எலிசா முதல் சாட்ஜிபிடி வரை - 4 | முதன்முதலில் மெசஞ்சரில் பேச அழைத்த சாட்பாட்!
சாட்ஜிபிடிக்கு முந்தைய சாட்பாட்களின் வரிசையில் இப்போது ’ஸ்மார்ட்டர் சைல்டு’ பாட் பற்றி பார்க்கலாம். அதற்கு முன் எய்ம் மெசேஜிங் சேவை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம்.
எய்ம் சேவை ஐந்தாண்டுகளுக்கு முன்னரே நிறுத்தப்பட்டுவிட்டது என்றாலும், இப்போது நினைத்து பார்ப்பது பொருத்தமாகவே இருக்கும். ஏனெனில், எய்ம் சேவை சமூக ஊடக வரலாற்றில் முக்கிய மைல்கற்களில் ஒன்றாக திகழ்கிறது. வாட்ஸ் அப் எல்லாம் வருவதற்கு முன்பே இணைய உலகில் எய்ம் முன்னணி மெசேஜிங் சேவையாக இருந்தது.
உடனடி செய்தி வசதி என்பதை குறிக்கும், இன்ஸ்டண்ட் மெசேஜிங் (AOL Instant Messenger-AIM) சேவையாக ஏ.ஒ.எல் நிறுவனம் இதை அறிமுகம் செய்தது. பயனர் பெயரை உருவாக்கிக் கொண்டு, எழுத்து வடிவில் சக உறுப்பினர்களுடன் அரட்டை அடிக்கும் வசதியை அளித்தது.
1990-களில் இணைய சேவை வழங்குவதில் முன்னணியில் திகழ்ந்த நிறுவனமும், இணைய வசதிகளில் பல முன்னோடி அம்சங்களை உருவாக்கிய நிறுவனங்களில் ஒன்றுமான அமெரிக்கன் ஆன்லைன், 1997ல் எய்ம் மெசேஜிங் சேவையை அறிமுகம் செய்தது.
எய்ம் சேவை
எய்ம் சேவை பலவிதங்களில் இன்றைய மேசேஜிங் சேவைகளுக்கு முன்னோடி. மேசேஜிங் சேவைகளில் பயன்படுத்தப்படும் பல அடிப்படையான அம்சங்கள் எய்ம் சேவையில் அறிமுகமானவை தான். உதாரணத்திற்கு, நண்பர்கள் பட்டியல் மற்றும் நண்பர்கள் ஆன்லைனில் இருக்கின்றனரா எனக் கண்டறியும் வசதிக்கு முன்னோடியாக, எய்ம் சேவையில் அறிமுகமான பட்டி லிஸ்ட் அம்சத்தை சொல்லலாம்.
சமூக ஊடக வரலாற்றில், எய்ம் சேவைக்கும் முன்னோடி ஐஆர்சி எனப்படும் இண்டர்நெட் ரிலே சேட் என்றாலும், இப்போதைக்கு எய்ம் சேவையில் மட்டும் கவனம் செலுத்தலாம்.
சமூக ஊடகம் எனும் பெயரும் கருத்தாக்கமும் பிரபலமாகாத காலத்திலேயே லட்சக்கணக்கானோரால் எய்ம் சேவை பயன்படுத்தப்பட்டது. அதை எல்லாம் விட முக்கியமாக, எய்ம் மேடையில் தான் உலகின் முதல் நுகர்வோர் சாட்பாட் அறிமுகமானது என்பது இங்கே கவனிக்க வேண்டிய விஷயம். 2001ம் ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்டர் சைல்டு தான் இந்த பெருமைக்குறிய சாட்பாட்.
நண்பர்கள் பட்டியல்
ஆக்டிவ் பட்டி (ActiveBuddy) எனும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஸ்மார்ட்டர் சைல்டு சாட்பாட்டை உருவாக்கியது. Robert Hoffer மற்றும் டிமோதி கே இணைந்து இந்நிறுவனத்தை நிறுவினர். புத்தாயிரமாண்டு காலத்தில் எல்லோரும் இணையதளங்களையும், இணைய சேவைகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஃபிளிக்கர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தன்மை கொண்ட சேவைகளும், விக்கிபீடியா போன்ற பங்கேற்பு சேவைகளையும் புதிய அலையென உருவாகத் துவங்கியிருந்தன.
