‘பிராண்டிங் டு பிரச்சாரம் வரை...’ - அரசியல்வாதிகளை மாஸாக்கும் அரசியல் உத்தியாளர் நிரஞ்சன் ரமேஷ்பாபு!
இந்தியத் தேர்தலில் முக்கிய பங்காற்றுகின்றனர் அரசியல் உத்தியாளர்கள். டெக்னாலஜி, அரசியல் அப்டேட், தகவல் திறனாய்வு செய்யத் தெரிந்தவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் உத்தியாளர் நிரஞ்சன் ரமேஷ்பாபு.
2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் சுட்டெரிக்கும் சூரியனைத் தாண்டி அனல் பறக்க வேட்பாளர்களின் தீவிர வாக்கு சேகரிப்பு நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வரை தொலைக்காட்சி, செய்தித்தாள் என்று மட்டுமே விளம்பரங்களும், சாடல்களும் அதிகம் இருந்தது. ஆனால், இந்தத் தேர்தலில் களமே மாறுபட்டுள்ளது. மற்ற துறைகளில் டிஜிட்டல் மீடியம் முக்கியப் பங்காற்றுவதைப் போல தேர்தலிலும் சமூக ஊடகத்தின் பங்கு பிரதானமாகி இருக்கிறது. மக்களின் மனநிலை என்ன என்று அரசியல்வாதிகளால் மிக எளிதில் கணிக்க முடிந்தது, ஆனால் இப்போது படிப்பறிவு சதவிகித உயர்வு மக்கள் பல்வேறு விஷயங்களை அறிந்து வைத்திருப்பதால் அவர்களின் மனநிலையை அறிவது சவாலான விஷயமாக இருக்கிறது.
கட்சியினரால் ஒரு அளவிற்கு மேல் மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியாததால் பொதுவானவர்களான அரசியல் உத்தியாளர்களின் தேவை உள்ளது. கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் சந்தையில் இருக்கும் நிரஞ்சன் ரமேஷ்பாபு, தற்போது Political Analytics India என்ற அரசியல் உத்திகளை வழங்கும் நிறுவனத்தை நிறுவி, செயல்பட்டுவருகிறார். இந்தத் துறையில் இருக்கும் தொழில்வாய்ப்பு குறித்து யுவர்ஸ்டோரி தமிழ் இடம் பேசினார் நிரஞ்சன்.
“தமிழ்நாடு தொடங்கி இந்திய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளும் பெரும்பாலான திட்டங்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அரசியல் உத்தியாளர்கள் என்கிற நிலையில் தற்போதைய அரசியல் அரங்கம் இருக்கிறது. அது பிரபலமடைவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்க முடிகிறது என்பதே அந்த உத்தியாளருக்கு கிடைக்கும் வெற்றி.
அரசியல் பற்றி எல்லோருமே பேசத் தொடங்கி இருப்பதால், Political branding என்பது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. மற்ற துறைகளை ஒப்பிடும்போது அரசியல் உத்தியாளருக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. இந்தியாவில் 543 தொகுதிகள் உள்ளன இதில் கட்சி ரீதியாக வேட்பாளர்களை கணக்கிட்டாலே 4 ஆயிரம் வேட்பாளர்கள் இருப்பார்கள், எனவே, பல்வேறு விதங்களில் பல தொழில் வாய்ப்புகள் அரசியல் உத்தியாளர்களுக்கு உள்ளன.
“வட இந்தியாவைச் சேர்ந்தவர்களே இந்தத் துறையில் அதிகம் உள்ளனர், தமிழ்நாட்டை பொறுத்தவரையில் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே இந்தத் துறையில் உள்ளனர். விடாமுயற்சியாலும் கடினஉழைப்பாலும் எனது நற்பெறரை கடந்த 9 ஆண்டுகளாக நான் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன்...” என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிரஞ்சன்.
டிஜிட்டல் துறையில் நுழைந்தது எப்படி?
நான் படிப்பில் சுமாரான மாணவன் பி.டெக் ஐடி 21 அரியர்கள் வைத்து கடைசி ஆண்டில் எல்லா அரியர்களையும் ஒரே நேரத்தில் எழுதி தேர்ச்சி பெற்றேன். கல்லூரி படிக்கும் போதே டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் ஆர்வம் இருந்ததால் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலையை பகுதி நேரமாக செய்து வந்தேன். கூகுள் போன்ற தேடு இயந்திரம் பற்றி அதிகம் அறியப்படாமல் இருந்த காலம் அது. 2015ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்தேன், இத்தனை அரியர் வைத்திருந்த ஒரே மாணவன் நான் என்று எல்லோரும் என்னை எதிர்மறையாகத் தான் பார்த்தனர்.
