சுனாமி, கஜா, இப்போ கொரோனா: பேரிடர்களில் மக்களின் ‘நம்பிக்கை நாயகன்’ ககன்தீப் சிங் பேடி!
தமிழகத்தில் சுனாமி, கஜா, நிவர் புயல் போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் நலன் காக்கும் வகையில் செயல்பட்ட ககன்தீப் சிங் பேடி ஐஏஎஸ், தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இவரின் செயல்பாடுகள் உதவும் என்று மக்கள் நம்பிக்கையோடு உள்ளனர்.
எத்தனையோ அதிகாரிகள் இருந்தாலும் தங்களின் தனித்த செயல், அடையாளங்களால் ஒரு சிலர், மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துவிடுவார்கள், அவர்களில் முக்கியமானவர் பஞ்சாப் சிங்(கம்) ககன்தீப் சிங் பேடி.
பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹோஷியார்பூர் என்ற ஊரில் 1968ம் ஆண்டு பேடி பிறந்தார். இவர் பொறியியல் (மின்னணுவியல் மற்றும் மின் தொடர்பு) படிப்பை முடித்ததும் பஞ்சாப்பில் உள்ள தாப்பர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி என்ற கல்லூரியில் பேராசியராக பணியாற்றினார். பிறகு 1991 முதல் 1993ஆம் ஆண்டுவரை இந்திய ரயில்வேயில் பணிபுரிந்தார். 1993ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதோடு தன் பணியை தமிழ்நாட்டில் தொடங்கினார்.
அப்போது முதல், பேடி என்றால் நேர்மை மற்றும் மனதில் பட்டதை நேரடியாகச் சொல்லும் அதிகாரி என்று அறியப்பட்டார்.
கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர்; மதுரை மாநராட்சி ஆணையர்; கன்னியாகுமரி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் என பல பொறுப்புகளை இவர் வகித்துள்ளார். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் வாரியத்தின் நிர்வாக இயக்குனராகவும், நகர்ப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் செயலாளராகவும் இவர் இருந்துள்ளார்.
சூழலியல் மற்றும் சுற்றுப்புறத்தை காப்பதற்காக இவர் ஆற்றிய பங்களிப்பு அனைவரும் அறிந்ததே. இதற்காக இவர் 2003 மற்றும் 2004ம் ஆண்டு என இரண்டு முறை பசுமை விருதையும் வென்றுள்ளார். மாவட்ட ஆட்சியராக பல்வேறு பசமை–சுற்றுலா திட்டங்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களையும் அறிவித்திருக்கிறார்.
தமிழகத்தை உலுக்கிய 2004 ஆழிப்பேரலை சுனாமி தாக்குதலில் மிகுந்த பாதிப்பிற்குள்ளான கடலூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்புப் பணியில் துரிதமாக செயல்பட்ட செயல்வீரர். கடற்கரைப் பகுதியில் சுனாமியால் வீடிழந்தவர்களை தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு, அவர்களின் மறுவாழ்விற்காக அறிவிக்கப்பட்ட நிவாரணப் பணிகளை சிறப்பாக அமல்படுத்தியது என்று அனைவரின் மனதையும் நெகிழ வைத்தவர் பேடி.
இதற்காக அந்த ஆண்டே தமிழக அரசின் விருதையும் பெற்றிருக்கிறார். 2006ம் ஆண்டில் செஞ்சிலுவைச் சங்கத்தின் சிறந்த ஆட்சியருக்கான விருதை பெற்றவர்.
2003 முதல் 2013ம் ஆண்டு வரை கடலூர் மாவட்ட வாலாஜா ஏரியை மீட்பதற்காக மிகுந்த சிறத்தையோடு முயற்சியை மேற்கொண்டார். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளிவரும் கழிவுகள் கொட்டப்படும் 1664 ஏக்கர் பரப்பிலான இந்த ஏரி காய்ந்து போனதால் சுற்றுவட்டாரத்தில் இருந்த நீர் நிலைகள் வற்றி காய்ந்து போனது.
போராட்டங்கள், நிலக்கரி சுரங்கத்தின் எதிர்ப்பை மீறி மக்களிடம் இந்த ஏரி சீரமைக்கப்படுவதற்கான காரணத்தை விளக்கிக் கூறி 2014ம் ஆண்டில் ஏரியை தோண்டும் வேலையைத் தொடங்கினார். நான்கு மாதத்தில் ஏரியின் கரையானது நான்கு கிலோமீட்டருக்கு உயர்த்தப்பட்டு 40 ஆயிரம் தேக்கு மரங்கள் நடப்பட்டது.
