உத்வேக 'வெள்ளி'த்திரை |'சிட்டி லைட்ஸ்' நிழலில் மறைக்கப்படும் துயரம்!
நண்பர் ஜீவா வழக்கத்துக்கு மாறாக சோர்வுடன் இருந்தார். தன் மனைவி ஊருக்குப் போய்விட்டதை 'அக்னி நட்சத்திரம்' ஜனகராஜ் போல கொண்டாடிய மறுநாளே ஏன் இந்த சோகம்?
கேட்டேவிட்டேன். "என்ன ரொம்ப டல்லா இருக்க? நேத்து அடிச்ச பிராண்ட் ஒத்துக்கலையா?"
"அட நீ வேற... வெயில் ஹீட்டு தாங்க முடியாம நேத்து நைட்டு ஒரு பாருக்குப் போனேன். அந்த பார்ல மியூஸிக்கோட சேர்த்து மூணு நாளு பெண்களை ஆட விட்டிருந்தாங்க. அவங்கள பாத்தா நம்ம ஃபேமிலில இருக்குற பெண்கள் மாதிரியே இருந்துச்சு. மனசு கேக்கல. கிளம்பிட்டேன்."
ஜீவாவின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர் உடம்புதான் 80 கிலோ எடை; மனசு ரொம்ப லேசானது. 'ஒருவேளை அவர் பார்த்தது தீபக்கின் மனைவி ராக்கியாக இருக்குமோ?' என்றுதான் எனக்கு சட்டென யோசனை வந்தது.
யார் அந்த தீபக்? யார் அந்த ராக்கி?
ஹன்சல் மேத்தா இயக்கத்தில் 2014-ல் வெளிவந்த இந்தி படம் 'சிட்டி லைட்ஸ்'. அதன் ப்ரொட்டானிஸ்ட் தீபக். அவரது மனைவி ராக்கி என அனைத்தையும் நினைவுகூர வைத்துவிட்டது ஜீவாவின் அனுபவம்.
சென்னையில் டான்ஸ் பார்கள் அதிகாரபூர்வமாக இல்லைதான். ஆனால், சில இடங்களில் வெவ்வேறு பெயர்களில் உள்ள அம்சங்களில் 'குடி'மக்கள் முன்பு பெண்களின் நடன அசைவுகளை அரங்கேற்றுவதும் அடங்கும். பெருநகர இரவு வெளிச்சங்களால் உருவாகும் நிழல்களால் வெளியே தெறியாமல் மறைக்கப்படுபனவற்றில் இதுவும் ஒன்று.
ராணுவத்தில் டிரைவராக பணிபுரிந்தவரான தீபக் சிங், ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நொடிந்து போன குடும்பத்தை எப்படியாவது முன்னேற்றத் துடிக்கும் அவருக்கு, அவரது மனைவி ராக்கியும், பள்ளிக்குப் போகத் தொடங்கிய மகளும்தான் அன்புத் தெம்பூட்டுபவர்கள்.
கடனில் தொழில் மூழ்கிப் போனதால் கையில் மிச்சம் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்துடன் வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு தீபக் சிங் குடும்பம் பெருநகரமான மும்பையை நோக்கி நகர்கிறது. பெருநகரத்தில் காலடி எடுத்து வைத்தவுடனே அதன் கோரமுகமும் காட்டப்படுகிறது. ஆம், வீடு வாடகை தரகர் என்ற கூறிக்கொண்டு தீபக் வைத்திருந்த ரூ.10,000-ஐ ஒருவன் ஆட்டைய போடுகிறான்.
மும்பை வீதிகளில் நாதியற்று கிடக்கும் இந்தக் குடும்பத்துக்கு எளிய மனிதர்களால் உதவிகள் கிடைக்கிறது. கட்டுமானப் பணிகள் நிறைவடையாத ஒரு தளம் இவர்களது வாடகை வீடு ஆகிறது. தீபக் மனைவி ராக்கி பார் டான்ஸர் வேலையில் சேர்கிறார். சில நாட்களில் தனியார் செக்யூரிட்டி படை நிறுவனத்தில் தீபக்குக்கு வேலை கிடைக்கிறது. அவரது செக்யூரிட்டி பார்ட்னர் விஷ்ணுவின் மூலம் அரவணைப்பும் கிடைக்கிறது. இரு குடும்பங்களும் நட்புறவை அன்போடு பகிர்கின்றனர்.
