‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் யார் இவர்?
தமிழக அரசால் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ துறைக்கு சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் இவ்வளவு எளிமையானவரா?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றிப் பெற்று தனிப் பெரும்பான்மை பலத்துடன் திமுக ஆட்சியை பிடித்திருக்கிறது. கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பதவிகளை அலங்கரித்த மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் என்று உறுதிமொழி ஏற்று குடும்பத்தினரையும், கட்சியினரையும் கண்கலங்க வைத்தார் ஸ்டாலின். தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்று 5 அதிரடி அறிவிப்புகளில் கையெழுத்திட்டார்.
தேர்தல் பரப்புரையின்போது,பெறப்படும் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாணும் ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று ஸ்டாலின் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார். அதன்படி,
’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்திற்கான துறையை உருவாக்குவதற்கான கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார். இதனையடுத்து அந்தத் துறைக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷை நியமித்து கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.
புதிதான ஒரு துறைக்கு அதுவும் மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் இந்தத் துறைக்கு நியமிக்கப்பட்டிருக்கும் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் யார் இவர்?
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஷில்பா பிரபாகர் சதீஷ் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை (LLB) படித்திருக்கிறார், 2009ம் ஆண்டு நடைபெற்ற யூ.பி.எஸ்.சி. தேர்வில் இந்திய அளவில் 46வது இடத்தை பெற்று ஐ.ஏ.எஸ் அதிகாரியானார்.
2010ம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் துணை ஆட்சியராக தனது பணியைத் தொடங்கியவர், அதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு சார்-ஆட்சியராக வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டத்தில் 2014 ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார். பின்பு ஓராண்டு காலம் சென்னை மாநகராட்சியில் துணை ஆணையாளராக (கல்வி) பணிபுரிந்துள்ளார்.
தமிழ்நாடு தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவராக 2017ம் ஆண்டில் பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டினை மேம்படுத்தும் வகையில் இவர், உருவாக்கிய ஒற்றைச் சாளர முறையிலான (Single Window system) தொழில் வழங்குவதற்கான நடைமுறைகள் தொழில்சாலைகள் உருவாவதை எளிமையாக்கியது. இந்த புதிய முறை பல்வேறு விதங்களில் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க உதவியது.
2018ம் ஆண்டில் ஷில்பா பிரபாகர் சதீஷ், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது மாவட்ட ஆட்சித்தலைவரான இவரே இம்மாவட்டத்தின முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமைக்குரியவர். இதனோடு தனது 3 வயது மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்து படிக்க வைத்ததால் மீடியாக்களின் வெளிச்சமும் அவர் மீது பட்டது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் தனது குழந்தையை சேர்த்து படிக்க வைத்தார் இவர்.
பொதுவாகவே வசதி படைத்தவர் அதிலும், குறிப்பாக அரசுப் பணி மற்றும் அரசு உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்களின் பிள்ளைகளை அதிகம் செலவு செய்து பன்னடுக்கு வசதிகள் கொண்ட தனியார் பள்ளிகளில் படிக்க வைப்பதையே பார்த்திருக்கிறோம். ஆனால்,
இவர் வித்தியாசமாக அங்கன்வாடியில் படிக்க வைத்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. சக குழந்தைகளோடு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் குழந்தையும் ஆடி- பாடி விளையாடியது அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வருவதற்கான வாய்ப்பாக அமைந்தது.
இது மட்டுமின்றி தான் வகித்த பொறுப்பிலும் சமூக அக்கறையுடனே செயல்பட்டார் ஷில்பா. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி கொலையில் அவருடன் உயிரிழந்த பணிப்பெண் மாரியம்மாளின் மூன்று மகள்களுக்கும் கல்வியைத் தொடர்வதற்காக மாதம் ரூ.2,000 உதவித்தொகை மற்றும் அவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க பள்ளித் தலைமையாசிரியரை அணுகி அவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் தங்குமிடம் ஏற்படுத்தித் தரவும் முயற்சிகளை எடுத்தார்.
மேலும், மாரியம்மாளின் தாயார் வசந்தா 3 பெண் குழந்தைகளை பராமரிப்பதால் அவருக்கு மாதம் ரூ. 1,000 முதியோர் உதவித்தொகை கிடைக்கவும் வழி ஏற்படுத்தினார்.
கடந்த நவம்பர் மாதத்தில் திருநெல்வேலி ஆட்சியர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டவர் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டார். மக்களின் தேவை அறிந்து செயல்படும் பொறுப்பான அதிகாரியே ஸ்டாலினின் புதிய துறையான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டிருப்பது பலராலும் வெகுவாக பாராட்டப்படுகிறது.