எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 5 | புத்தகம் எழுதிய முதல் சாட்பாட்!
பயனாளிகளுடன் உரையாடும் வகையில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்டர் சைல்டு ஒரு மைல்கல் சாட்பாட் என்பதை மீறி, இப்போது பெருமளவு மறக்கப்பட்டு விட்டது. சாட்பாட் வரலாற்று ஆய்வில் மட்டுமே அதற்கு இடம் இருக்கிறது.
ஸ்மார்ட்டர் சைல்டு ஆரம்ப வெற்றியை கடந்து அடுத்த கட்ட வளர்ச்சியை பெறாமல் போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவற்றில் இரண்டு காரணங்கள் முக்கியமானவை.
முதல் காரணம், இந்த சாட்பாட் அறிமுகமான புத்தாயிரமாண்டு துவக்கத்தில் எல்லாம் வல்ல சாட்பாட்டை தாங்கிப் பிடிக்கக் கூடிய ஏஐ நுட்பங்கள் முழுவீச்சில் உருவாகியிருக்கவில்லை. இன்னொரு காரணம், இப்படி ஒரு சாட்பாட் பெரிய அளவில் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை அதன் முதலீட்டாளர்களுக்கு இல்லாமல் போனது.
ChatGpt ஆய்வு
ஏ.ஓ.எல் உள்ளிட்ட மெசேஜிங் மேடையில் வெற்றி பெற்ற இந்த சாட்பாட்டை வர்த்தக நோக்கில் வளர்த்தெடுத்து வருவாய் பார்ப்பதிலேயே முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். ஆனால், அதற்குத் தேவையான நுட்பங்களை வளர்த்தெடுப்பதிலும், அவற்றிற்காக முதலீடு செய்வதையும் அவர்கள் அவசியமாக கருதவில்லை.
Smarter Child சாட்பாட்டை உருவாக்கிய ’ராபர்ட் ஹாபர்’, கட்டுரை ஒன்றில் இந்த காரணங்கள் பற்றி விரிவாக அலசியிருப்பவர், வெற்றிகரமான சாட்பாட்டை வளர்த்தெடுக்க என்ன எல்லாம் தேவை என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எழுத்து வடிவிலான தொடர்பு முக்கியம், டவுன்லோடு செய்யும் தேவை இருக்கக் கூடாது, நினைவுத்திறன் முக்கியம் என்பது உள்பட அவர் குறிப்பிடும் காரணங்கள் இன்றைக்கும் சாட்பாட் வளர்ச்சிக்கு மிக முக்கியம்.
சாட்ஜிபிடி மாபெரும் வெற்றி பெற, இந்த காரணங்கள் எல்லாம் அடிப்படை என்பதையும் உணரலாம். அதே நேரத்தில், சாட்பாட் சார்ந்த நுட்பங்களில் ஏற்பட்ட முன்னேற்றங்களும் முக்கிய அடிப்படை என்பதை மறந்து விடக்கூடாது. அது மட்டும் அல்லாமல், ஏற்கனவே உருவாக்கப்பட்ட பல்வேறு விதமான சாட்பாட்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு சாட்ஜிபிடி மூலம் அறுவடை செய்யப்படுவதாகவும் கொள்ளலாம்.
மற்ற சாட்பாட்கள்
அந்த வகையில், ஸ்மார்ட்டர் சைல்டுக்கும் பல ஆண்டுகள் முன்னதாக அறிமுகமான ராக்டர் (Racter) உள்ளிட்ட மேலும் சில சாட்பாட்களை திரும்பிப் பார்ப்பது அவசியம். இப்போது பரபரப்பாக பேசப்படும், சாட்ஜிபிடி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வதோடு, பயனாளிகள் அளிக்கும் கோரிக்கைக்கு ஏற்ப கதையோ, கட்டுரையோ, ஏன் முழு நாவலையோ எழுதித்தரும் திறன் பெற்றிருக்கிறது.
