எலிசா முதல் சாட்ஜிபிடி வரை- 3 | பேசும் மென்பொருள் வரலாறு தெரியுமா?
(முதல் அரட்டை மென்பொருளான எலிசாவுக்கு பின், உரையாடல் மென்பொருள்கள் பிரிவில் வளர்ச்சி மெதுவாகவே நிகழ்ந்தாலும், முக்கிய முன்னேற்றம் அரங்கேறாமல் இல்லை. )
சாட்பாட்களின் வரலாற்றை பார்க்கத் துவங்கியிருக்கிறோம். உண்மையில் நாம் சாட்ஜிபிடியின் வரலாற்றை தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஏனெனில், சாட்பாட்களின் பரிணாம வளர்ச்சியில் மிக முக்கியமான பாய்ச்சலாக ChatGpt நிகழ்ந்திருக்கிறது.
அதை புரிந்து கொள்வதற்காகத் தான், எலிசாவில் இருந்து துவங்கும், சாட்பாட்கள் வரலாற்று படிகளில் பின்னோக்கி போய்க்கொண்டிருக்கிறோம்.
இந்த வரலாற்றை சாட்ஜிபிடியும் அறியும் என்பது தான் சுவாரஸ்யம். ஆம், சாட்ஜிபிடியின் ஆற்றலை உணர்த்தும் வகையில் நேக்கட் சயிண்டிஸ்ட் இணையதள கட்டுரை ஒன்றில், முதல் சாட்பாட் எது என சாட்ஜிபிடியிடம் கேட்கப்பட்டதற்கு, எலிசா என அழைக்கப்படும் முதல் சாட்பாட் 1960-களில் எம்.ஐ.டியில் ஜோசப் வெய்சன்பாமால் உருவாக்கப்பட்டது என பதில் அளிக்கிறது.
தொடர்ந்து சாட்பாட்கள் பற்றி சாட்ஜிபிடி மேற்கொள்ளும் உரையாடல் சுவாரஸ்யமானது என்றாலும், எலிசாவில் இருந்து எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை சாட்ஜிபிடியால் உணர முடியுமா என்பது தெரியவில்லை.
சாட்ஜிபிடி தன்னிலை அறியாத மென்பொருள் என்பதால், வரலாற்றில் அதன் இடத்தை நாமே புரிந்து கொள்ள முயற்சிப்போம். எலிசா, அதைத்தொடர்ந்து 'பாரி' என அடுத்தடுத்த அரட்டை ஆற்றல் கொண்ட மென்பொருள்கள் அறிமுகம் ஆனாலும், அந்த காலகட்டத்தில் வெறும் புதுமையாக மட்டுமே கருதப்பட்டனவேத்தவிர, உண்மையிலேயே பொருட்படுத்தக்கூடிய பேசும் மென்பொருள்களாக இவை உருவாகும் என்ற எண்ணம் பலருக்கு இல்லை.
இதற்காக எலிசாவையோ, அதன்பின், உருவான பாரியையோ குறை சொல்வதற்கில்லை. ஏனெனில், அந்த காலகட்டத்தில் இவற்றின் உருவாக்கத்திற்கு பின்னே இருந்த செயற்கை நுண்ணறிவு நுட்பமே அதன் பிள்ளை பருவத்தில் தான் இருந்தது. அதோடு சோதனையாக, ஏஐ வரலாற்றில் ஆரம்ப ஆண்டுகள் உற்சாகத்திற்கு பிறகு, இத்துறை மீதான ஆர்வமும், நம்பிக்கையும் குறைந்து, நிதி உதவியும் வரண்டு போனது.
ஏ.ஐ குளிர்காலம் எனக் குறிப்பிடப்படும் இந்த சோதனை காலம் 1990-கள் இறுதிவரை நீடித்த நிலையில், ஐபிஎம்மின் வாட்சன் தான் ஏஐ பற்றி பெரிதாக பேச வைத்தது. ஆனால், இடைப்பட்ட காலத்தில் ஏஐ ஆய்வு மொத்தமாக நின்றுவிடவும் இல்லை. ஏ.ஐ தான் எதிர்காலம் எனும் பிடிவாதமான நம்பிக்கை கொண்டவர்கள் பலவிதமான சோதனை முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர்.