பெருநகர வாழ்க்கையில் பிழைக்க கற்றுக்கொள்ளத் தொடங்கியச் சூழலில், ஏற்கெனவே பாதை போட்டு வைத்திருந்த குறுக்கு வழி ஒன்றை தீபக்கிடம் காட்டுகிறார் விஷ்ணு. முதலில் மறுத்த தீபக் பிறகு வேறு வழியின்றி ஒப்புக்கொள்கிறார். தங்கள் திட்டத்தை செயல்படுத்த தயாரானபோது ஒரு பேரதிர்ச்சி. தன் பார்ட்னரை இழக்கும் தீபக், அந்தத் திட்டத்தை தனியாக முன்னெடுத்தாரா? கொஞ்சம் பிசகினாலும் பூமியில் வாழ்ந்த சுவடே தெரியாமல் அழிந்துபோகக் கூடிய அந்த அசைன்மென்டை தீபக் எப்படி முடிக்க முயற்சிக்கிறான்? அதன் மூலம் அவனது குடும்பத்துக்கு பலன் கிடைத்ததா? என்ன ஆனது தீபக்கின் குடும்பம்?
இத்தகைய கேள்விகளுக்கு உணவுர்பூர்வமாகவும் மிகத் தெளிவாகவும் பதில் சொல்லி, நம்மை வியப்பில் ஆழ்த்துவதுடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் படைப்புதான் 'சிட்டி லைட்ஸ்'.
ஒருநாள் டிவிடி கடையில் உத்தேசமாக படங்களை அள்ளியபோது கிட்டிய படம் 'சிட்டி லைட்ஸ்'. 'ஷாகித்' என்ற படத்துக்காக 2013-ல் சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றவர் ஹன்சல் மேத்தா. ராஜ்குமார் ராவ் நடிக்கும் படங்கள் அனைத்துமே ஏதோ ஒரு விதத்தில் தனித்துவம் கொண்டவை. இந்த இருவரின் அணியில், சார்லி சாப்ளின் படைப்பின் தலைப்பு கொண்ட படம் என்பதால் அந்த டிவிடியை வாங்கினேன்.
ஒரு வெறுமையான இரவுப் பொழுதில் டிவிடிகள் வைக்கப்பட்ட அட்டைப்பெட்டியில் கண்களை மூடி துழாவியபோது சிக்கியது சிட்டி லைட்ஸ். அந்தப் படத்தைப் பார்த்த பிறகு எப்படி தூக்கம் வரும்?
ஒருநாள், இரண்டு நாள் அல்ல... அந்தப் படத்தின் தாக்கம் அகல்வதற்கு சில வாரங்கள் ஆனது. இந்த மாதிரியான சூழலில்தான் என் சொந்தப் பிரச்சினைகள் கைகொடுக்கின்றன. ஓர் அற்புத திரைப் படைப்பின் தாக்கத்தை எளிதில் அழிந்துபோகச் செய்யும் அளவுக்கு நம் வாழ்க்கைப் பிரச்சினைகள் படையெடுப்பது ஒரு வகையில் நல்லதுதான். ஒரு நல்ல படத்தில் இருந்து மீண்டு இன்னொரு நல்ல படத்துக்கு பயணிப்பதற்கு நம் அமைதியற்ற வாழ்க்கை துணைநிற்கின்றன.
தற்போது உலக அளவில் தீவிர சினிமா ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ள 'அலிகார்' படத்துக்கு முன்பு ஹன்சல் இயக்கிய படம்தான் 'சிட்டி லைட்ஸ்'. இது ஒரு ரீமேக் படம் என்பது நம்ப முடியாத உண்மை.