இந்தப் பின்னணியில் தான், ராபர்ட் ஹாபர், ஆக்டிவ் பட்டி நிறுவனத்தின் மூலம், ஸ்மார்ட்டர் சைல்டு சாட்பாட்டை அறிமுகம் செய்தார். மனிதர்களோடு உரையாடல் மேற்கொள்ளும் திறன் கொண்ட இந்த மென்பொருள் சேவையை அப்போது பிரபலமாக இருந்த எய்ம் மெசேஜிங் சேவையில் பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்தார்.
1999ல் வெளியான பைசெண்டானியல் மேன் (Bicentennial Man) நாயகன் புத்திசாலி ரோபோவாக வருவார். இந்த பாத்திரத்தை ஊக்கமாகக் கொண்டு புத்திசாலி சாட்பாட்டாக ஸ்மார்ட்டர் சைல்டை உருவாக்கியிருந்தார்.
சாட்பாட் வகை மென்பொருள்கள் எல்லாமே, அடிப்படையில் மனிதர்களோடு உரையாடும் வகையில் அமைக்கப்பட்டவை தான் என்றாலும், ஸ்மார்ட்டர் சைல்டு முக்கிய முன்னேற்றமாக அமைந்திருந்தது. அதற்கு முன் உருவாக்கப்பட்ட சாட்பாட்கள் பெரும்பாலும் சோதனை நோக்கிலேயே அமைந்திருந்தன. அவற்றின் உரையாடல் திறன் வரம்புகள் கொண்டிடுருந்ததோடு, கம்ப்யூட்டர் விஞ்ஞானிகள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வலர்கள் மத்தியிலேயே அதிகம் பயன்படுத்தப்பட்டன.
பேசு நண்பா பேசு
எய்ம் மேசேஜிங் மேடையில் அறிமுகமான 'ஸ்மார்ட்டர் சைல்டு' முதல் முறையாக வெகுமக்களை இலக்காகக் கொண்டிருந்தது. அதற்கேற்ப, சராசரி பயனாளிகளோடு சுவாரஸ்யமான உரையாடலை மேற்கொள்ளும் திறன் கொண்டிருந்தது.
அது மட்டும் அல்லாமல், பயனாளிகள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறனும் கொண்டிருந்தது. பயனாளிகள் தேவைக்கேற்ப, இணையத்தில் இருந்து தகவல்களை பதிலாக அளிக்கும் ஆற்றலும் கொண்டிருந்தது. இன்றைய வானிலை என்ன? என்றோ அல்லது அருகாமை ரெஸ்டாரண்ட் என்ன என்று கேட்டாலோ, இணையத்தில் தேடித்துழாவி உடனடியாக பதில் அளித்தது.
ஒருவிதத்தில் பார்த்தால், ஸ்மார்ட் போன்களில் இன்று வீற்றிருக்கும் ஆப்பிள் சிரி, கூகுள் அசிஸ்டன்ட் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற டிஜிட்டல் உதவியாளர் சேவைகளுக்கு ஸ்மார்ட்டர் சைல்டு தான் முன்னோடி.
எய்ம் சேவையில், இருந்த நட்புப் பட்டியலிலில், பயனாளிகள் ஸ்மார்ட்டர் சைல்டு சாட்பாட்டையும் நிறுவிக்கொண்டு அதனுடன் உரையாடுவது சாத்தியமானது. இன்று ஸ்லேக் தொழில்முறை மேசேஜிங் சேவையிலும், வாட்ஸ் அப் மற்றும் மெசஞ்சர் மேடைகளிலும், எண்ணற்ற சாட்பாட்கள் ஒருங்கிணைக்கப்படுவதற்கான துவக்கப்புள்ளி இது தான்.
கேலிக்குப் பதிலடி
இணைய அரட்டை என்பது பயன்பாடு சார்ந்தது என்பதைவிட பொழுதுபோக்கு சார்ந்ததாக இருந்த நிலையில், பயனாளிகள் ஸ்மார்ட்டர் சைல்டு சேவையை அணுகிய விதமும் மாறுபட்டிருந்தது. பெரும்பாலான உறுப்பினர்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர், இந்த சாட்பாட்டிடம் பதில் வேண்டி கேள்வி கேட்டதைவிட, உரையாடல் நோக்கிலேயே அதை பயன்படுத்தினர்.
அதாவது, சாட்பாட்டை தங்களுக்கான இணைய நண்பராக பார்த்தனர். அந்த வகையில், ஸ்மார்ட்டர் சைல்டு, மனித ஆளுமை கொண்டிருந்ததும் கைகொடுத்தது. முக்கியமாக மனிதர்கள் கேள்விகளுக்கு ஏற்ப பதில் சொல்லும் இயற்கை மொழித்திறன் தன்மையையும் பெற்றிருந்தது.
