கைவிடப்பட்ட 300 நாய்களை பேணி வளர்க்கும் பிராணிகளின் ரட்சகர் கோவை கீதா ராணி!
'நாய்களின் ப்ரியமான தோழி" என்றழைக்கப்படும் கோவையைச் சேர்ந்த கீதா ராணி, தெருநாய்களை மட்டுமின்றி வளர்த்தவர்களால் கைவிடப்பட்ட நாய்களையும் பேணி பராமரித்துவரும் பிராணிகள் காதலர். 68 வயதான கீதா ராணி அன்பு மற்றும் அரவணைப்பின் சிறந்த ஓர் உதாரணம். சுமார் 300 நாய்களை தன்னுடைய சொந்த செலவில் பராமரித்து, பாதுகாத்து வருகிறார் கீதா. "ஸ்னேஹாலயா அனிமல் ஷெல்டர்" எனும் பெயரில் கோவை செல்வபுரம் சாலையில் இயங்கும் இடத்தில் இந்த கைவிடப்பட்ட நாய்களை தன் சொந்த செலவில் பராமரித்து வருகிறார்.
"அனாதையாக்கப்பட்ட, கைவிடப்பட்ட, ஆதரவற்ற மற்றும் அடிப்பட்ட நாய்களுக்கு ஒரு நல்ல பாதுகாப்பான இருப்பிடத்தை ஏற்படுத்தித் தருகிறேன். தெருக்களில் அடிப்பட்டு கிடக்கும் நாய்களையும் காப்பாற்றி பாதுகாத்து வருகிறேன்," என்கிறார் கீதா.
நாய்களை கல்லால் எரிந்தும், குச்சிகளால் தாக்கியும், இரும்பு கம்பிகளால் அடித்தும், சிலசமயம் கத்தியைக் கொண்டு கொன்றும் விடுகின்றனர் சிலர். இந்த செயல்கள் என்னை மிகவும் காயப்படுத்துகிறது என்று கூறும் கீதா,
"கல்நெஞ்சம் படைத்த சிலர், கொதிக்கும் தண்ணீரை நாய்கள் மீது வீசியும், விஷம் வைத்தும் கொல்லுகின்றனர்," என்று மிகுந்த மனவேதனையுடன் கூறினார்.
நாய்களுக்குத் தேவையான மருந்துகளை, தினமும் கீதா தன்னுடன் வண்டியில் எடுத்துச் செல்கிறார். அடிப்பட்ட நாய் பற்றிய தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்று போதிய சிகிச்சைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கிறார் இந்த நாய்களை அரவணைக்கும் தேவதை. திருத்தப்பட்ட'விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டம் 1960', இதன்படி, ஒருவர் எந்த விலங்கையும் அடித்து, உதைத்து, மிதித்து, கொடுமைப்படுத்தி, காயப்படுத்தி வலியை ஏற்படுத்தும் முறையில் நடந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இதற்கு அபராதம்/சிறை தண்டனை வழங்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"இந்த சட்டத்தைப் பற்றி பலருக்குத் தெரிவதில்லை, அதனால் பயமின்றி இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுகின்றனர்," என்று கூறும் கீதாவுக்கு துணையாக நிற்பவர் அவரது வேன் ஓட்டுனர் பாலன், அவரும் ஒரு பிராணிகள் காதலர்.
"விலங்குகளை காப்பாற்றி ஏற்றிக்கொள்ளும் வகையில் எங்கள் வேனை வடிவமைத்துள்ளோம். நானும் பாலனும் ஊர் முழுதும் பயணிப்போம். உதவிக்கான அழைப்பு வந்ததும் அங்கு விரைந்து சென்று காயப்பட்ட பிராணியைக் காப்பாற்றி, மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்வோம். இரவு பகல் பாராமல் எந்த இடமாக இருப்பினும் செல்வோம்... சிகிச்சைத் தேவை ஏற்படும் விலங்குகளை வெட்னரி டாக்டரிடம் எடுத்துச்சென்று சிகிச்சை முடிந்தவுடன் பாதுகாப்பு இல்லத்துக்கு கொண்டு செல்வோம்."
