சொந்த ஊருக்குச் செல்ல அப்பாவை சைக்கிளில் 1,200 கி.மீ ஓட்டிச் சென்ற சிறுமி!
வருமானம் இல்லாத நிலையில் ஜோதி தனது அப்பாவை டெல்லியில் இருந்து தர்பாங்கா வரை சைக்கிளில் ஓட்டிச் சென்றுள்ளார்.
கொரோனா வைரஸால் தினக்கூலிகளும் புலம்பெயர் தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் பலர் பணியையும் வருவாயையும் இழந்ததால் சொந்த ஊர்களுக்கு திரும்பச் செல்லவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பலர் நடந்தே ஊர் திரும்புகின்றனர்.
இருப்பினும் நான்காம் கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப சிறப்புப் பேருந்துகளும் ரயில்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சிறப்புப் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்பு நடந்த சம்பவம் இது. ஜோதிக்கு 15 வயது. இவரது அப்பாவிற்கு காலில் காயம் ஏற்பட்டிருந்தது. இவர்கள் டெல்லியில் வசித்து வந்தனர். வருமானம் இல்லாத காரணத்தால் இவர்கள் தங்கியிருந்த அறை வாடகையை கொடுக்க முடியாமல் போனது. எனவே சொந்த ஊரான தர்பாங்கா பகுதிக்குத் திரும்பச் செல்ல முடிவெடுத்தனர்.
டெல்லியில் இருந்து சென்றுகொண்டிருந்த ட்ரக் ஓட்டுநர் ஒருவரை அணுகினார்கள். பீஹார் வரை செல்ல உதவி கேட்டனர். ஆனால் அவர் 6,000 ரூபாய் கேட்டுள்ளார்.
அவர்களால் அந்தத் தொகையை செலவிடமுடியவில்லை. எனவே 500 ரூபாய் செலவிட்டு சைக்கிள் ஒன்றை வாங்கினார்கள். ஜோதியின் அப்பா ரிக்ஷா ஓட்டுநர் என்றாலும் அவரது காலில் காயம் இருந்ததால் அவரால் சைக்கிள் ஓட்ட முடியவில்லை.
ஜோதி தனது அப்பாவை சைக்கிளில் உட்காரவைத்து டெல்லியில் இருந்து தர்பாங்கா வரை ஓட்டிச் சென்றுள்ளார். மே 10-ம் தேதி தொடங்கி 1,200 கி.மீட்டர் வரை சைக்கிளை ஓட்டி தன் பகுதியை சென்றடைந்துள்ளார்.
“நாங்கள் டெல்லியை விட்டுக் கிளம்பியபோது எங்களிடம் 600 ரூபாய் மட்டுமே இருந்தது. இரவும் பகலும் தொடர்ந்து சைக்கிள் ஓட்டினேன். இரவு நேரங்களில் இடையிடையே இரண்டு அல்லது மூன்று மணி நேரம் வரை பெட்ரோல் பங்கில் ஓய்வெடுத்துக்கொண்டோம். பெரும்பாலும் நிவாரண முகாம்களில் சாப்பிட்டோம். வழியில் சிலர் உணவு கொடுத்து உதவினார்கள்,” என்று SheThePeople இடம் ஜோதி குறிப்பிட்டார்.
இந்த நீண்ட பயணத்தில் இடையிடையே ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். நெடுஞ்சாலைகளில் செல்லும்போது விபத்து ஏற்படுமோ என்கிற கவலை இருந்ததாக ஜோதி குறிப்பிடுகிறார்.
“சைக்கிளை இரவில் ஓட்டும்போது பயம் ஏற்படவில்லை. ஏனெனில் நூற்றுக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வதைப் பார்க்கமுடிந்தது. சாலை விபத்துகள் மட்டுமே பயத்தை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக நாங்கள் பாதுகாப்பாக ஊர் திரும்பிவிட்டோம்,” என்று தெரிவித்துள்ளார் ஜோதி.
மே 16-ம் தேதி தர்பாங்காவில் உள்ள அவர்களது கிராமத்தைச் சென்றடைந்தனர். சைக்கிளில் இவர்கள் வருவதைக் கண்டு கிராமமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே அவர்களுக்கு உணவும் தண்ணீரும் கொடுத்துள்ளனர். மறுநாள் சிறுளியில் உள்ள அரசினர் நடுநிலைப் பள்ளியில் அவர்களுக்கு ஸ்கிரீனிங் செய்யப்பட்டது.
தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்த அனைவரும் ஆண்கள். ஜோதி மட்டுமே பெண் என்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டார்.
கட்டுரை: THINK CHANGE INDIA