ஆனால், அதே கல்லூரி 2021ல் ’சிறந்த சாதனையாளர்’ என்கிற விருதை எனக்கு கொடுத்து கௌரவித்தது. 2014 முதலே Data analysis, Business analysis என்று டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் இயங்கிக் கொண்டிருந்தேன், அதுமட்டுமின்றி, பி.டெக் முடித்த பின்னர் அதே தகவல் தொழில்நுட்பத்துறையில் எம்.பி.ஏ படித்தேன் என்கிறார் நிரஞ்சன்.
கள ஆய்வு முதல் பிரச்சாரம் வரை
2016 சட்டமன்றத் தேர்தலின் போது தமிழ்நாட்டில் ஒரு சிறிய பகுதியை எடுத்து களஆய்வு செய்தேன். 2017 சென்னை ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது அந்தத் தொகுதியில் என்னுடைய 6 பேர் குழுவினர் சிறிய அளவில் களஆய்வு செய்து மக்களின் மனநிலை என்ன என்பதை அறிந்து தகவல்களாக தொகுத்து மக்களிடம் எப்படி விளம்பரப்படுத்தலாம் என்ற வியூகத்தை வழங்கினோம். அதுவரையில் ஒரு நிறுவனமாக வைத்து செயல்படவில்லை, இந்தத் துறையில் வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதை சரியாக கணித்ததால் 2018ம் ஆண்டில் நிறுவனமாக தொடங்கினேன்.
“எங்களின் வியூகங்கள் தேர்தல் முடிவுக்கு ஏற்றாற்போல இருந்ததால் டிஜிட்டல் தளத்தில் நற்பெயர் கிடைக்கத் தொடங்கியது. இதன் எதிரொலியாக 2018ல் பெங்களூரில் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது நிறைய பேர் எங்களை அணுகினர். அப்போது ஒரு சிறிய பகுதியில் தேர்தல் களஆய்வு நடத்தி எப்படி டிஜிட்டல் மூலம் வாக்குகளைஅதிகரிக்கலாம் என்ற உத்தியை வகுத்து கொடுத்தேன். 2019 தேர்தலின் போது தமிழ்நாட்டில் ஒரு கட்சியுடன் இணைந்து செயல்பட்டேன்.”
ஐ-பேக்கில் கிடைத்த அனுபவம்
2021 தேர்தலின் போது தமிழகத்தில் இருந்த கட்சி ஒன்றிற்காக பிரபல அரசியல் வியூகரான பிரசாந்த் கிஷோர் கால்தடம் பதித்தார். அவருடைய ஐ- பேக் குழுவினருடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் நடந்த வாக்குசேகரிப்பு குழுவில் நான் செயல்பட்டேன்.
234 தொகுதிகளிலும் ஒரு வேட்பாளரை எப்படி நேர்மறையாளராக மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும், அவருக்கு எதிரான எதிர்மறையை எப்படி நேர்மறையாக்குவது என்பதை கவனிக்க வேண்டியது எங்கள் குழுவின் பொறுப்பு, அதிலும் குறிப்பாக வைரல் மார்க்கெட்டிங், டிவிட்டர் டிரெண்டிங் முழுவதும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது மிக பிரபலமான பல டிஜிட்டல் பிரச்சாரங்கள் உருவாக்கும் குழுவில் இணைந்து செயலாற்றி அனுபவத்தை பெற்றிருக்கிறேன், என்றார்.
பெயர் பெற்றுத் தந்த திட்டங்கள்
ஒரு செயல்திட்டத்தை மட்டுமே பிரசாந்த் கிஷோர் குழுவினர் கூறுவார்கள், அதனை எப்படி செயல்படுத்துவது எப்படி வெற்றியடையச் செய்வது என்பது அனைத்துமே உத்தியாளர்களான எங்களுக்கு கொடுக்கப்படும் பொறுப்பு. குறிப்பாக சொன்னால் “Don’t want tollgate” என்று டிஜிட்டலில் நான் நடத்திய ஒரு இயக்கம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இது முழுக்க முழுக்க என்னுடைய திட்டம், இதே போன்று 250க்கும் மேற்பட்ட செயல்திட்டங்களை நான் வகுத்துள்ளேன்.
2021ல் மேற்குவங்கத் தேர்தலின் போது சில காலம் பிரசாந்த் கிஷோர் குழுவினருடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன். 2021ல் அந்தமானின் போர்ட்பிளேர் முனிசிபல் கவுன்சில் தேர்தலின் போது ஒரு வேட்பாளருக்காக செயலாற்றினோம். ஒரு சிறிய குழுவினரை வைத்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பது முதல் தேவையான அனைத்து வாக்கு சேகரிப்பு யுத்திகளையும் வகுத்துக்கொடுத்தோம்.
