மொபைல் போன் பயன்பாட்டிற்கு அடிமை ஆகிவிட்டீர்களா? அதிலிருந்து விடுபட சில டிப்ஸ்!
மனிதனின் கட்டுப்பாட்டில் வளர்ந்த கண்டுபிடிப்புகள் இன்று மனிதனை கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. செயலூக்கம் செய்ய வேண்டிய கைபேசி செயலிகள் இன்று நம்மை செயலிழக்க செய்து வருகிறது. பின் வரும் உக்திகளின் மூலமாக மொபைல் போன் பயன்பாட்டினை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம்!
கடிகாரம் நமக்கு நேரத்தை மட்டும் காட்டவில்லை அது நமது ஒவ்வொரு செயலிலும் நமக்கான நேரத்தை நிர்ணயிக்கிறது.
இதோ உங்களுக்காக சில உக்திகள்...
1) மொபைல் போன் பயன்பாட்டின் மூலம் செய்யப்படும் வேலைகளை, மாற்று வழிகள் மூலம் செய்வது :
உதாரணமாக, செய்திகளை கைபேசி செயலிகளில் படிக்காமல் செய்தித்தாளில் படிப்பது, பாடல் மற்றும் இசைகளுக்கு வீட்டில் இருக்கும் வானொலி/தொலைக்காட்சிகளை பயன்படுத்துவது, மின்நூல் புத்தகங்களுக்கு பதிலாக அச்சு பதிவு புத்தகங்களை பயன்படுத்துவது போன்று ஏதேனும் பழைய முறைகளை முயற்சிக்கலாம்.
2) செயலிகளின் அறிவிப்புகளுக்கு (Notifications) கட்டுப்பாடு விதிக்கவும்:
சமூக வலைதளம் மற்றும் விளையாட்டு தொடர்பான அறிவிப்புகளை நீக்கவும். இதன் மூலம் உங்கள் ஆர்வம் தூண்டப்படுவது தவிர்க்கப்படுகிறது.
3) நீண்ட கடவுச்சொற்களை பயன்படுத்தவும் :
நீண்ட கடவுச்சொற்களை பயன்படுத்தும் போது நமக்கு விருப்பம் குறைகிறது, குறிப்பாக நீண்ட அர்த்தமுள்ள வாக்கியங்களை கடவுச்சொல்லாக பயன்படுத்தும் போது அது நமக்கு எச்சரிக்கையை நினைவுபடுத்துகிறது.
உதாரணமாக : leave me alone, I hate mobile phone, இது போன்று ஏதேனும் முயற்சி செய்து பார்க்கலாம்.
4) திரை ஒளியின் நேரத்தை குறைக்கவும்:
அமைப்பில் (settings) இதை செயல்படுத்த முடியும். சராசரியாக 20 நொடிகள் கைபேசியை பயன்படுத்தாத போது திரை ஒளியை மறைப்பது நல்லது. இதன் மூலம் நேரத்தையும் பேட்டரியையும் சேமிக்க முடியும்.
5) தவிர்க்க வேண்டியவை:
நகைச்சுவையை மட்டும் குறிக்கோளாகக் கொண்டுள்ள முகநூல் பக்கங்களை குறிப்பாக நடிகர்களை சார்ந்துள்ள பக்கங்களையும் அது தொடர்பான பதிவுகளையும் தவிர்ப்பது நல்லது. பயனற்ற குழுக்களில் இருந்து வெளிவருவதும் நல்லதே.
6) கைபேசியை பயன்படுத்தும் நேரத்தை கணக்கிடவும்:
எண்கள் நமது எண்ணங்களை மாற்றும் வலிமை கொண்டவை. முள்ளை முள்ளால் எடுப்பது போல, நாம் பல செயலிகளில் செலவிடும் நேரத்தை ஒரு சில செயலிகள் மூலம் கணக்கிட்டு நேரத்தை கட்டுபடுத்த முடியும். இதன் மூலம் கண்கூடாக நமது நேர விரயத்தையும் அதற்குக் காரணமான செயலிகளையும் கண்டறிய முடியும். இதெற்கென நிறைய இலவச செயலிகள் சந்தையில் உள்ளன.
நான் பயன்படுத்தியது : QualityTime (Android App).
7) கைக்கு எளிதில் எட்டாத தொலைவில் கைபேசியை வைக்கவும்:
கைபேசியை அதிகம் தேவைப்படாத நேரங்களில் தொலைவில் வைக்கவும், குறிப்பாக இரவு நேரங்களில் இப்படி சிறிது தொலைவில் வைக்கும் பொழுது நீண்ட தூக்கத்தினை பெற முடியும் .
முன் குறிப்பு : கைபேசியை தொலைந்து போகாத அளவுக்கு தொலைவில் வைத்திருப்பது நல்லது.
8) புதிதாக ஏதேனும் ஒரு செயலில் ஆர்வத்தை அதிகரிப்பது:
விருப்பமான ஒரு செயலில் இருந்து விடுபட, புதிதாக ஒரு செயலில் விருப்பத்தை உண்டாக்குவது சிறந்த வழி.
உதாரணமாக: படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது, ஓவியம் வரைவது அல்லது எழுதுவது இது போன்று ஏதேனும் ஒரு செயலில் முயற்சித்துப் பார்க்கலாம்.
நீங்களும் இது போன்று முயற்சி செய்து அல்லது முயற்சி செய்கின்ற வழிமுறைகளை கீழே எழுதலாம்...
(இக்கட்டுரையை எழுதியவர் எஸ்.ரகுபதி. இவர் ஒரு டெவலப்பர் மற்றும் தொழில்நுட்ப ப்ளாகர்)
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்
தொடர்பு கட்டுரைகள்:
வீட்டிலிருந்தே வேலை செய்பவர்கள் ஆரோக்கியத்தை இழக்காமல் இருக்க 14 ஆலோசனைகள்!