவுசு ஏற்பட, விரைவாகவே பிரபலமானது. நல்ல லாபமும் கிடைத்தது.
லாபமும், வரவேற்பும் இருந்தாலும், சுபம் மகேஸ்வரியின் தொழில்முனைவோர் லட்சியம் அதோடு முடிவடையவில்லை. 2007-ல், பிரைன்விசா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை 25 மில்லியன் டாலருக்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட Indecomm Global நிறுவனத்திடம் விற்றுவிட்டு, புதிய வாய்ப்புகளையும், புதிய கனவுகளை தேடியும் பயணப்பட தொடங்கினார்.
Firstcry உதயம்
‘ஃபர்ஸ்ட் க்ரை’ என்பது குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம். இந்தியாவில் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக தொடங்கப்பட்ட முதல் ஆன்லைன் தளம் இதுவென கூறலாம். இன்று ஆன்லைன் - கம்- ஆஃப்லைன் பிராண்ட் ஆகவும் ‘ஃபர்ஸ்ட் க்ரை’ இந்தியாவில் ஆழமாக வேரூன்றி உள்ளது.
ஒரு பெண் கருவுற்றதில் முதல் அவர்களுக்குத் தேவைப்படும் பொருள் வரை, பச்சிளம் குழந்தை பிறந்தது முதல் அந்தக் குழந்தைக்கு ஐந்து வயதாகும் வரை தேவையான பொருட்கள் அனைத்தும் ‘ஃபர்ஸ்ட் க்ரை’-யில் கிடைக்கும்.
சிம்பிளாக சொல்வதென்றால், 5 கிராம் எடையுள்ள டயபர் பின்கள் முதல் குழந்தைகள் விளையாட 25 கிலோ எடையுள்ள கார் வரை அனைத்தும் கிடைக்கும்.
சுபம் மகேஸ்வரி தனது சொந்தக் குழந்தைக்கு தேவையான பராமரிப்பு பொருட்களை தேடும்போது ‘ஃபர்ஸ்ட் க்ரை’க்கான ஐடியா பிறந்தது. தொழில்முறை பயணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிவருவது சுபம் மகேஸ்வரியின் வழக்கம். அப்படி அவர் வாங்கி வரும் பொருட்கள் இந்தியாவில் கிடைப்பது அரிதாக இருந்தது. இதனை கவனித்தபோதுதான் இந்த பிசினஸை இந்தியாவில் தொடங்கலாம் என்கிற யோசனை வந்தது. அப்படி அந்த யோசனையை தனது நண்பர் அமிதவா சாஹாவிடம் எடுத்துரைத்து இருவரும் இணைந்து புதிய அத்தியாயத்தை தொடங்கினர்.
அப்படி, 2010-ம் ஆண்டு ‘பிரைன்பீஸ் சொல்யூஷன்ஸ்’ என்கிற நிறுவனத்தை தொடங்கி அதன் பிராண்டாக ‘ஃபர்ஸ்ட் க்ரை’ நிறுவனத்தை உருவாக்கினர். சுபம் மகேஸ்வரியும் சாஹாவும் தங்களின் தனிப்பட்ட சேமிப்பில் இருந்து ரூ.2.5 கோடியை ஆரம்ப விதையாக போட்டு இந்தியச் சந்தையில் குழந்தைகளுக்கான பொருட்களுக்கான பற்றாக்குறையை நீக்க ‘ஃபர்ஸ்ட் க்ரை’யை தொடங்கினர். ஆரம்பிக்கும்போது ‘ஃபர்ஸ்ட் க்ரை’ ஆன்லைன் விற்பனை தளமாக தொடங்கப்பட்டது.
வெற்றிகரமான பயணம்
2010 வாக்கில் இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் என்பது பெரிதும் பிரபலமடையாத சமயம். மேலும், கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கவே மக்கள் ஆர்வமும் காட்டினர். இதனை புரிந்துகொண்ட சுபம் அன்ட் கோ அடுத்த வருடமே ஆஃப்லைன் கடைகளையும் தொடங்கியது.
பிசினஸில் புதுமையான அணுகுமுறையுடன் அர்ப்பணிப்பு செலுத்த சீக்கிரமாகவே ஃபர்ஸ்ட் க்ரை மக்கள் மத்தியில் ரீச் ஆக தொடங்கியது.
