வளர்த்தவர் இறந்தது தெரியாமல் வூஹான் மருத்துவமனையில் காத்திருக்கும் நாய்!
சீனாவின் கொரோனா மையப்பகுதியான வூஹானில் மருத்துவமனை ஒன்றில் வாயிலில் தன்னை வளர்த்தவருக்காக கடந்த 3 மாதங்களாக காத்திருக்கும் ஒரு நாயின் புகைப்படம் இது...
நன்றியுள்ள பிராணியாகவும், மனிதரின் சிறந்த நண்பனாக எப்போதும் விளங்கும் நாய், தன்னுடைய செயல்களால் பலமுறை மனிதர்களிடம் அதன் அன்பினை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் பலவற்றை படித்தும், நேரில் பார்த்தும் உள்ளோம். அதனால் தான் மனிதனுக்கும் நாய்க்கும் உள்ள உறவு என்பது என்றென்றும் போற்றப்படுவதாகவே இருக்கிறது.
அண்மையில், சமூக ஊடகத்தில் பயனர் ஒருவர் பதிவிட்ட ஒரு நாயின் காத்திருப்பு, இவ்வுலகையே திரும்பிப் பார்க்கவைத்தது. அதில்,
சீனாவின் கொரோனா மையப்பகுதியான வூஹானில் மருத்துவமனை ஒன்றில் வாயிலில் தன்னை வளர்த்தவருக்காக கடந்த 3 மாதங்களாகக் காத்திருக்கும் ஒரு நாயின் புகைப்படம் அது...
ட்விட்டரில் இப்படத்தை பதிவிட்ட அவர்,
“இந்த நன்றியுள்ள பிராணி, தன்னை வளர்த்தவருக்காக இங்கே காத்திருக்கிறது. 3 மாதங்களுக்கு முன் கொரோனா தாக்கி, அனுமதிக்கப்பட்ட 5வது நாளே அவர் இறந்து போனார். ஆனால் அது தெரியாமல், தன் அன்பானவர் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் இந்த நாய் மருத்துவமனை வாசலிலேயே 3 மாதங்களாக அமர்ந்து காத்திருக்கின்றது...
ஜியோ பாவ் என்ற 7 வயது நாய், தன் உரிமையாளருக்காக பொறுமையாக வூஹான் மருத்துவமனையில் காத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்திலும், நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. வூஹான் மருத்துவமனை ஊழியர்கள், அந்த நாய்க்கு உணவு கொடுத்து வருகின்றனர். இருப்பினும் அதனிடம் அதனை வளர்த்தவர் இனி வரமாட்டார் என எப்படி தெரிவிப்பது என்று தெரியாமல் இருந்தனர்.
வூஹான் மருத்துவமனைக்குக்குள் இருந்த ஒரு சூப்பர் மார்கெட்டின் கடைக்காரர், தினமும் இந்த நாயை கண்டார். பசியால் வாடியிருந்த அதற்கு ஜியோ பாவ் என பெயரிட்டு, தினமும் தன் கடையில் இருந்து உணவு அளித்துள்ளார்.
“நான் பலமுறை அந்த நாயை அங்கிருந்து அனுப்ப முயற்சித்தேன். ஆனால் அது பிடிவாதமாக மருத்துவமனை வாசலிலேயே அமர்ந்திருந்தது. சிலமுறை வேறு ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று ஜியோ-வை விட்டுவந்தேன், ஆனால் அப்போதும் அது சரியாக அந்த மருத்துவமனைக்கு திரும்பியது,” என்கிறார் அந்த கடைக்காரர்.
பின்னர் நாய்கள் பாதுகாப்பு அமைப்பிடம் தெரிவித்து, ஜியோ-வை அழைத்துச் செல்ல கேட்டுக்கொண்டனர் மருத்துவமனை அதிகாரிகள். அதனைத் தொடர்ந்து நாய்கள் காப்பாகத்தில் ஜியோ சேர்க்கப்பட்டதாக டெய்லி மெயில் தெரிவித்தது.
ஜியோ-வின் காத்திருப்புப் புகைப்படங்கள் பலமுறை உலகமக்கள் பலராலும் பகிரப்பட்டு வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி: The New Indian Express | படங்கள்: டிவிட்டர்