Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ys-analytics
ADVERTISEMENT
Advertise with us

கல்லூரி இடைநிற்றலில் இருந்து தொழிலதிபராக நிமிர்ந்தது வரை: கெளதம் அதானியின் வியத்தகு பயணம்!

கல்லூரி இடைநிற்றலில் இருந்து தொழிலதிபராக நிமிர்ந்தது வரை: கெளதம் அதானியின் வியத்தகு பயணம்!

Wednesday August 31, 2016 , 3 min Read

இது வறிய நிலையிலிருந்து வளமான வாழ்வை நோக்கி பயணித்த ஒரு மனிதரின் கதையல்ல. எல்லாம் தலைவிதி என்று முடங்கிவிடாமல், ஒரு பெரும் வணிக சாம்ராஜ்யத்தை கட்டமைத்த ஒரு மனிதரின் கதை. இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான 'அதானி' குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் கௌதம் அதானியின் கதை!

பட உதவி: Businesstoday.in
பட உதவி: Businesstoday.in

பிற பெரும் தொழில் அதிபர்களை போல் அல்லாமல், அதானி தனது தொழில் அதிகாரத்தையும், நிலையையும் பரம்பரையாக பெற்றுவிடவில்லை. குஜராத்திய ஜைன குடும்பத்தைச் சேர்ந்த அதானி, தனது குடும்பத்தின் இயற்கை குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்தார். வட குஜராத்தில் உள்ள தாராட் என்னும் சிறிய டவுண் பகுதியிலிருந்து, அவரது பெற்றோரான சாந்தாபென்னும், சாந்திலால் அதானியும் தங்கள் எட்டு குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி அகமதாபாத் நகருக்கு இடம்பெயர்ந்தனர்.

அகமதாபாத்தில் உள்ள சேத் சிஎன் வித்யாலயாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், குஜராத் பல்கலைகழகத்தில் இளங்கலை வணிகவியல் படிப்பில் சேர்ந்தார் அதானி. அங்கு, கணக்குகளையும், புள்ளிவிபரங்களையும் பற்றி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது, முறையான கல்வி, தனக்குரியதாக இல்லை என உணர்ந்து கொண்டார். அதற்கு மாறாக, தனது நேரத்தை, இன்னும் சிறப்பான, பெரிய அளவிலான செயல்களை செய்வதில் செலவழிக்க முடியும் என உணர்ந்தார். இதனை தொடர்ந்து இரண்டாம் ஆண்டில், தனது கல்லூரி படிப்பை இடை நிறுத்தம் செய்ய, அவரது அந்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கையில் மொத்தமே இருந்த 100 ரூபாயுடன், பெருங்கனவுகளை சுமந்து மும்பைக்கு பயணமானார் கெளதம்.

மும்பையில் தொடங்கிய வெற்றி பாதை

மும்பை வந்த அவருக்கு மகேந்திரா பிரதர்ஸ் நிறுவனத்தின் மும்பை கிளையில் வைர வரிசைப்படுத்துநர் வேலை கிடைத்தது. வணிகத்தில், பல நுணுக்கங்களை கற்றதுடன், சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களையும், தனது கணிப்புகள் மூலம் கண்டறிந்த பின்னர், 'சாவேரி பசார்' என்ற பெயரில் சொந்தமாக ஒரு வைரத் தரகு நிறுவனத்தை துவங்கினார். இவரது இந்த தொழில், மும்பை நகரில் தன்னிகரில்லா ஒன்றாக வளரத்துவங்கியது. இது அதானிக்கு முதல் மைல்கல்லாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து ஒரு வருடம் சென்ற நிலையில், அவரது மூத்த சகோதரர் அகமதாபாத்தில் பிளாஸ்டிக் தொழில் நிறுவனம் ஒன்றை வாங்கினார். அவர் அதானியிடம், சொந்த ஊருக்கு திரும்பி, அதன் கிளை ஒன்றை எடுத்து நடத்தும் படியும் கோரினார். இந்த முடிவு, கௌதமின் வாழ்க்கையையே திருப்பிப் போட்டது. பிளாஸ்டிக் தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப்பொருளான பாலிவினைல் குளோரைடை இறக்குமதி செய்ய அவர் எடுத்த முடிவு, உலகச் சந்தையில் அவரது வருகையை உறுதி செய்தது.

