குழந்தைகளும் இயக்கக்கூடிய கையடக்க கைத்தறி - பாரம்பரிய நெசவுக் கலையை 'ராட்டை' மூலம் புத்துயிரூட்டும் கலையரசி!
நெசவக் குடும்பத்தில் பிறந்து தறிகளின் மத்தியிலே வளர்ந்த கலையரசிக்கு, நாளடைவில் கிராமத்தில் நலிந்த கைத்தொழிலை மீட்டெடுக்க முடிவெடுத்தார். 'ராட்டை' எனும் நிறுவனம் தொடங்கி, 3 வயது குழந்தையும் இயக்கும் வகையில் கையடக்க கைத்தறி கருவிகளை தயாரித்து வருகிறார்.
நெசவு குடும்பத்தில் பிறந்து தறிகளின் மத்தியிலே வளர்ந்த கலையரசிக்கு, நாளடைவில் கிராமத்தில் ஏற்பட்ட கைத்தறி சப்தங்களின் குறைவு அவரது மண்டைக்குள் குடைச்சலை ஏற்படுத்தியது. உழைப்புக்கேற்ற ஊதியமின்மை, கடின உழைப்பு, நீண்ட நேரம் என நெசவாளர்கள் கைத்தறியினை கைவிடுவதற்கு காரணங்கள் அடுக்காகயிருந்தன.
அவற்றையெல்லாம் ஆராய்ந்து கொண்டேயிருந்த கலையரசி, தனது ஊரில் கைதறிக் கலையினை மீட்டெடுக்க 'ராட்டை' எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். 3 வயது குழந்தையும் இயக்கும் வகையில் கையடக்க கைத்தறி கருவிகளை தயாரித்து விற்பனை செய்து கைத்தறிக்கு உயிரூட்டி வருகிறார்.
கலையரசியின் பின்னணி
ஈரோடு மாவட்டம் சலங்கபாளையத்தை சேர்ந்த கலையரசி ராமச்சந்திரன், நெசவு குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை நெசவு தொழிலில் ஈடுப்பட மகளுக்கோ படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்பது இலக்கு. அதனாலே அவருக்கு திருமணம் முடிவு செய்தவுடன் அவரது வருங்கால கணவரை முதன்முதலில் சந்தித்தபோதே, திருமணத்திற்கு பிறகு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடர விரும்புவதாகவும், தொழில் செய்ய விரும்புவதாகவும் கூறினார்.
ஏனெனில், பொருளாதாரச் சிரமம் காரணமாக கலையின் மேல் படிப்பில் அவரது பெற்றோர்கள் ஆர்வம் காட்டவில்லை. அதை புரிந்துகொண்ட அவரின் வருங்கால கணவர், அவருடைய ஆசைக்கு 'ஆம்' என்றார். 2009ம் ஆண்டில் அவரைத் திருமணம் செய்து கொண்ட கலையரசி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தார்.
"2010ம் ஆண்டில், ஒரு நாள் இரவு நான் மீண்டும் படித்து வேலைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என என் கணவருக்கு மெசேஜ் அனுப்பினேன். அப்போது என் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. என் கனவுகளை நிறுத்த முடியவில்லை. என் கணவரும் உறுதுணையாக இருந்ததால் கொங்கு பொறியியல் கல்லூரியில் எம்சிஏ முடித்தேன்," என்றார்.
பட்டம் முடித்தபின் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு, அவர் ஒரு ஐடி மற்றும் AR-VR நிறுவனத்தில் டெவலப்பராக பணிபுரிந்தார். 9-5 பணிநேர வழக்கத்தில் சிக்கினார். இடையில் 2017ம் ஆண்டில், கலையரசி இரண்டாவது குழந்தையைப் பிரசவிப்பதற்காக சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
அப்போது, அவரது ஊர் திடுக்கிடும் சமூக-பொருளாதார நிலைமைகளை எதிர்கொண்டு வருவதைக் கண்டு கவலைக்கொண்டார். அவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே கைத்தறியிலிருந்து விசைத்தறிக்கு மாறி வணிகம் செய்து வந்தார். அவர் மட்டுமின்றி, அவரது கிராமத்திலிருந்த பலரும் விசைத்தறிக்கு மாறிடவே, 7500 ஆக இருந்த கைத்தறிகளின் எண்ணிக்கை 2500ஆக குறைந்திருந்தது.
