சென்னை நகரில் இரண்டு மின்சார பஸ்கள் அறிமுகம்!
சென்னை நகரில் இரண்டு வழித்தடங்களில் ஏசி வசதி கொண்ட மின்சார பஸ்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார்.
சென்னையில் முதல் முறையாக, மின்சார பஸ்கள் சோதனை முறையில் இயக்கப்பட உள்ளன. சென்னை சென்ட்ரல்- திருவான்மியூர், கோயம்பேடு மற்றும் கோயம்பேடு –பிராட்வே ஆகிய இரண்டு வழித்தடங்கள் வழியே செல்லும் இந்த பஸ்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார்.
ஏ.சி வசதி கொண்ட இந்த பஸ்சில் 32 பேர் அமர்ந்து கொண்டும் 22 பேர் நின்று கொண்டும் பயணம் செய்யலாம். தலைமை செயலகத்தில் இருந்து பஸ்களை முதல்வர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். பின்னர் முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இதில் பயணம் செய்தனர்.
சுற்றுச்சூழல் மாசைக் குறைக்கும் வகையில் மாநில அரசு மின்சார பஸ்களை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக கடந்தமாதம், சென்னையில் மின்சார பஸ்களை இயக்குவதற்கு, அசோக் லேலன்ட் திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாநகரப் போக்குவரத்திற்கு அரசு அனுமதி அளித்தது.
“இந்த ஒப்பந்தத்தின்படி, நிறுவனம் பரமாரிப்புச் செலவை ஏற்றுக்கொள்ளும். ஒரு பஸ் பேட்டரி மாற்று நுட்பம் மற்றும் மற்றொரு பஸ் விரைவாக சார்ஜ் ஆகும் நுட்பத்தை கொண்டிருக்கும். பஸ்களை ரிசார்ஜ் செய்வதற்கான வசதியையும் நிறுவனம் அமைக்கும்,” என்று போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பஸ்களை ரீச்சார்ஜ் செய்வதற்கான செலவை போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி) ஏற்கும். டிக்கெட் வசூல் தொகையும் கழகம் எடுத்துக்கொள்ளும்.
“இந்த பஸ்களுக்கான டிரைவர்களை நிறுவனம் நியமிக்கும். போக்குவரத்துக் கழகம் நடத்துனர்களை வழங்கும்,” என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளாக அரசு மேற்கொண்டு வந்த முயற்சிகளின் காரணமாக புதன்கிழமை முதல் சென்னையில் மின்சார பஸ்கள் இயங்க உள்ளன.
2017 ஜூலை மாதம் சென்னையில் மின்சார பஸ் சோதனை நடைபெற்றது. அதன் பிறகு 2018 ஜூலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த சி-40 சிட்டிஸ் கிளைமெட் லீடர்ஷிப் குழுமத்துடன், மின்சார பஸ்களை தயாரிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் 200 பஸ்கள் அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டது. எனினும், இந்த திட்டம் மேற்கொண்டு முன்னேற்றம் காணவில்லை.
பஸ்களுக்கான கொள்முதல் விலையை ரூ.2 கோடியில் இருந்து ரூ.1.5 கோடியாக குறைக்க பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான முடிவு நிலுவையில் உள்ளது. இதனிடையே, மத்திய அரசு, மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் ஃபேம் இந்தியா திட்டம் கீழ், தமிழகத்திற்கு 525 பஸ்களை கடந்த வாரம் ஒதுக்கியது. இந்நிலையில், இந்த பஸ்களை முதல்வர் பழனிச்சாமி இன்று துவக்கி வைத்தார். முதல் கட்டமாக திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் வரையிலும், கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை வரையிலும் மின்சார பஸ்களை இயக்க உள்ளனர்.
இன்னும் சில மாதங்களில் மேலும் 100 மின்சார பஸ்களை சென்னையில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்தி உதவி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் | தமிழில்: சைபர்சிம்மன்