பயனாளிகளுடனான உரையாடலை கண்காணித்து சாட்பாட் பதில்களை மேம்படுத்தும் வகையில் பெரும் படையும் அதன் பின்னே இயங்கியது. எய்ம் சேவையில் நுழைந்தால், ஸ்மார்ட்டர் சைல்டு பாட் காத்திருக்கும் என்பது, பல உறுப்பினர்களுக்கு தனிமையை போக்கும் வகையில் அமைந்திருந்தது. அதே நேரத்தில் பதின் பருவத்தினர், இந்த சாட்பாட்டுடன் வில்லங்கமான உரையாடலையும் மேற்கொண்டு சோதித்துப்பார்த்தனர்.
ஆபாசமான மற்றும் வசை சொற்களோடு சாட்பாட்டோடு உரையாடலை மேற்கொண்டு பார்த்தனர். இதை எதிர்பார்த்தே சாட்பாட் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டிருந்ததால், கேள்விகளின் கிண்டல், கேலி, வம்பு தன்மைக்கேற்ப அசராமல் பதில் சொல்லி பயனாளிகளை கவர்ந்தது. இது ஸ்மார்ட்டர் சைல்டு சேவையை மேலும் பிரபலமாக்கியது.
அடுத்த கட்டமாக, நிறுவனங்களுக்கான துணை உரையாடல் மென்பொருளாகவும் இந்த சாட்பாட் விரிவாக்கம் செய்யப்பட்டது. இது பயனாளிகள் பரப்பை மேலும் அதிகமாக்கியது. ஒரு கட்டத்தில் ஸ்மார்ட்டர் சைல்டு, 30 மில்லியனுக்கும் மேலான பயனாளிகளைக் கொண்டிருந்தது. துறை சார்ந்த நிறுவனங்களுக்கான பிரத்யேக சாட்பாட்களை இந்த மேடையில் தொடர்ந்து அறிமுகம் செய்யவும் நிறுவனர் ராபர்ட் ஹாபர் திட்டமிட்டிருந்தார்.
திடீர் முடக்கம்
ஆனால், ஹாபருக்கு இருந்த தொலைநோக்கும், கனவும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு இருக்கவில்லை. அவர்கள் உடனடி வருவாயையும், லாபத்தையும் எதிர்பார்த்தனர். ஆனால், ஸ்மார்ட்டர் சைல்டு வளர்ச்சிக்கு மேலும் ஆய்வுகள் தேவைப்பட்டன. இந்த முரண்பாடு காரணமாக, முதலீட்டாளர்கள் அழுத்தம் அதிகமாகி, சில ஆண்டுகளில் மைக்ரோசாப்டால் நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது.
மைக்ரோசாப்டும் இந்த சேவையை வர்த்தக நிறுவனங்களுக்கான சாட்பாட்டாக பயன்படுத்த முற்பட்டு பின்னர் கிடப்பில் போட்டுவிட்டது. 2007ல் ஸ்மார்ட்ட சைல்டு சேவை மூடுவிழா கண்ட நிலையில், மொபைல் செயலிகள் எழுச்சி காரணமாக எய்ம் சேவையும் செல்வாக்கு இழந்து, 2017ம் ஆண்டு மூடப்பட்டது. எனினும், ஸ்மார்ட்டர் சைல்டு சாட்பாட்கள் வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது.
இப்போது பின்னோக்கிப் பார்க்கும் போது, ஒரு வெற்றிகரமான சாட்பாட்டுக்கான அடிப்படை அம்சங்கள் அனைத்தும் ஸ்மார்ட்டர் சைல்டு பெற்றிருந்ததை உணரலாம். தன்னிடம் இருந்த தரவு பட்டியலுக்கு ஏற்ப அது மனிதர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து புத்திசாலித்தனமாக உரையாடலை மேற்கொண்டது. அதோடு இணையத்தை பயன்படுத்தியும் பதில் அளித்தது.
ஆனால், அந்த காலகட்ட தொழில்நுட்பம் அதன் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு போதுமானதாக இருக்கவில்லை. இதனால் ஸ்மார்ட்டர் சைல்டு மறக்கப்பட்ட நிலையில், ஸ்மார்ட் போன் பயனாளிகள் மத்தியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) சார்ந்த ஆப்பிள் சிரி போன்ற சாட்பாட்கள் எழுச்சி பெற்றன.
சாட்பாட்கள் பயணம் தொடரும்...
Edited by Induja Raghunathan