இப்போது கடல் போல காட்சி அளிக்கும் இந்த ஏரியால் 12 ஆயிரம் நன்செய் நிலங்கள் பாசனம் பெறுவதோடு 15 கிராமங்கள் பலன் அடைகிறது. ககன்தீப் சிங் பேடியின் இந்த செயலை நினைவுகூர்ந்து கடலூர் மாவட்ட மக்கள் அவரை, ‘வாழும் பென்னிகுயிக்’ என்று பாராட்டுகின்றனர்.
2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் போது கடலூர் மாவட்டத்தில் ஒரு மாத காலம் இரவு பகல் பாராமல் மக்கள் சிரமங்களைப் போக்கும் விதமாக சிறந்த முறையில் அதிகாரத்தை பயன்படுத்தி அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டியவர். இதனைத் தொடர்ந்து வர்தா, ஒக்கி புயல் பாதிப்பின் போதும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இவரே நியமிக்கப்பட்டார். கஜா புயலின்போதும் சிறப்பாக கடலூர் மாவட்டத்தில் பணியாற்றினார்.
2013ம் ஆண்டில் விவி மினரல்ஸ் தாது மணல் குவாரி முறைகேடுகளை விசாரித்து எந்த ஒளிவு மறைவும் சமரசமும் இன்றி ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு கோடி மெட்ரிக் டன் தாதுமணல் 52 குவாரிகளில் இருந்து அள்ளிச்செல்லப்பட்ட மாபெரும் முறைகேட்டை 1170 பக்க அறிக்கையாக அரசுக்கு அளித்தார்.
பிரச்னைக்குரிய பகுதிகளில் மக்களின் நம்பிக்கையை பெற அரசால் அனுப்பப்படும் அதிகாரிகளில் முக்கியமானவர் இவர். பதற்றமான சூழல்களை திறம்படக் கையாளும் அனுபவம்கொண்டவர் ககன் தீப் சிங் பேடி.
கடமையில் கரார்காரரான இவரின் திறமையை அறிந்து 2017ம் ஆண்டு கோவை மாவட்டம் சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது பதற்றத்தை தணிக்க அரசால் அனுப்பி வைக்கப்பட்டார். ஊரக வளர்ச்சித் துறையின் செயலாளராக பேடி இருந்த போது 100 நாள் வேலை உறுதித் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 2016ம் ஆண்டில் தேசிய விருதை பெற்றிருக்கிறார்.
வேளாண்மைத் துறை செயலாளராக இருந்த போது வேளாண்மை பாடங்களின் சிறப்பை மாணவர்களுக்கு விளக்கியவர். உலகையே வெட்டுக்கிளிகள் தாக்கம் அச்சுறுத்திய போது தமிழக வேளாண் நிலங்களில் அவற்றை தடுப்பதற்கான யுத்திகளை வகுத்தவர் என பல சாதனைகளை சத்தமில்லாமலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்பவர் ககன்தீப் சிங் பேடி.
கஜா புயல் பாதிப்பின் போது விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் பயனை கூறி அவர்கள் பயன்பெறச் செய்ததோடு, பாதிப்பு நிலவரங்களை வயலில் இறங்கி அதிகாரிகளுக்கு விளக்கிய முன்களப் பணியாளர்.
திமுக தலைமையில் அமைந்திருக்கக் கூடிய அரசானது பேடியை சென்னை மாநகராட்சி ஆணையராக நியமித்து உத்தரவிட்டிருக்கிறது. மிக மூத்த அதிகாரியான பேடியை மாநராட்சி ஆணையர் பொறுப்பிற்கு நியமிப்பதா என்று சிலருக்குத் தோன்றினாலும், சென்னையில் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கும் கொரோனா பரவல் நிலையை சமாளிக்க பேரிடர் காலங்களில் பணியாற்றிய இவரின் அனுபவம் கைகொடுக்கும் என்பதற்காக இவர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
பேடியின் நியமன ஆணையில் முதன்மைச் செயலாளர்/ ஆணையர், சென்னை மாநராட்சி உள்ளிட்ட பணியிடங்கள் அந்தஸ்திலும் பொறுப்பிலும் முதன்மைச் செயலாளர் – போன்றே – ஆணையர் பொறுப்பும் சமமானது என்று அரசு குறிப்பிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றிருக்கும் பேடி, கடலூர் மாவட்டத்தில் கொரோனா பார்வையிடல் அதிகாரியாகவும் செயல்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முழு ஊரடங்கு + ககன் தீப் சிங் பேடியின் நடவடிக்கைகள் சென்னை நகரில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.