கைத்தறி மூலம் நெசவு செய்வது கடினமானதாகவும், நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணியாக இருந்ததால் பெரும்பாலான நெசவாளர்கள் துணி பாய்களை தயாரிக்கும் பணிக்கு மாறினர்.
"ஆரம்பத்தில், மக்கள் புதிய நெசவு நிலைமை மற்றும் அதிக கூலியால் மகிழ்ச்சியாகவே இருந்தனர். ஆனால், அந்நிலையும் மாறியது. வயதானவர்கள் உள்ளூர் கட்டிடங்களில் காவலாளிகளாக வேலை செய்யத் தொடங்கினர். ஏராளமான மக்கள் அருகிலுள்ள திருப்பூருக்கு ஆடைத் தொழிற்சாலைகளில் இரட்டை ஷிப்டுகளில் வேலைக்குச் சென்றனர்," என்றார்.
பராம்பரியத்தை மீட்டெடுத்தல்..!
"தமிழகத்தில் உள்ள பல கிராமங்களுக்கு பயணம் செய்தபோது, நெசவாளர்கள் மாதம் வெறும் 5,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கின்றனர் என்பதை அறிந்தேன். அவர்கள் வீடுகளிலே 6க்கு 6 தறி அமைக்கலாம் என்றால் அதற்கும் வீட்டில் இடமில்லை. ரசாயன சாயங்களால் காவிரி ஆறு எப்படி மாசுபடுகிறது என்பதையும் கண்கூடக் கண்டுள்ளேன்," என்று பகிர்ந்தார் கலையரசி.
கிராமத்தின் நிலையை அவதானித்தவர் அதைப்பற்றி சிந்திக்க தொடங்கினார். அதுவே கிராமத்திற்கு மீண்டும் கைத்தறி நெசவுகளை கொண்டு வரும் எண்ணத்தைத் தூண்டியது. நெசவாளர்களுக்கு வேலை வழங்குவதற்காக சலங்கபாளையத்தில் உள்ள அவரது சொந்த வீட்டிலும் மற்றும் கிராமத்தில் மற்ற ஏழு இடங்களிலும் ஐந்து தறிகளுடன் ரூ.15 லட்ச முதலீட்டில் 'ராட்டை' எனும் நிறுவனத்தை கொரோனா தொற்றுக் காலத்தின் போது தொடங்கினார்.
இயற்கை சாயங்களை பயன்படுத்துவதுடன் வாழை நார், சணல் மற்றும் இதர பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் நூலைப் பயன்படுத்தினார். ஆனால், தரை விரிப்புகள் தயாரிப்பதற்கு தடிமனான நுாலைப் பயன்படுத்தி பழக்கமாகியிருந்த நெசவாளர்களை இந்த நூலைப் பயன்படுத்த வைப்பது அவருக்கு சவாலாக இருந்தது.
மேலும், அவர் பருத்தியை மொத்தமாக கொள்முதல் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், அவரை போன்ற இளம் வியாபாரிகளுக்கு அது சாத்தியமில்லாதது. அந்நேரத்திலே சற்று மாற்றியோசித்தார் கலையரசி. பாரம்பரிய கைத்தறி நெசவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் கையடக்க DIY கைத்தறி கருவிகளை உருவாக்கி கைத்தறியை முன்னோக்கி நகர்த்த முடிவு செய்தார். 3வயதுக்கு மேற்பட்ட குழந்தை தொடங்கி பெரியவர்கள் வரை இயக்கும் வகையில் 3 நிலைகளில், 3 விதமான கைத்தறி கருவிகளை வடிவமைத்தார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் இயக்கும் கையடக்க கைத்தறி!
'வீவ்மேட்' எனும் முதல்நிலை கைத்தறி கருவி கிட்டில் தறி சட்டகமும், குறைவான இயற்கையாக சாயம் பூசப்பட்ட நூலுடன் இருக்கிறது. அதைப்பயன்படுத்தி சிறிய பணப்பைகள், பர்ஸ்கள், சுவர் அலங்காரத் தொங்கல்கள் தயாரிக்கலாம். அடுத்த நிலைக்கு, 'வீவ்அல்லி' என்று பெயர். அதை பயன்படுத்தி கைப்பைகள், ஸ்டோல்கள் மற்றும் சற்றே பெரிய பொருட்களை தயாரிக்க முடியும். மூன்றாவது தறி கிட்டான, 'வீவ்ஃபிட்' தனிப்பயனாக்கக்கூடியது. அதில் துண்டுகள், கைக்குட்டைகள் மற்றும் வீட்டு அத்தியாவசிய பொருட்களை கூட நெசவு செய்ய பயன்படுத்தலாம்.