ஆனால், இதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னரே ராக்டர் முழு புத்தகத்தை தானாகவே எழுதி அசத்தியிருக்கிறது. உண்மையில், கம்ப்யூட்டரால் எழுதப்பட்ட முதல் புத்தகம் என, ராக்டர் உருவாக்கிய ’தி போலீஸ்மேன் பியர்டு ஈஸ் ஆப் கன்ஸ்டிரக்டட்’ (The Policeman’s Beard Is Half-constructed) புத்தகம் வர்ணிக்கப்படுகிறது.
மனிதர்கள் போலவே, செயற்கை நுண்ணறிவும் ஆக்கத்திறன் பெற்றிருப்பது இன்று முக்கிய அம்சமாக பேசப்படுகிறது. கதைகள், நாவல்கள் போன்ற எழுத்து வடிவப் படைப்புகள் மட்டும் அல்லாமல், நவீன ஓவியங்கள், புகைப்படங்கள், வரைகலை என பல வகையான ஆக்கங்களை செயற்கை நுண்ணறிவு மென்பொருள்கள் உருவாக்கித்தரும் திறன் பெற்றுள்ளன. இவை பரவலாக ஜெனரேட்டிவ் ஆர்ட், அதாவது, ஆக்கக் கலை எனக் குறிப்பிடப்படுகின்றன.
நானே எழுதுவேன்!
ஒருவிதத்தில் இந்த செயற்கை ஆக்க கலைக்கான முன்னோடி மென்பொருள்களில் ஒன்றாகவும் ராக்டரை கருதலாம். கதை சொல்லி எனப் புரிந்து கொள்ளக்கூடிய ரகாண்டேர் (Raconteur) எனும் ஆங்கில சொல்லின் சுருக்கமாக அமைந்த ராக்டர் அடிப்படையில் ஒரு எழுத்து ஆக்க அமைப்பு. இது பேசிக் புரோகிராமிங் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
வில்லியம் சாம்பர்லைன் (William Chamberlain) என்பவர் தனது நண்பர் தாமஸ் ஈட்டருடன் (Thomas Etter) இணைந்து இந்த மென்பொருளை உருவாக்கினார். ஆப்பிளின் புகழ் பெற்ற மேகின்டாஷ் கம்ப்யூட்டர் வெளியான அதே ஆண்டு, ராக்டர் மென்பொருளும் அறிமுகமானது. ஆப்பிள் கம்ப்யூட்டரில் செயல்படும் வகையில் அமைந்திருந்தது. முதலில் புத்தகமும், அதன் பின் மென்பொருளும் அறிமுகமானது. பின்னர் இதன் வர்த்தக வடிவமும் வெளியானது.
பத்திரிகைகள் பாராட்டு
கம்ப்யூட்டர் எழுதிய இந்த புத்தகம் தொழில்நுட்ப உலகில் கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தவே செய்தது. கம்ப்யூட்டர் பத்திரிகையான பிசி மேகசைன் மற்றும் அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்டவை இந்த புத்தக ஆக்கம் குறித்து விமர்சனங்களை வெளியிட்டன.
”கம்ப்யூட்டர்கள் செயற்கை நுண்ணறிவை நெருங்கத்துவங்கியிருக்கும் நிலையில், ராக்டர் செயற்கை பித்து நிலையின் விளிம்பை தொட்டிருக்கிறது,” என நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
ஒரு பொதுவான மொழியை கம்ப்யூட்டர் தானே புரிந்து கொள்ளும் வகையில் அதை புரோகிராமிங் செய்ய வேண்டும் என, கம்ப்யூட்டர்களை எழுத்து ஆக்கம் செய்வதற்கான நோக்கம் பற்றி ஒரு கட்டுரையில், சாம்பர்லைன் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான வழிமுறைகள் பற்றியும் விவரித்திருக்கிறார்.