அடுத்து, 2023ல் கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இரண்டு வேட்பாளர்களுக்கு தேர்தல் பிரச்சார செயல்திட்டம் மட்டும் பரிந்துரைத்தோம். 2022 உள்ளாட்சித் தேர்தலின் போது ஒரு வேட்பாளருக்காக களப்பணியாற்றினோம், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட ஒரு வேட்பாளருக்கான தேர்தல் ஆலோசனைகள், டிஜிட்டல் சந்தைப்படுத்துதலை செய்து கொண்டிருக்கிறோம், என்று அடுக்கிக்கொண்டே போனார்.
திறமையே மூலதனம்
டிஜிட்டல் மார்கெட்டிங் துறை பிரபலமடையாத காலத்தில் என்னை டெக்னாலஜிக்கு மாற பலரும் வலியுறுத்தினர். ஆனால், டிஜிட்டல் சந்தைப்படுத்துதலுக்கு வரவேற்பு இருக்கிறது என்று நான் நம்பினேன். அதே போல, 2016ல் ஜியோ இணையதள வசதியை அள்ளி வழங்க டிஜிட்டல் மீடியம் வேகம்பிடித்தது, அதனால் நான் இதே துறையில் தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினேன்.
”2018 முதல் ஐந்து வருடங்களாக அரசியல் உத்தியாளராகவும், தொழில்முனைவராகவும் நான் அறியப்படுகிறேன். 2018ல் Zeekable technologies private limitedஐ தொடங்கி அதன் மூலம் டிஜிட்டல் மார்கெட்டிங்ல் Product development மற்றும் அரசியல் உத்திகளை வகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறேன். முடியாது என்று மற்றவர்கள் ஒதுங்கி இருக்கும் துறையில் எந்த பின்பலமும், பணபலமும் இல்லாமல் முழுக்க முழுக்க என்னுடைய திறமையை மட்டுமே நம்பி முயற்சித்து இன்று அரசியல் வட்டாரத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கிறேன்.”
மற்ற அரசியல் ஆலோசனை தருபவர்கள், கட்சியுடன் இணைந்து செயல்படுகின்றனர், ஆனால் நான் வேட்பாளருடன் இணைந்து செயலாற்றுகிறேன். ஒரு வேட்பாளருக்கு இமேஜ் பிராண்டிங், பெர்சனல் பிராண்டிங் தொடங்கி செயல் மூலம் கள நிலவரத்தை சேகரித்துத் தருதல் என டிஜிட்டல் மற்றும் களப்பணி இரண்டையும் செய்கிறேன்.
அரசியல் களத்தில் செயல்படுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அதனால் அதை சிரத்தையுடன் செய்கிறேன். களத்தை பொறுத்தவரையில் பூத் அளவில் இருந்து தொடங்கி பூத் ஏஜென்ட்கள் வரை அனைத்தையும் கவனத்தில் கொள்கிறோம். தகவலை சேகரித்து அவற்றை எப்படி பிரிநிதித்துவப்படுத்தலாம் போன்ற எல்லா பணிகளையும் செய்கிறோம்.
அதே போல சர்வே மேலாண்மை அதாவது தொகுதி எத்தகையது, வாக்கு சதவிகிதம், வாக்காளர்களின் எண்ணிக்கை, எந்த கட்சிக்கு எந்த நேரத்தில் எவ்வளவு ஓட்டு கிடைத்துள்ளது, ஏன் சரிந்துள்ளது என்கிற புள்ளிவிவரங்களை துல்லியமாக கணித்து நிகழ்காலச் சூழலுக்கு ஏற்ற திட்டத்தை வேட்பாளருக்கு வகுத்துக் கொடுப்போம்.
அது தவிர டெக்னாலஜி மூலம் வேட்பாளருக்கென தனியாக இணையதளம், செயலி, நிதி திரட்டுவதற்கான தளம், ஊடக தொடர்பு போன்றவற்றை உருவாக்கித் தந்து கொண்டிருக்கிறேன். தேர்தலுக்கு கடைசி நேரத்தில் வேட்பாளருக்கென war room அமைத்து எப்படியாவது வாக்காளரிடம் இருந்து வாக்கு வாங்க வைப்பதற்கான உத்திகளை வகுத்துக் கொடுப்பேன்.