பிரிட்டன் - பிலிப்பைன்ஸ் கூட்டுத் தயாரிப்பில் பிலிப்பைன்ஸின் தகலாக் மொழி பேசும் படம் 'மெட்ரோ மணிலா'. இதன் அதிகாரபூர்வ தழுவல் தான் 'சிட்டி லைட்ஸ்'. 'மெட்ரோ மணிலா' படம் நம் மனதில் எளிதில் தங்கும் அளவுக்கு இந்தப் படத்தின் டைட்டில் கார்டில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். ஆனால், கதையின் மையப்பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, திரைக்கதை மொத்தத்தையும் நம் சூழலுக்குத் தகுந்தபடி மாற்றி அசல் படைப்பைத் தந்திருப்பார் ஹன்சல் மேத்தா. தமிழில் ஃபிரேம் பை ஃப்ரேம் ரீமேக்கப்பட்ட 'தூங்கநகரம்' எனும் படத்தின் டைட்டில் கார்டில் கண்ணிமைக்கும் நேரத்தில் கிரெடிட் போட்டு அசறடித்த கமல்ஹாசன் ஏனோ இங்கு நினைவுக்கு வருகிறார். சரி, இந்த விஷயத்தை விட்டுவிடுவோம்.
'மெட்ரோ மணிலா' ஒரு க்ரைம் த்ரில்லர் - டிராமா வகைப் படம். அதை அப்படியே இந்தியாவின் 'சோஷியல் - க்ரைம் த்ரில்லர்' ஆக மாற்றியிருக்கும் விதம் வியப்புக்குரியது. வேறு மொழி - வேறு நாட்டுப் படங்களை அவற்றுக்கு உரிய எந்தச் சுவடுகளும் தெரியாமல் ஓர் அசல் படைப்பாகவே ரீமேக் செய்வது எப்படி என்பதை இப்படம் பார்த்துக் கற்கலாம்.
கிராமப்புறங்களில் இருந்து பிழைப்புத் தேடி பெருநகரங்களுக்கும் வரும் குடும்படங்களின் வலிகளை கச்சிதமாக பதிவு செய்திருக்கும் இப்படம் அழுகாச்சி காவியம் என்று நினைத்துவிட வேண்டாம். ஒரு செமத்தியான க்ரைம் த்ரில்லரை ரசித்து வியக்கும் அனுபவமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அதனால்தான், ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரூ.35 கோடிக்கும் மேலான வசூலை ஈட்டித் தந்தது.
படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிகப் பொருத்தமாக செதுக்கப்பட்டுள்ளதை உணரலாம். ஒரு திரைப் படைப்பை ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சேர்ப்பதில், நடிகர்களில் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதற்கு இப்படம் ஓர் எடுத்துக்காட்டு. அந்த அளவுக்கு முக்கியக் கதாபாத்திரங்கள் தொடங்கி உறுதுணைக் கதாபாத்திரங்கள் வரை அனைவரும் இயல்பு மீறாத தோற்றத்துடன் கூடிய நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருப்பார்கள்.
முந்தைய அத்தியாயமான வானம் படத்தின் தொடர்ச்சியாக, சிட்டி லைட்ஸ் அமைந்துவிட்டது மிகவும் பொருத்தமானதாகவே படுகிறது. இந்தப் படத்திலும் பணம் என்பது ஒரு ஜீவனற்ற ப்ரொட்டாகனிஸ்ட்.
தன் குடும்பத்தைக் கரை சேர்ப்ப ஒருவன் எந்த உச்சபட்ச ஆபத்தையும் சந்திக்கத் தயாராவன் என்பது மட்டும் அல்ல... தன் குடும்பத்துக்கு சோறிட ஒருத்தி எந்தத் தாழ்வு நிலைக்கும் செல்லத் தயங்கமாட்டாள் என்பதும் 'சிட்டி லைட்ஸ்' தந்த வெளிச்சத்தில் உணர்ந்தவற்றில் மிக முக்கியமானது.
தீபக் எடுக்கும் ரிஸ்க்கை விட அவரது மனைவி ராக்கி சுயமரியாதையை துறக்கத் துணிந்து பாரில் ஆடும் டான்ஸ்தான் என்னை உலுக்கியது என்கிறபோது, என் நண்பர் ஜீவாவின் தொண்டையில் அன்றைய தினம் பீர் இறங்காததில் ஆச்சரியம் ஏதுமில்லை!
உத்வேக வெள்ளித்திரை இன்னும் விரியும்...
முந்தைய பதிவு: உத்வேக 'வெள்ளி'த்திரை |பணத்தின் மேன்மை சொல்லும் 'வானம்'!