கம்ப்யூட்டர் எழுதிய இந்த புத்தகத்தை இப்போதும் இணையத்தில் படிக்கலாம். அதைவிட, முக்கியமாக, சாட்ஜிபிடி உருவாக்கும் கதைகள், கட்டுரைகள் பற்றி விவாதிக்கும் போது, ராக்டரின் ஆக்கத்தை நினைவில் கொள்வது பொருத்தமாக இருக்கும். (ராக்டர், மனித தலையீடு இல்லாமலே சொந்தமாகவே எழுதும் ஆற்றல் பெற்றிருந்ததாக அறிய முடிகிறது).
ராக்டர் சாட்பாட் வகையைச்சேர்ந்தது என்றாலும், இதற்கான இடைமுகம் வீடியோ கேம் போல இருந்தது. பெயர் சொல் மற்றும் வினைச்சொல் போன்றவற்றை அடையாளம் கண்டு அதற்கேற்ப உரையாடல் மேற்கொள்ளும் வகையில் அமைந்திருந்தது. எனினும், சராசரி கம்ப்யூட்டர் பயனாளிகள் மத்தியில் இந்த மென்பொருள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
யூஸ்நெட் பாட்
ராக்டரை தொடர்ந்து, மார்க் சஷானே (Mark V. Shaney) எழுத்து ஆக்க மென்பொருள் 1985ல் அறிமுகமானது. புரூஸ் எல்லிஸ் மற்றும் டாப் பைக் ஆகியோர் இதை உருவாக்கியிருந்தனர். அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த யூஸ்நெட் (Usenet) விவாதக் குழுவுக்கான பதிவுகளை உருவாக்கும் திறன் பெற்றிருந்தது.
(யூஸ்நெட் இன்றைய சமூக ஊடகங்களுக்கான முன்னோடி சேவைகளில் ஒன்று என்பதையும் இங்கு நினைவில் கொள்வது அவசியம்). இது பகிர்ந்து கொண்ட பல பதிவுகள் மனிதர்கள் வெளியிட்டவை என உறுப்பினர்கள் நினைக்கும் அளவுக்கு இருந்தவை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
1998ம் ஆண்டு ராபி கார்னர் என்பவர் ஆல்பர்ட் ஒன் (Albert One) எனும் சாட்பாட்டை அறிமுகம் செய்தார். மனிதர்கள் போலவே உரையாடும் திறன் பெற்றிருந்தது. கார்னர், என்.எல்.பி எனப்படும் இயற்கை மொழியாக்கத்தில் வல்லுனர் என்பதால், என்.எல்.பி நுட்பத்தின் பல்வேறு அம்சங்களை பயன்படுத்தி இதை உருவாக்கியிருந்தார்.
அந்த வகையில், சாட்பாட் உருவாக்கத்தில் இது முக்கிய முன்னேற்றமாகவும் அமைந்தது. மனித அறிக்கைகள் மற்றும் பதில்களை சேமிக்கும் திறன் பெற்றிருந்ததும் இதன் முக்கிய அம்சமாகும்.
சாட்பாட்களுக்காக நடத்தப்படும் போட்டியில் வெற்றி பெற்ற இந்த சாட்பாட் பற்றிய அறிமுகத்தில் கம்ப்யூட்டர்கள் பேசும் திறன் பெற்று வருகின்றன என பிபிசி இணையதளம் எழுதியிருந்தது. இதனுடன் உரையாடிய பலரும், தாங்கள் மனிதர் ஒருவருடனே பேசிக்கொண்டிருப்பதாக நம்பியதாகவும் அந்த செய்தி தெரிவித்திருந்தது.
இதனிடையே, மைக்ரோசாப்ட் தன் பங்கிற்கு கிளிப்பி எனும் புதுமையான சாட்பாட்டை அறிமுகம் செய்தது. கிளிப்பி பற்றியும், அதனுடன் அறிமுகமான பிற சாட்பாட்கள் பற்றியும் தொடர்ந்து பார்க்கலாம்.
எலிசா முதல் சாட்ஜிபிடி வரை - 4 | முதன்முதலில் மெசஞ்சரில் பேச அழைத்த சாட்பாட்!
Edited by Induja Raghunathan