குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.12.5 லட்சம் வென்ற மாற்றுத் திறனாளி பெண்!
மருத்துவர்களின் அலட்சியத்தால் பிறந்த போது இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்ட நூபுர், தற்போது அமிதாப் பச்சன் நடத்தும் ’கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ. 12.5 லட்சம் பரிசு வென்று சாதனை படைத்துள்ளார்.
மருத்துவர்களின் சிறு கவனக்குறைவு கூட சமயங்களில் நோயாளிகளின் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விடும். அதனால் தான் மருத்துவத் தொழிலை புனிதமானதாகக் கருதி கவனமாக கையாள வேண்டும் எனக் சொல்லப்படுகிறது. ஆனாலும், கோடிக்கணக்கான நல்ல மருத்துவர்கள் இருந்தாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில களைச் செடிகளைப் போல், கவனக்குறைவாக மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படித்தான் உத்தரபிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஒருவரின் கவனக்குறைவால், அலட்சியத்தால் ஒரு ஆரோக்கியமான குழந்தை மாற்றுத் திறனாளியாக மாறி விட்டது. ஆனால், யாரோ செய்த தவறால் தன் உடல் பாதிக்கப்பட்டாலும், உள்ளத்தின் திறனால் இன்று நாடெங்கும் பிரபலமாகி இருக்கிறார் தற்போது 29 வயதாகும் அந்தக் குழந்தை.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பிகாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் சிங். இவரது மனைவி கல்பனா சிங் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தபோது, பிரசவத்திற்காக கான்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சில மருத்துவர்கள் அலட்சியமாக அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர். பிறந்த பெண் குழந்தை அசைவின்றி கிடந்ததால், அது இறந்து விட்டதாகக் கூறி அறிக்கை அளித்து விட்டனர்.
இதனால் அக்குழந்தை குப்பையில் போடப்பட்டது. அப்போது அதன் உடலில் சிறிது அசைவு தெரியவே, அதனை எடுத்து வந்த சிலர், பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர். மேற்கொண்டு அளிக்கப்பட்ட சிகிச்சையால் அக்குழந்தை பிழைத்துக் கொண்டது. ஆனால், பிறந்தவுடன் மருத்துவர்களின் அலட்சியத்தால் அக்குழந்தையின் கால்கள் பாதிக்கப்பட்டு, மாற்றுத்திறனாளி ஆனது.
நூபுர் சிங் எனப் பெயரிடப்பட்ட அப்பெண் குழந்தை, கால்கள் நடக்க இயலாத மாற்றுத் திறனாளியாக வளர்ந்த போதும், படிப்பில் மற்றவர்கள் வியக்கும் வண்ணம் புத்திசாலியாக வளர்ந்தார். பள்ளிப்படிப்பை முடித்து, பி.எட். முடித்து நூபுருக்கு தற்போது 29 வயதாகிறது. பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
சமீபத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும், ‘கோன் பனேகா குரோர்பதி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு நூபுருக்கு கிடைத்தது.
அதில், 12 பொது அறிவு கேள்விகளுக்கு சரியாக பதிலளித்து ரூ. 12.5 லட்சம் பரிசாகப் பெற்றுள்ளார் அவர். இந்த நிகழ்ச்சியில் நூபுரின் தாயாரையும் அமிதாப் மேடைக்கு அழைத்து தனது பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
சிறுவயது முதலே நூபுர் பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் வல்லவராம். தற்போது சிறுகுழந்தைகளுக்கு ஆசிரியையாக உள்ள நூபுர், பத்தாம் வகுப்பு பிள்ளைகளுக்கு இலவசமாக வீட்டிலேயே டியூசன் எடுத்து வருகிறாராம்.
நூபுரின் இந்த வெற்றியால் மகிழ்ச்சியில் இருக்கும் அவரது தாய் கல்பனா சிங்,
“பள்ளியில் எப்போதுமே நூபுர் சிறந்த மாணவி தான். படிப்பில் படு சுட்டி. பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, முதல் முயற்சியிலேயே பி.எட். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். சிறு வயதில் இருந்தே நூபுருக்கு பொது அறிவு அதிகம். டிவியில் குரோர்பதி நிகழ்ச்சி பார்க்கும் போது, அமிதாப் கேட்கும் கேள்விகளுக்கு அங்குள்ள போட்டியாளர்கள் பதில் சொல்லும் முன்னரே நூபுர் சொல்லி விடுவார்.”
அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள விண்ணப்பித்தோம். இப்போது என் மகள் ரூ. 12.5 லட்சம் வெற்றியும் பெற்று விட்டார். அவரது பெயரும் பிரபலமாகி விட்டது. நிச்சயம் மற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நூபுர் சிறந்த முன்னுதாரணமாய் இருப்பார்,” என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
நூபுரின் இந்த வெற்றியை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போது அவர்கள் கிராமத்தின் நட்சத்திரமாக நூபுர் மாறி விட்டார். கிராம மக்கள் ஒவ்வொருவராக நூபுரை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.