Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

உலகச் சுகாதார மைய நிர்வாக வாரியத் தலைவர் ஆனார் டாக்டர்.ஹர்ஷவர்தன்!

“உலகச் சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் கூட்டணியின் முக்கியத் தத்துவமாக இது உள்ளது. இருப்பினும் இதற்கு நாடுகளின் ஒருங்கிணைந்த உயர்ந்த லட்சியம் தேவைப்படுகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உலகச் சுகாதார மைய நிர்வாக வாரியத் தலைவர் ஆனார் டாக்டர்.ஹர்ஷவர்தன்!

Saturday May 23, 2020 , 2 min Read

மத்தியச் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷவர்தன், 2020-2021-ஆம் ஆண்டுக்கான உலகச் சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று மெய்நிகர் முறையில் நடைபெற்ற நிர்வாக வாரியத்தின் 147-வது அமர்வில் ஜப்பானின் டாக்டர். ஹிரோகி நகாடானிக்குப் பதிலாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.


நிர்வாக வாரியத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட டாக்டர். ஹர்ஷவர்தன், உலகப் பெருந்தொற்றான கோவிட்-19 பாதிப்பால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். கோவிட் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்கள சுகாதாரப் பணியாளர்களுக்கும், இதர கோவிட் வீரர்களுக்கும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவிப்பதுடன், அவர்களது கண்ணியம், உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்புக்கு தலைவணங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

1
“உங்கள் அனைவரது நம்பிக்கையால் நான் பெரிதும் கவுரவிக்கப்பட்டதாக உணர்கிறேன். எங்களுக்கு அளித்துள்ள இந்தக் கவுரவம் குறித்து இந்தியாவும், எனது நாட்டு மக்களும் பெருமித உணர்வு கொள்கின்றனர்,’’ என்று அவர் கூறினார்.

கோவிட் பரவல் மனிதகுலத்துக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரும் சோகம் என்று தெரிவித்த அவர், அடுத்த 20 ஆண்டுகளில் இது போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றார்.


“இந்த அனைத்து சவால்களும் ஒருங்கிணைந்த முயற்சியின் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், ஒருமித்த அச்சுறுத்தல்களுக்கு ஒன்றுபட்ட பொறுப்பு தேவையாகும்,’’ என்று அவர் கூறினார்.

“உலகச் சுகாதார அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகளின் கூட்டணியின் முக்கியத் தத்துவமாக இது உள்ளது. இருப்பினும் இதற்கு நாடுகளின் ஒருங்கிணைந்த உயர்ந்த லட்சியம் தேவைப்படுகிறது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

“நமது சுகாதார முறைகளின் முன்னேற்பாடுகள் மற்றும் வலுப்படுத்துதலைப் புறக்கணித்தால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு இந்தப் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற உலக அளவிலான நெருக்கடி நிலையில், அபாய மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த உலகக் கூட்டுறவு அவசியமாகும். இதன் மூலம் உலகப் பொது சுகாதாரத்தில் முதலீட்டை அதிகரித்து அதற்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்,’’ என்று அவர் கூறினார்.


கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவின் அனுபவங்களை டாக்டர்.ஹர்ஷவர்தன் பகிர்ந்து கொண்டார்.

“இந்தியாவில் இறப்பு விகிதம் 3 சதவீதமாக மட்டுமே உள்ளது. 135 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில், ஒரு லட்சம் பேர் மட்டுமே கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமானவர்கள் விகிதம் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். இருமடங்காகும் விகிதம் 13 நாட்கள்,’’ என்று அவர் தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளாக மனிதக் குலத்தைப் பாதித்து வரும் நோய்களைத் தடுக்க உயரிய ஈடுபாட்டு உணர்வு அவசியம் என்று உலகச் சுகாதார அமைப்பின் நிர்வாக வாரியத்தின் புதிய தலைவர் என்ற முறையில் டாக்டர்.ஹர்ஷவர்தன் வலியுறுத்தினார்.


உலக ஆதாரங்களைத் திரட்ட ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும், நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்க தீவிர வழி வகைகள் தேவையாகும். உலக அளவில் மருந்து, தடுப்பு ஊசி பற்றாக்குறையைப் போக்க சீர்திருத்தங்கள் அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.


“உறுப்பு நாடுகளும், தொடர்புடைய இதர பிரிவினரும் சீர்திருத்தங்களை மேற்கொள்ள நிலையான ஈடுபாட்டை  நிச்சயம் அளிப்பார்கள் என நான் கருதுகிறேன். இதன் மூலம், நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில் முன்னேற்றத்தை ஊக்குவிக்க முன்வருவார்கள்.

மேலும், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டும், ஆதாரங்களைப் பயன்படுத்தியும் உலகத்தின் சுகாதார முயற்சி இலக்குகளைத் திறம்பட எட்டமுடியும். நமது இந்த அமைப்பின் கூட்டு நோக்கத்தை நிறைவேற்றவும், நமது அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டுச் செயல்திறனைக் கட்டமைக்கவும், கூட்டுத் தலைமையை உருவாக்கவும் நான் பணியாற்றுவேன்,” என்று அவர் கூறினார்.

தகவல்: பிஐபி