‘150 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்’ - குழந்தைகளைக் கவர்ந்த ‘Infobells’ வெற்றியின் ரகசியத்தை பகிரும் ஜெயலட்சுமி குபேர்!
2003ம் ஆண்டு எளிமையான Edutainment ஸ்டார்ட் அப்பாக ஆரம்பிக்கப்பட்ட ‘இன்ஃபோபெல்ஸ்’ இன்று, 150 மில்லியன் சப்ஸ்கிரைபர்களோடு இந்தியாவிலேயே முக்கியமான குழந்தைகளுக்கான சேனல்களில் ஒன்றாக வளர்ந்தது எப்படி?
உங்கள் வீட்டில் குட்டிக் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் உங்களுக்கு Infobells யூடியூப் சேனல் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். சிட்டி, கண்மணி, பப்பு, உருளைக்கிழங்கு செல்லக்குட்டி என இவர்களது ரைம்ஸ்களை நிச்சயம் நீங்கள் கேட்டு ரசித்திருப்பீர்கள்.
2003ம் ஆண்டு எளிமையான எடுடெயிண்மெண்ட்(Edutainment) ஸ்டார்ட் அப்பாக ஆரம்பிக்கப்பட்ட 'இன்ஃபோபெல்ஸ் இன்று, 150 மில்லியன் சப்ஸ்கிரைபர்களோடு இந்தியாவிலேயே முக்கியமான எடுடெயிண்ட்மெண்ட் சேனல்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது.
இந்த இன்ஃபோபெல்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், கிரியேட்டிவ் ஹெட்டுமான ஜெயலட்சுமி குபேர் தமிழகத்தைச் சேர்ந்தவர். கோவையில் கல்லூரி படிப்பை முடித்த அவர், தற்போது தனது கணவர் குபேரோடு சேர்ந்து பெங்களூருவில் தனது அலுவலத்தை நிர்வகித்து வருகிறார்.
தரமே தாரக மந்திரம்
“படிக்கும் போதே எனக்கு அனிமேஷனில் ஆர்வம் அதிகம். 2003ம் ஆண்டு திருமணம் முடிந்த பிறகு கணவரோடு சேர்ந்து தொழிலை கவனித்துக் கொள்ள ஆரம்பித்தேன். அப்பொதிருந்தே நான் தான் எங்களது ஸ்டூடியோவின் கிரியேட்டிவ் ஹெட். தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து, 2டி அனிமேஷன் மற்றும் 3டி அனிமேஷனை முறையாகப் படித்தேன். அதனால்தான் என்னால் ஸ்டூடியோவை எளிதாக நிர்வகிக்க முடிகிறது, என்று தனது ஆரம்பத்தை பகிர்ந்தார் ஜெயலட்சுமி.
ஒரு வீடியோவிற்கான கண்டெண்ட்டை உருவாக்குவத்தில் இருந்து, அதனை முழுப்படைப்பாக உருவாக்கி மக்கள் மத்தியில் பார்வைக்கு கொண்டு வரும் வரை, அனைத்து நிலைகளிலும் நானும், எனது கணவரும் கவனமாக கவனிப்போம். ஒவ்வொரு பிரேமிலும் எங்களது உழைப்பு நிறையவே இருக்கிறது.”
”ஒரு வீடியோ உருவாக்க மூன்று மாதங்கள் வரைகூட ஆகும். சமயங்களில் இறுதியில் நாங்கள் எதிர்பார்த்த மாதிரி அந்தப் படைப்பு வராமல்கூட போய்விடும். அந்த சமயங்களில், பரவாயில்லை இதை அப்படியே பப்ளிஷ் செய்யலாம் என நாங்கள் ஒருபோதும் எங்களைச் சமாதானம் செய்து கொள்ள மாட்டோம். எவ்வளவு செலவு செய்திருந்தாலும் சரி, அந்த வீடியோவை அப்படியே ஒதுக்கி விடுவோம். ஏனென்றால், குவாலிட்டிதான் எங்களுக்கு மிகவும் முக்கியம். நல்ல கண்டெண்ட்தான் எங்களது வெற்றிக்கான மூலதனமே,” என்கிறார் ஜெயலட்சுமி குபேர்.