பிரகாசமான எதிர்காலம்
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகரும் களமிறங்குவதால் அரசியல் உத்தியாளர்களின் தேவை அதிகம் இருக்கும். கட்சிகளுக்கென ஐடி-விங் இருந்தாலும் அரசியல் உத்தியாளர்களின் வழிகாட்டுதல் இருந்தால் இலக்கை அடைய முடியும். சில வேட்பாளர்கள் செலவு செய்யத் தயங்கினாலும் பலர் விரும்பி எங்களை நாடி வருவதால் அவர்களுடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
என்னுடைய உத்திகளை அறிந்தவர்கள் என்னுடைய இணையதள பக்கமான https://www.politicalanalytics.in/ மூலமே என்னைத் தொடர்பு கொண்டு சேவையை பெறுகின்றனர்.
“என்னுடைய தொழில்முனைவு பற்றிய புரிதலை குடும்பத்தினரிடம் முதலில் ஏற்படுத்தினேன். நான் அரசியல்வாதியல்ல, அரசியல்வாதிகளுக்கு தேவையான பணிகளை மட்டுமே செய்து கொடுக்கிறேன் என்பதை புரிய வைத்தேன். தொடக்கத்தில் இதை ஏற்றுக்கொள்வது அவர்களுக்கு சிரமமாக இருந்தது, ஏனெனில் கட்டணத்தொகை முழுமையாக கிடைத்துவிடுமா என்கிற அச்சம் அவர்களுக்கு இருந்தது. ஆனால், ஒப்பந்தம் போட்ட பின்னரே அரசியல்வாதிகளுடன் இணைந்து செயலாற்றத் தொடங்குவோம் எனவே அதில் எந்த குளறுபடியும் இதுவரை ஏற்படவில்லை.”
இ-காமெர்ஸ், எலக்ட்ரிக்கல் போன்ற துறைகளில் டிஜிட்டல் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இதில் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வட்டாரம் அரசியல் மட்டுமே, அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இதனை ஒரு தொழிலாக எடுத்துச் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை. சில ஆண்டுகளாக தொடர்ந்து இதையே செய்து வருவதால் இதுவரை கொண்ட அனுபவத்தை வைத்து இப்போது முன்னோடியாக இருக்கிறோம்.
எனவே, எங்களின் எதிர்காலம் என்பது நிச்சயம் நேர்மறையாக இருக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். பணம் சம்பாதிப்பதைத் தாண்டி என்னை நம்பி வரும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதே இந்தத் துறையில் நிலைத்திருக்கச் செய்யும் என்கிற நம்பிக்கையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
பயிற்சி படிப்புகள்
அரசியல் ஆர்வம் இருக்கிறது, தகவல் திரட்டும் திறன் இருக்கிறது, டெக்னாலஜி பயன்பாட்டில் அப்டூடேட்டாக இருக்கிறீர்கள் என்றால் தயங்காமல் political analyst ஆகலாம். இது மட்டுமின்றி அரசியல் உத்தியாளர் என்பதை தொழிலாக எடுக்க விரும்புபவர்களுக்கான பயிற்சிகளைத் தரும் political leadership academy-யும் நான் நடத்தி வருகிறேன்.
2020ல் நேர்முக பயிற்சியாக இதனை கொடுக்கத் தொடங்கினோம். சுமார் 200 பேர் இந்தப் பயிற்சியில் சேர்ந்து படித்தனர். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு டிஜிட்டல் பிராண்டிங் மற்றும் அரசியல் பிராண்டிங் எவ்வளவு முக்கியமானது, உண்மைச் செய்திகளை எப்படி கண்டறிவது போன்ற பயிற்சிகளை அளித்தோம். சமூக ஊடகங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டரை எப்படி பயன்படுத்துவது போன்றவற்றை பயிற்சித்தோம்.
இதோடு நேர்மறை மற்றும் எதிர்மறை பிராண்டிங் செய்யும் முறை போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தோம். அதன் பின்னர், ஆன்லைனில் இந்தப் பயிற்சியை கொடுக்கத் தொடங்கி சுமார் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். தற்போதும் கூட தமிழ்நாட்டின் பெருநகரங்களில் வாரம் ஒருமுறை பயிற்சியை சுழற்சி முறையில் அளித்து வருகிறோம்.
“அரசியலில் ஆர்வம் இருக்கிறது ஆனால் அது குறித்த புரிதல் இல்லை என்பவர்களுக்கு முறையான பயிற்சியளித்து அவர்களை சிறந்த மக்கள் பிரதிநிதியாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்,” என்கிறார் துடிப்புடன் செயல்படும் நிரஞ்சன் ரமேஷ்பாபு.