பேசும் மென்பொருள்
இப்படி செயற்கை நுண்ணறிவு மீது ஆர்வம் கொண்டவர்களில் ஒருவரான மைக்கேல் மவுல்டினை (Michael Mauldin) இந்த இடத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமானது. மவுல்டின் இணைய வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருப்பதோடு, சாட்பாட்கள் வரலாற்றிலும் முக்கியமானவராகத் திகழ்கிறார்.
கூகுளுக்கு முந்தைய முன்னோடி தேடியந்திரங்களில் ஒன்றான லைகோஸை (Lycos) உருவாக்கிய மவுல்டின், சாட்பாட் எனும் சொல்லையும் உருவாக்கியவராகக் கருதப்படுகிறார். லைகோஸ் தேடியந்திரத்தை அறிமுகம் செய்த அதே 1994ம் ஆண்டில், மவுல்டின் ஏ.ஐ தொடர்பான சர்வதேச மாநாடு ஒன்றில் சமர்பித்த ஆய்வுக்கட்டுரையில், சாட்டர்பாட்ஸ் (Chatterbots) எனும் சொல்லை பயன்படுத்தியதோடு அதற்கான விளக்கத்தையும் அளித்திருந்தார்.
கல்லூரி மாணவராக இருந்தபோதே, எலிசா மென்பொருள் பற்றி கேள்விபட்டு செயற்கை நுண்ணறிவில் ஆர்வம் கொண்ட மவுல்டின், இதே துறையில் முதுகலை ஆய்விலும் ஈடுபட்டார். கல்லூரி காலத்தில் எலிசா மென்பொருள் தாக்கத்தால் பெட் எனும் பெயரில் உரையாடும் தன்மை கொண்ட சிறிய மென்பொருள் நிரலை உருவாக்கியவர், 1980-களின் இறுதியில் தொடர்ச்சியாக மென்பொருள் இயந்திரங்களை (பேசும் ரோபோ நிரல்) உருவாக்கினார்.
டைனிமட் (TinyMUD) எனப்படும் மெய்நிகர் விளையாட்டு உலகிற்காக, மவுல்டின் உருவாக்கிய மென்பொருள்கள் மனிதர்களோடு பேசும் திறன் கொண்டிருந்தன. இந்த மென்பொருள்களில் ஒன்றான ஜூலியாவை கொண்டு, செயற்கை நுண்ணறிவுகான டியூரிங் சோதனையை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட லியோப்னர் பரிசுக்கான போட்டியில் பங்கேற்க வைத்தார். இது பற்றி விரிவாக எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தான், சாட்டர்பாட் எனும் பேசும் மென்பொருள்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
பாட் என்பதை ரோபோக்களின் சுருக்கமாகக் கொண்டு, மனிதர்கள் போலவே பேசும் திறன் கொண்ட மென்பொருள்களை அரட்டை பாட்கள் என அவர் குறிப்பிட்டிருந்தார். இத்தகைய மென்பொருள்களை குறிப்பதற்கு சாட்பாட் எனும் சொல்லே பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அலைஸ் எனும் அற்புதம்
மவுல்டின் அறிமுகம் செய்த லைகோஸ் தேடியந்திரமும், செயற்கை நுண்ணறிவு திறனோடு, கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப தகவல்களை தேடித்தரும் திறன் பெற்றிருந்தது என்பதையும் இங்கு நினைத்துப்பார்க்க வேண்டும். மவுல்டின் அதன் பிறகு வெர்பாட் எனும் மெய்நிகர் பேசும் மென்பொருள்களை உருவாக்குவதற்கான நிறுவனத்தை உண்டாக்கினார். இன்றைய மெய்நிகர் உதவியாளர்களுக்கான முன்னோடியாக மவுல்டின் உருவாக்கிய வெர்பாட்களை கருதலாம்.