விலங்குகளை வளர்ப்போர் சிலர் வீடு மாறும்போது, ப்ளாட் ஓனர்கள் விலங்குகளை வீட்டில் அனுமதிப்பதில்லை. அதுபோன்ற சமயத்திலும், பணியிடமாற்றம் வரும்போது வேறு ஊருக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்படும்போதும் அவர்கள் வளர்த்துவந்த பிராணியை கீதா தனது பாதுகாப்பு இல்லத்துக்கு கொண்டுவந்து விடுகிறார். நல்ல முறையில் இந்த செல்லப் பிராணிகளை பராமரித்து அன்புடன் வளர்க்கிறார்.
கீதாவின் இல்லத்தில் நான்கு பெண் ஊழியர்கள் உதவிக்கு உள்ளனர். கீதா தினமும் விதவிதமாக தனது நாய்களுக்கு சமைத்துத் தருகிறார். "நாய்களுக்கு வேகவைத்த சாதம், காய்கறிகள், சிக்கன், போர்க், மீன் துண்டுகள் மிகவும் பிடிக்கும்". நாய்களை சுத்தமாக குளிப்பாட்டி, சுத்த குடிநீரை குடிக்கத் தருகின்றனர். இதைப் பற்றி பாலன் கூறுகையில்,
"விலங்குகளின் இருப்பிடத்தை சுத்தமாக பராமரிக்கிறோம். தேவையான மருந்துகளைப் போட்டு இடத்தை சுகாதாரமாக வைத்துள்ளோம். உணவு மற்றும் உணவு பாத்திரங்களை நன்கு கழுவி வைப்போம். வெட்னரி மருத்துவர் வாரம் ஒரு முறை இல்லத்துக்கு வந்து புதிதாக கொண்டுவரப்பட்ட நாய்களை பரிசோதிப்பார்," என்றார்.
நாய்களை நட்புறவுடன் பழக பழக்குகின்றார் கீதா. கிட்டத்தட்ட 30 வகை நாய்குட்டிகள் இங்கே தத்தெடுப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. கீதா மற்றும் அவரது குழுவினர் நாய்களுக்கு பவுடர் போட்டு, உடம்பில் உள்ள உண்ணியை எடுத்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்கின்றனர். கீதா நாய்களை நாய் என்று குறிப்பிடுவதை விரும்பாமல் தன் குழந்தைகள் என்றே அழைக்கிறார்.
பல வருடங்களாக கீதா பலவகை நாய்களை வளர்த்துவருகிறார். இருப்பினும் அவருடைய பிரியமான நாய் கஜோல். கஜோல் ரோட்டில் கைவிடப்பட்ட நாய். காரில் அடிப்பட்டு பலத்த காயங்களுடன் இருந்த கஜோலை மீட்டு தன்னுடன் அழைத்துச் சென்றார் கீதா. அன்றுமுதல் கீதா செல்லும் இடங்களுக்கெல்லாம் அவருடன் வேனில் கஜோலும் பயணிக்கிறது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த கீதாவின் பெற்றோர் அவர் சிறுகுழந்தையாக இருந்துபோது கோவைக்கு புலம் பெயர்ந்தனர். இதுபோன்ற பிராணிகள் காப்பகத்தை தொடங்கும் எண்ணம் கீதாவுக்கு சிறுவயது முதலே இருந்துள்ளது.
"எனது பெற்றோர்கள் காதலித்து திருமணம் முடித்தவர்கள், அதனால் குடும்பத்தினரும் உறவினர்களும் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. சொந்தபந்தங்கள் என்னை அரவணைத்ததில்லை. ஆனால் அப்போது எங்களிடம் 10 நாய்கள் இருந்தது. அதுவே என் குழந்தைப்பருவத்தில் எனது உற்ற நண்பர்கள் ஆனது. நாய்களோடு விளையாடுவதே எனக்கு பழக்கமாகிவிட்டது. நாய்கள் தான் என் மீது எந்த நிபந்தைனையுமின்றி அன்பு செலுத்தியது," என்றார்.
இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்