பொருளாதார தாராளமயமாக்கல் கௌதமிற்கு அதிக அளவில் வாய்ப்பை அள்ளி வழங்கும் ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது. அப்போதிருந்த சந்தையின் சூழல்களை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, 1988 இல் 'அதானி குழுமம்' என்று அவர் நிறுவினார். எதிர்காலத்தில் ஒரு பன்னாட்டு கூட்டு குழுமமாக உருவெடுத்த இது, தனது ஆரம்பக் காலக்கட்டங்களில் விவசாயப் பொருட்கள் மற்றும் மின்சக்திகளில் கவனத்தை செலுத்தியது. 1991 ஆம் ஆண்டுவாக்கில் இந்த கம்பெனியானது, வளங்கள் மற்றும் மின்சக்தி என இரண்டிலுமே வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணப்பட்டது. இந்த வேளையில் தான் கம்பெனியின் சரக்குகளையும், நலன்களையும் வகைப்படுத்த பொருத்தமான நேரம் என கௌதம் நம்பினார்.

அதிலிருந்து, மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானத்தை முக்கிய நோக்கமாக கொண்ட எனர்ஜி மற்றும் லாஜிஸ்டிக் கூட்டுக் குழுமம், நிலக்கரி வர்த்தகம் மற்றும் சுரங்க தொழில், எரிவாயு விநியோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பணைகள் ஆகியவற்றுடன் துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிர்வகிக்கும் ஒரு மாபெரும் குழுமமாக அதானி குழுமம் உருவெடுத்தது. பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்த வியாபார நிறுவனத்தை சொந்தமாகக் கொண்டு அதனை நிர்வகித்தாலும், கௌதம் ஒருபோதும் தனது எளிமையான ஆரம்பகாலத்தை மறந்துவிடவில்லை. அதனாலேயே அவர் சமூகத்திற்கு சேவை செய்வதிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். அதானிக் குழுமத்தின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவரும், பல் மருத்துவருமான அவரது மனைவியின் உதவியுடன், கல்வி, சமூக சுகாதாரம், நிலையான வாழ்வாதாரத்திற்கான வளர்ச்சி, கிராமப்புற கட்டமைப்புகளை மேம்படுத்தல் உள்ளிட்ட தன்னலமற்ற சேவைகளில் ஈடுபட்டு வருகிறார்.

“சமுதாயத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நிலையான, ஒருங்கிணைந்த வளர்ச்சியை உருவாக்குவது ஒரு சமூக கடமையுடன் கூடிய அர்ப்பணிப்புமிக்க பணி.” என்ற சீரிய சிந்தனையுடன் அவர் செயல்பட்டு வருகிறார்.

சவால்களும், பிரச்சனைகளும்

இவரது தொழில் பயணத்தில், அரசுடன் சில மோதல்களை சந்திக்க நேரிட்டது. சரியாக ஒதுக்கீடு செய்யப்படாத நிலம் சம்பந்தமான சர்ச்சையை ஒரு முறை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்துடன், அவரது பல தொழிற்சாலைகள் அரசின் சுற்றுச்சூழல் துறையின் சான்றிதழ் பெறாததால், சில நேரங்களில் உயர் நீதிமன்றத்தின் கண்டனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும், கௌதம் தனது பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர்கொள்ளுகிறார்.

”அரசுடன் செயல்பட வேண்டும் என்றால் நீங்கள் லஞ்சம் கொடுக்கிறீர்கள் என்பது பொருள் அல்ல” என்ற கருத்தை தான் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளில் பல முறை கூறியுள்ளார்.

இத்தகைய பிரச்சினைகள் பல இருந்தும், கௌதம் உடுப்பி அனல் மின் உற்பத்தி நிலையத்தை ஜெ.டபிள்யூ ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்கனரான சஜ்ஜன் ஜிண்டாலிடமிருந்து 6000 கோடி ரூபாய் விலை கொடுத்து கையகப்படுத்தினார். இந்த கடுமையான வியாபார ஒப்பந்தத்தை கௌதம் இரண்டே நாட்களில் செய்து முடித்தார் என்ற வதந்திகளும் இந்த வியாபார ஒப்பந்தத்தின் பின்னணியில் எழுந்தது.

54 வயதை அடைந்த அவரின் சாதனைகளும், மெய்சிலிர்க்கும் வெற்றிப் பயணக்கதையும், அவர் மீதான மரியாதையை இன்னும் அதிகரிக்கவே செய்கிறது. வெற்றியின் திறவுகோல் தொடர்ந்து கற்பதில் தான் இருக்கிறது என அவர் சொல்வது வழக்கம். இதே தாரகமந்திரத்துடன் அவர், மற்றொரு பில்லியன் டாலர் மதிப்புள்ள நிறுவனத்தையும் கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார்.

ஆங்கிலத்தில்: சஞ்சனா ரே