100மீ உலக பல்கலைக்கழக விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை டூட்டி சந்த்!
அதிவேக ஓட்டப்பந்தய வீராங்கனையான டூட்டி சந்த் இத்தாலி நாப்போலியில் நடந்த 30வது சம்மர் பல்கலைக்கழக விளையாட்டில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இந்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அரை இறுதிச்சுற்றில் 11.41 நொடிகளில் வென்று இறுதிச்சுற்றுக்கு தகுதியான முதல் இந்தியரானார், அதன்பின் செவ்வாய்க்கிழமை நடந்த இறுதிச்சுற்றில் 11.32 நொடிகளில் போட்டியை முடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த டெல் பாண்டே 11.33 நொடிகள் பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
ஒடிஸாவைச் சேர்ந்த 23 வயதான டூட்டி சந்த், 30வது கோடைகால சர்வதேச பல்கலைக்கழக 100 மீட்டர் பந்தயத்தில் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இந்தியர். வெற்றி பெற்றவுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் சந்த்
பல வருட கடின உழைப்பு மற்றும் உங்கள் ஆசீர்வாதங்களுடன், நாப்போலியின் உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் 11.32 வினாடிகளில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று சாதனையை மீண்டும் முறியடித்துள்ள டூட்டி சந்துக்கு ட்விட்டர் வழியே இந்திய ஜனாதிபதி தனது பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துவிட்டு, “இந்த முதல் தங்கம் இந்தியாவிற்கு பெருமையை தேடி தந்துள்ளது. இதே முயற்சியை ஒலிம்பிக்கில் செலுத்தி வெற்றிபெறுங்கள்..." என்றார். அதற்கு நன்றி தெரிவித்த டூட்டி,
அடுத்து ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்ல எல்லா முயற்சியும் எடுப்பேன் என்று பதில் ட்வீட் போட்டார்.
கடந்த மே மாதம் தலைப்புச் செய்தியாகவும் அவரின் அறிவிப்பை சர்ச்சையாக்கி, பல விவாதங்களுக்கு உள்ளானார் டூட்டி. இவர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்ற தகவலை வெளியிட்டபோது இந்த பரபரப்பை ஏற்படுத்தினார்.
தாங்கள் ‘ஒரே பாலினத்தை விரும்புகிறவர்கள்’ என்று ஒரு சில விளையாட்டு பிரபலங்களே தைரியமாக வெளிஉலகுக்குச் சொல்லி இருக்கிறார்கள். அந்த பட்டியலில் டூட்டி சந்தும் இணைந்துள்ளார்.இதற்கு பல எதிர்ப்புகள் வந்தன. அதற்கு பதிலளிக்கும் வகையில்,
"என்னை எவ்வளவு கீழே தள்ளினாலும் மீண்டும் வலிமையாக எழுந்து வருவேன்...” என தன் பதக்க போட்டோவுடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார் டூட்டி"
100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாதனைப் படைத்திருக்கும் டூட்டி சந்த் ஆசிய போட்டியில் இரண்டு முறை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஒடிசாவில் நெசவாளர்கள் குடும்பத்தில் பிறந்து இன்று தடகளத்தில் சாதிக்கும் இவர் பெண்களுக்கெல்லாம் முன் உதாரணம்!