ஃபர்ஸ்ட் க்ரை ஆரம்பத்தில் சரக்கு அடிப்படையிலான பிசினஸ் மாதிரியைப் பின்பற்றியது. அதாவது புனே, டெல்லி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் சரக்கு கிடங்குகளை திறந்து, அங்கிருந்து நாடு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை அனுப்பிவந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, ‘ஃபர்ஸ்ட் க்ரை’ சில்லறை விற்பனையாளர்களை தன்னுடன் கூட்டு சேர்த்தது. அதாவது, லோக்கல் சில்லறை விற்பனையாளர்களின் தயாரிப்புகளை தனது இணையதளத்தில் விற்க வாய்ப்பை வழங்கிய ஃபர்ஸ்ட் க்ரை, அதேபோல், தனது தயாரிப்புகளையும் சில்லறை விற்பனையாளர்களின் கடைகளிலும் விற்க தொடங்கியது. இந்த முயற்சிகள் ஃபர்ஸ்ட் க்ரையின் விற்பனையை அவர்கள் நினைத்தைவிட அதிகரிக்க உதவியது.
விளம்பரத்திலும் தனித்துவம்
ஃபர்ஸ்ட் க்ரை-யின் இன்னொரு தனித்துவம், நிறுவனத்தை சந்தைப்படுத்த விளம்பரம் செய்வது போன்ற எந்தவொரு முயற்சியிலும் ஈடுபடவில்லை. இன்று வரை ஊடக விளம்பரங்களுக்காக ஃபர்ஸ்ட் க்ரை ஒரு பைசா கூட செலவழிக்கவில்லை. பெரும்பாலும் ஆன்லைன் தளங்களின் விளம்பரம் மட்டுமே. அதோடு, வாய்வழி விளம்பரத்தின் உதவியுடன் இந்திய சந்தையில் மிகப் பெரிய இடத்தை தக்கவைத்துக் கொண்டது.
வளர்ச்சி அதிகரிக்க, BabyHug மற்றும் CuteWalk என்கிற இரண்டு துணை நிறுவனங்களையும் ‘ஃபர்ஸ்ட் க்ரை’ தொடங்கியது. இதில், BabyHug குழந்தைகளுக்கான ஆடை நிறுவனமாகவும், CuteWalk குழந்தைகளுக்கான காலணி நிறுவனமாகவும் தொடங்கப்பட்டது.
இப்படி புதுமையான உத்திகள் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான யூனிகார்ன் அந்தஸ்துக்கு நிறுவனத்தை உயர்த்தியுள்ளது. அதுவும், இந்தியாவின் பிசினஸ் ஐகான்களான ரத்தன் டாடா, ஆனந்த் மஹிந்திரா ஆகியோரின் முதலீடுகளுடன் 2020-ல் யூனிகார்ன் என்கிற மதிப்பை எட்டியது.
மஹிந்திரா ரீடெய்ல் 2021-ஆம் ஆண்டில் ‘ஃபர்ஸ்ட் க்ரை’-யில் 10.48% பங்குகளை வாங்கியது. முதலீடுகள் அதிகரிக்க, ‘ஃபர்ஸ்ட் க்ரை’யின் கிளைகளும் விரிவடைந்தது. 508 நகரங்களில் 1,018 ஸ்டோர்கள் கொண்ட மிகப் பெரிய நெட்வொர்க் சாம்ராஜ்ஜியமாக மாறியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிலும் ஸ்டோர்கள் திறக்கப்பட்டுள்ளன.
தொலைநோக்கு பார்வை கொண்ட சுபம் மகேஸ்வரியின் புதுமை பண்பு மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, முயற்சிகள் மூலம் வணிக வரலாற்றில் தனது பெயரை அழுத்தமாக பொறித்துள்ளார்.
இ-காமர்ஸ் துறையில் ஒரு புரட்சியை முன்னெடுத்துள்ளார். கல்வியின் அடித்தளத்தில் இருந்து பெருநிறுவன வெற்றியின் உச்சம் வரை, அவரது பயணம் தொழில்முனைவோர் ஆர்வமுள்ள ஒவ்வொருவருக்கும் ஓர் உத்வேகம் ஆகும்.
யுனிக் கதை தொடரும்...
#100UNICORNS | ‘யுனிக்’ கதை 40 - Zenoti: சலூனில் உதித்த யோசனையில் எழுந்த சாம்ராஜ்ஜியம்!
Edited by Induja Raghunathan