இன்ஃபோபெல்ஸ் தற்போது தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உட்பட 8 மொழிகளில் குழந்தைகளுக்கான படைப்புகளை தயாரித்து வருகின்றனர். பெங்களூருவில் இயங்கி வரும் இவர்களது அலுவலகத்தில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
யூடியூப் தந்த திருப்புமுனை
“1995ல் என் கணவர் ஃபசில்ஸ் என்ற பெயரில் சிடியில் 2டி வடிவில் கண்டெண்ட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தார். ஆரம்பக் காலத்தில் சிடிக்கள் தான் வாங்கி விற்பனை செய்து வந்தோம். அப்போது இன்ஃபோபெல்ஸ் பாடல்களைக்கூட சிடிக்களில்தான் விற்பனைச் செய்தோம்.
ரைம்ஸ் செய்கிறீர்களே, அதையே ஏன் புத்தகமாக வெளியிடக்கூடாது என எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தொடர்ந்து கேட்டு வந்தனர். அதனால் புத்தக வடிவில் எங்கள் படைப்புகளை எங்களது சொந்த பப்ளிகேஷனிலேயே தயாரிக்கத் தொடங்கினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது எங்களுக்கு 3000 செயின் ஆப் ஸ்டோர்ஸ் உள்ளது. புத்தகங்களாகவும் எங்களது கண்டெண்ட்களை விற்பனைச் செய்து வருகிறோம்.
”ஆரம்பத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கடைகளில் மற்றும் பொருட்காட்சி ஸ்டால்களில் எங்கள் படைப்புகளை மக்கள் பார்வைக்கு வைக்க முடிந்தது. அப்போதுதான் யூடியூப்களில் எங்களது பாடல்களைப் பதிவேற்றம் செய்யத் தொடங்கினோம். அது மக்களை அதிகம் சென்று சேரத் தொடங்கியது. அது எங்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது,” என தாங்கள் வளர்ந்த கதையை விவரிக்கிறார் ஜெயலட்சுமி.
இன்ஃபர்மேஷன் பெல்ஸ் என்பதன் சுருக்கம்தான் இன்போபெல்ஸ். இன்று யூடியூப்பில் கணக்கில்லாத படைப்புகள் கிடைக்கின்றன. அவற்றை எல்லாம் தாண்டி எங்களது படைப்புகளை குழந்தைகள் பார்க்க வேண்டும் என்றால், அது நிச்சயம் அவர்களுக்கு பயனுடையதாக இருக்க வேண்டும், என்கிறார்.
ப்ரீ ஸ்கூல் கண்டெண்ட்
ஒரு வீடியோ மக்கள் மனதோடு ஒட்டிப் போக வேண்டும் என்றால், அது நம் தினசரி வாழ்க்கையில் நாம் கடந்து செல்லும் விசயங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். அதனால்தான், நம்மைச் சுற்றி நடக்கும் சம்பவங்களில் இருந்து, குறிப்பாக குழந்தைகளின் செய்கைகளில் இருந்துதான் எங்கள் ரைம்ஸுக்கான கண்டெண்ட்களை நாங்கள் எடுக்கிறோம். பிறகு அதை எப்படி டெவலப் செய்யலாம் என்பதை நாங்கள் சிந்தித்து, எங்கள் கற்பனையை அதில் புகுத்தி, நல்ல படைப்புகளை உருவாக்குகிறோம், என்கிறார்.
ப்ரீ ஸ்கூல் கண்டெண்ட்தான் இவர்களது வீடியோக்களின் முக்கிய சாராம்சமே. எளிமையான வார்த்தைகளோடு, ரசிக்கும்படியான தாளநயம், ஒருமுறைக் கேட்டாலே திரும்பிப் பாட வைக்கும்படியான பாடல்கள்தான் இன்ஃபோபெல்ஸின் சிறப்பம்சம். இப்படியான பாடல்களால் குழந்தைகளின் அறிவாற்றல் வளருகிறது.