இதனிடையே, 1995ல், ரிச்சர்டு வாலசால் (Richard Wallace), அலைஸ் (Alice) அரட்டை மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. ’செயற்கை மொழியியல் இணைய கம்ப்யூட்டர் அமைப்பு’ (Artificial Linguistic Internet Computer Enti) என்பதன் சுருக்கமான அமைந்த ’அலைஸ் பாட்’ முந்தைய அரட்டை மென்பொருள்களை விட மேம்பட்டதாக இருந்தது. உரையாடல் மென்பொருளாக செயல்படுவதற்காக AIML எனும் பிரத்யேக கம்ம்ப்யூட்டர் மொழியில் இது உருவாக்கப்பட்டிருந்தது.
அரட்டை உலகம்
எனினும், அடிப்படையில் வார்த்தைகளின் அமைப்பை வைத்து அதற்கேற்ப உரையாடலில் ஈடுபட்டதே தவிர, கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை.
இருப்பினும், இயற்கை மொழியை புரிந்து கொள்ளும் நோக்கில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இருந்தது. ஓபன் சோர்ஸ் அடிப்படையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டதும் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.
அலைஸ் மென்பொருளுக்கும் எலிசா தான் ஊக்கமாக அமைந்தது. அலைஸ் மென்பொருளுடன் உரையாடுவதற்கு என்று தனி இணையதளமும் கூட உருவாக்கப்பட்டது. இணைய இளம் பெண் தோற்றம் கொண்டிருந்த அலைசுடன், இந்த தளம் வாயிலாக இணையவாசிகள் உரையாட முடிந்தது. ஆனால், கம்ப்யூட்டருடன் உரையாடலாம் என்பது தவிர, இந்த உரையாடல் பெரிய அளவில் சுவாரஸ்யமாக அமைந்திருக்கவில்லை.
இதனிடையே, மிட்ஸ்கு (Mitsuku) எனும் மற்றொரு அரட்டை மென்பொருளும் அறிமுகமானது. அலைஸ் மென்பொருளை இயக்கிய கம்ப்யூட்டர் நிரல் மொழி கொண்டு ஸ்டீவ் வார்ஸ்விக் என்பவர் இதை உருவாக்கியிருந்தார். இங்கிலாந்தின் லீட்சைச்சேர்ந்த ஒரு 18 வயது கம்ப்யூட்டர் பெண் போல இது உரையாடியது. ஒரளவுக்கு புத்திசாலித்தமாக பதில அளிக்கும் ஆற்றலை மிட்ஸ்கு கொண்டிருந்தது. ஆனால், கம்ப்யூட்டர் புரோகிராமுடன் உரையாடிக் கொண்டிருக்கிறோம் எனும் உணர்வே மேலோங்கியது.
நாம் எழுத்து வடிவில் கேள்வி கேட்டால் கம்ப்யூட்டரால் பதில் அளிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் அரட்டை மென்பொருள்கள் அமைந்திருந்தாலும், அவை முக்கிய வரம்புகளைக் கொண்டிருந்தன. சொற்கள் அடிப்படையில் கேள்விகளை புரிந்து கொண்டு, அதற்கேற்ப பொருத்தமான பதில்களை அளித்தாலும், பதில்களுக்கான தரவு பட்டியலுக்கு வெளியே உள்ள கேள்விகளைக் கேட்டால் இவற்றிடம் பதில்கள் இருக்காது.
எனவே, அரட்டை மென்பொருள்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், நடைமுறையில் அவற்றின் பயன்பாடு தொடர்பான அவநம்பிக்கையும் வலுவாக இருந்தது. இந்த நிலையில் இருந்து சாட்ஜிபிடி எனும் அதிசயம் எப்படி சாத்தியமானது என்பது நம்ப முடியாத வியப்பாக அமையலாம். இந்த மாற்றத்திற்கான முதல் முன்னேற்ற அடி, புத்தாயிரமாண்டுக்கு பின் எடுத்து வைக்கப்பட்டது.
2001ம் ஆண்டு அறிமுகமான ஸ்மார்ட்டர் சைல்டு (SmarterChild) அரட்டை மென்பொருள்களின் திசையை மாற்றி அமைத்தது.
சாட்பாட் பயணம் தொடரும் …
எலிசா முதல் சாட் ஜிபிடி வரை – 2 | முதல் சாட்பாட் ‘உணர்வுபூர்வ’ எலிசா உருவான கதை!
Edited by Induja Raghunathan