தங்க முலாம் பூசப்பட்ட 'காஸ்ட்லி’ மிட்டாய்; ஒரு கிலோ என்ன விலை தெரியுமா?
டெல்லியில் ஷாகுன் ஸ்வீட்ஸ் என்ற இனிப்பகத்தில் தங்க முலாம் பூசிய மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டெல்லியில் 'ஷாகுன் ஸ்வீட்ஸ்' என்ற இனிப்பகத்தில் தங்க முலாம் பூசிய மிட்டாய் விற்பனைக்கு வந்துள்ளது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பளபளக்கும் வெள்ளி இழைகளால் அலங்கரிக்கப்பட்ட பல வகை இனிப்புகளை வாங்கி ரசித்து, ருசித்து சாப்பிட்டு இருப்போம். ஆனால், தங்க இழைகளால் சுற்றப்பட்ட இனிப்பு வகைகளை ருசிக்கும் வாய்பு அவ்வளவு எளிதில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. குறிப்பாக,
இதுபோன்ற ஒரிஜினல் தங்க முலாம் பூசப்பட்ட அல்லது தங்க இழைகளால் சுற்றப்பட்ட வடநாட்டு வகை இனிப்புகள் பெரும்பாலும் டெல்லி, மும்பையில் தான் தயார் செய்யப்படுகின்றன.
சமீபத்தில் டெல்லியைச் சேர்ந்த பிரபல ஸ்வீட் ஸ்டால் ஒன்றில் தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட விலை உயர்ந்த இனிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இன்டர்நெட்டைக் கலக்கும் ‘ஷாகுன் ஸ்வீட்ஸ்’:
டெல்லி மௌஜ்பூர் பகுதியில் அமைந்துள்ளது, ’ஷாகுன் ஸ்வீட்ஸ்’ இனிப்பகம். 1990ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் ராகேஷ் பன்சால், நரேஷ் பன்சால், தினேஷ் பன்சால், முகேஷ் பன்சால், சேத்தன் பன்சால் என பன்சால் குடும்பத்தினர் ஒன்றிணைந்து ஆரம்பித்த ஸ்வீட் கடை தான் ‘ஷாகுன் ஸ்வீட்ஸ்’. இந்த இனிப்பகத்தின் தரமும், சுவையும் பிரபலமடைந்ததை அடுத்தே தலைநகரான டெல்லியில் ஷாகுன் ஸ்வீட்ஸ் கடையின் கிளை திறக்கப்பட்டது.
பன்சால் குடும்பத்தினரால் 30 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ‘ஷாகுன் ஸ்வீட்ஸ்’ இனிப்பகத்தில் எந்த அளவிற்கு பழமைக்கும், பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதே அளவிற்கு புதுமையான ஸ்வீட் தயாரிப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அப்படி அவர்கள் தயாரிக்கும் புதுமையான, நாவின் சுவை அரும்புகளை தட்டி எழுப்பும் ஸ்வீட் வகைகள் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வைரலாவதும் உண்டு.
கடந்த ஆண்டு டெல்லி ஷாகுன் ஸ்வீட்ஸ் இனிப்பகம் அறிமுகம் செய்த ஹார்லிக்ஸ் பர்ஃபி இன்ஸ்டாகிராமில் செம்ம பிரபலமானது. பல்லாயிரக்கணக்கான வியூஸ் மற்றும் லைக்குகளைப் பெற்று சோசியல் மீடியா ட்ரென்டிங்கில் இடம் பெற்றது. தற்போது தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட மிட்டாயைத் தயாரித்து சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இன்ஸ்டாகிராமில் சமையல் கலை வல்லுனர் ஒருவர் சுடச்சுட மிட்டாய் தயார் செய்து, அதில் தங்க முலாம் பூசி, வாடிக்கையாளர்களுக்கு பகிர்கிறார். டெல்லி ஷாகுன் ஸ்வீட்ஸ் இனிப்பகத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இதுவரை 8 லட்சத்து 91 ஆயிரத்திற்கும் அதிகமான வீயூஸ்களைப் பெற்றுள்ளது.
தங்க இழை பூசப்பட்ட இனிப்பு வகை விற்பனைக்கு வருவது ஒன்றும் முதல் முறை இல்லையே, அப்படியிருக்க ஏன் இந்த பரபரப்பு என நீங்கள் நினைக்கலாம்.
இந்த மிட்டாய் விலை ஒரு கிலோ 16000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது தான் இணையத்தில் தாறுமாறு வைரலாக காரணமாக அமைந்துள்ளது.
ஒரு கிலோ ஸ்வீட் விலை 16 ஆயிரம் ரூபாயா...?? வாங்க முடியாட்டாலும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பாவது கிடைத்ததே கிடைத்ததே என இனிப்பு விரும்பிகள் பலரும் இந்த வீடியோவிற்கு கமென்ட் செய்து வருகின்றனர்.