இம்மூன்று தறிகளிலிலும் எந்த வகையான நூலையும் பயன்படுத்தலாம்.அனைத்து தறிகளும் சலங்கபாளையத்தில் உள்ள ராட்டையின் யூனிட்டில் தயாரிக்கப்படுகின்றன. வீவ்மேட் ரூ.2,000 முதலும், வீவ்அல்லி ரூ.10,000 முதலும் மற்றும் ரூ.35,000 முதல் வீவ்ஃபிட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. ராட்டையின் இணையதளத்தில் நூலும் விற்கின்றார்.
"சிறு குழந்தைகளுக்கு, 'வீவ்மேட்' சிறந்த மோட்டார் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், கை-கண் ஒருங்கிணைப்புக்கும் உதவும். நாள் முழுவதும் கேஜெட்களையே பயன்படுத்துவதால் பெரும்பாலான குழந்தைகள் பெரும்பாலும் ஒரு கையைப் பயன்படுத்துகிறார்கள். வீவ்மேட், குழந்தைகள் இரு கைகளையும் சாமர்த்தியத்துடன் பயன்படுத்த உதவுவதோடு, அவர்களை நெசவு செய்ய ஊக்குவிக்கிறது. இதன் மூலம் அவர்கள் திரையில் செலவிடும் நேரமும் குறைக்கும்," என்றார்.
கையடக்க கைத்தறிகள் கிட்டில், பயனர் கையேடு மற்றும் QR குறியீடும் உள்ளது. அதை ஸ்கேன் செய்தால் தறியை எவ்வாறு அசெம்பிள் செய்வது மற்றும் பயன்படுத்துவது என்பது குறித்த யூடியூப் வீடியோவிற்கு பயனரை அழைத்துச் செல்கிறது. பயனர்கள் ஆன்லைனில் இணைந்திருப்பதன் மூலம் ஒருவொருக்கொருவர் தறியினை சரிசெய்தல், உதவிக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்புகள் பற்றி விவாதித்து கொள்கின்றனர்.
கைத்தறியினை குழந்தைகளிடம் சென்றடைய வைப்பதற்காக கலையரசி பல ஊர்களுக்கு சென்று அங்குள்ள பள்ளிகளில் தறிகளை காட்சிப்படுத்துகிறார். இதன் மூலம் குழந்தைகள் அதை ஒரு ஆக்டிவிட்டியாக கருதுவர். மேலும், பள்ளிகளும் பள்ளிகளில் சிறப்பு நெசவு கிளப்களை உருவாக்குவர் என்று நம்புகிறார். பள்ளிகளில் நெசவு பற்றிய பட்டறைகளையும், பெரியவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சியாகவும் நடத்துகிறார்.
இதுவரை, அவர் 150 கையடக்கத் தறி கருவிகளை தனிநபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்துள்ளார். இரண்டு தறிகளை ஆடை விற்பனையாளர்களுக்கு அவர்களது ஷோரூம்களில் காட்சிப்படுத்துவதற்காக விற்பனை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசின் 'ஸ்டார்ட்அப் திருவிழா' நிகழ்வில் கலந்து கொண்டு, கையடக்கத் தறிகளை அறிமுகப்படுத்தினார். மேலும், தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷனிடமிருந்து (டான்சீட்) மானியமாக ரூ.10 லட்சம் பெற்றுள்ளார். இதுமட்டுமின்றி சமீபத்தில், ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர் விருதையும், என்எஸ்ஆர்சிஇஎல் நிறுவனத்திடமிருந்து ரூ.5 லட்சம் நிதியையும் பெற்றார்.
"பல பள்ளிகளுக்கு சென்று தறிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். மற்ற கலை வகுப்புகளை போலவே நெசவு கலையும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என்று நம்புகிறோம். தறிகளை கார்ப்பரேட் பரிசுகளாக மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளோம்," என்று கூறிமுடித்தார்.
ஆங்கிலத்தில்: ரேகா பாலகிருஷ்ணன், த,மிழில்: ஜெயஸ்ரீ
கலாச்சாரத்தை பறைசாற்றும் பாரம்பரிய புடவைகளை கைத்தறி மூலம் மீட்டெடுக்கும் சென்னை தம்பதி!