இந்தியச் சந்தையில் அறிமுகம் ஆகக் காத்திருக்கும் மின்சார கார்கள்!
இந்த ஆண்டு இந்தியாவில் முன்னணி கார் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தவுள்ள மின்சார வாகனங்கள் எதுனு தெரிஞ்சுக்கோங்க...!
சுற்றுச்சூழலுக்கு நட்பானதாக மின்சக்தியில் இயங்கும் வாகனங்கள் கருதப்படுகின்றன. இந்திய அரசும், மின் சக்தி வாகனங்களுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளை அமல் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மின்சக்தி வாகனங்கள் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இந்த ஆண்டு அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படும் மின்சார வாகனங்கள் இவை:
நிஸான் லீப் (Nissan Leaf)
நிஸான் நிறுவனம், தனது வெற்றிகரமான மின்சார காரான ’நிஸான் லீஃப்’ காரை இந்தியாவில் கொண்டு வர இருப்பதாகக் கடந்த ஆண்டு அறிவித்தது. இரண்டாம் தலைமுறை வாகனமான இது, உலகில் அதிகம் விற்கும் மின்சார காராக கருதப்படுகிறது.
இதன் 40 kWh பேட்டரி, ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ செல்லக்கூடியது. பேட்டிரி சார்ஜ் செய்ய 8 முதல் 16 மணி நேரம் ஆகலாம். மேலும் 40 நிமிடத்தில் 80 சதவீதம் சார்ஜ் ஆகக்கூடிய குவிக் சார்ஜ் வசதியும் உள்ளது. மின்சார வாகனப் பிரிவில் பிரிமியம் கார்களில் ஒன்றான இது 30 முதல் 35 லட்சம் விலை கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்ஜி eZS (MG ZS EV)
எம்ஜி மோட்டார் இந்தியா, eZS எனப்படும் தனது மின்சார எஸ்.யு.வி வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாகக் கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தது. சர்வதேச சந்தையில் விற்பனையாகும்
இந்த கார், 150 எச்.பி. திறன் மின்சார மோட்டார் கொண்டுள்ளது. 3.1 விநாடியில் இது பூஜ்ஜியத்தில் இருந்து 50 கிமீ வேகத்தை தொடக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 335 கிமீ செல்லக் கூடியது. இதன் விலை ரூ.25 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி வேகன் ஆர் ஈ வி (Maruti Wagon R EV)
மாருதி சுசூகி, தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்யத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. நாட்டின் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி, ஏற்கனவே மாருதி சுசூகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கி வருகிறது. இந்த கார் தில்லியில் நடைப்பெற்ற மூவ் குலோபல் மொபிலிட்டி கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
எலெக்ட்ரிக் வேகன் ஆர் லித்தியம் அயன் பாட்டிரி கொண்டு இயங்குகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் இது 200 கிமீ செல்லக்கூடியது. இந்த கார் ரூ.7 லட்சம் எனும் விலையில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV400)
ரிவோல்ட் மோட்டார்ஸ் உருவாக்கியுள்ள கார் இது. இது ஒரு ஆரம்ப நிலை மோட்டார் சைக்கிளாகும். மாற்றக்கூடிய பேட்டரி இருப்பிடம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விலை ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மகிந்திரா eKUV100 (Mahindra eKUV100)
மகிந்திரா இந்த வாகனத்தை பண்டிகைக் காலத்தில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை 7 முதல் 9 லட்சம் வரை இருக்கலாம். இந்த வாகனத்தின் மின்சார் வடிவம் வழக்கமான மாதிரி போலவே உள்ளது. லித்தியம் அயான் பேட்டரியுடன் இணைக்கப்பட்ட 31 kW 3 பேஸ் ஏசி இண்டக்ஷன் மூலம் இயங்கும். ஒரு மணி நேரத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம்.
ஹூண்டாய் கோனா (Hyundai Kona)
ஹுண்டாய் மோட்டார் லிட் நிறுவனம், ஜுலை மாதம் இந்த காரை அறிமுகம் செய்ய உள்ளது. இது இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி வாகனமாக இருக்கும் என ஹூண்டாய் தெரிவிக்கிறது.
இந்த கார் 25 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 39.2 kWh லித்தியம் ஐயான் பேட்டரி கொண்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 312 கிமீ செல்லும் திறன் கொண்டது.
கட்டுரை தொகுப்பு: சைபர்சிம்மன்