“நல்ல கண்டெண்ட்களை உருவாக்குவது மட்டும் எங்கள் நோக்கமல்ல, அதனை கூடுதல் அக்கறையோடு குழந்தைகள் மத்தியில் கொண்டு சேர்ப்பதுதான் எங்கள் இலக்கு. அப்போது மட்டுமே முழுமையாக எங்கள் படைப்பு அவர்களிடம் சென்று சேரும் என்பது எங்களது நம்பிக்கை. எங்களது பாடல்கள் மூலம் அவர்களின் கற்பனைத் திறன் கூட வேண்டும். அறிவுக்கூர்மை அதிகமாக வேண்டும்,” என்கிறார்.
13 வருடமாக குழந்தைகளோடுதான் எங்கள் பயணமே. பெரிய குழந்தைகளுக்கு கல்வி சார்ந்த நல்ல விசயங்களைக் கொண்டு சேர்ப்பது எளிது. ஆனால், குட்டிக் குழந்தைகளுக்கு அப்படியில்லை. அவர்கள் எதை ரசிப்பார்கள், எப்படிச் சொன்னால் அவர்களுக்குப் புரியும் என யோசித்து, யோசித்து எங்கள் கண்டெண்ட்களை உருவாக்குகிறோம். அதனால்தான் எங்களது வீடியோக்கள் குழந்தைகளை எளிதாக சென்றடைகிறது. எங்களது வெற்றிக்கு முக்கியக்காரணமாக இதைத்தான் நாங்கள் கருதுகிறோம்,” என மனநிறைவுடன் கூறுகிறார் ஜெயலட்சுமி.
சவாலான காலகட்டம்
மற்ற ஸ்டார்ட் அப்களைப் போலவே, ஆரம்பத்தில் நிறையவே சவால்களைச் சந்தித்துள்ளனர் ஜெயலட்சுமி, குபேர் தம்பதியினர். 3டியில் அனிமேஷன் வீடியோக்களை உருவாக்குவது அவ்வளவு எளிதாக இல்லாத காலகட்டத்தில் துணிந்து இந்தத் துறையில் இறங்கியுள்ளனர்.
2011ல்தான் இன்ஃபோபெல்ஸ்க்-கென தனி ஸ்டூடியோ ஆரம்பித்தோம். 2டியாக ஆரம்பித்து, பிறகு 3டி யாக மாற்றினோம்.. ஏகப்பட்ட செலவு, தொழில்நுட்ப ரீதியான சவால்களைச் சந்தித்தோம். நிறைய பணவிரயமும் ஏற்பட்டது. ஆனாலும் எங்கள் படைப்புகளின் மீது எங்களுக்கு ஆழமான நம்பிக்கை இருந்தது.
”தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, அண்ணன், தம்பி, பாப்பா என உறவுகளின் மதிப்பு, நம்மைச் சுற்றி இருக்கும் செல்லப்பிராணிகளின் அன்பு, நம் கலாச்சாரத்தின் பெருமை என வளரும் குழந்தைகளுக்கு தேவையானவற்றை, எங்கள் கற்பனையைக் கலந்து, அவர்கள் ரசிக்கும் விதத்தில் படைப்புகளாக உருவாக்குகிறோம். இது தவிர கல்வி சார்ந்த விசயங்களான வண்ணங்கள், எழுத்து வடிவங்கள், எண்கள் போன்றவற்றையும் எளிமையான வடிவில் படைப்புகளாக குழந்தைகள் மத்தியில் கொண்டு சேர்க்கிறோம்,” என்கிறார் ஜெயலட்சுமி.
ஏற்கனவே வீடியோ வடிவத்தில் மட்டுமல்லாது, புத்தக வடிவிலும் தங்களது படைப்புகளை குழந்தைகள் மத்தியில் கொண்டு சேர்த்து வரும் இன்ஃபோபெல்ஸ், விரைவில் தங்களது கதாபாத்திரங்களை பொம்மை வடிவத்திலும் அறிமுகப்படுத்தும் திட்டத்திலும் உள்ளனர். இதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருவதாக, ஜெயலட்சுமி கூறுகிறார்.
ஸ்மார்ட்போனுக்கு அடிமையாகும் குழந்தைகள்; ஆடியோ கதைகளின் மூலம் மீட்டெடுத்த அம்மாக்கள்!