10,000 டாலர் கொடுத்து விண்வெளிக்கு பயணிக்க டிக்கெட் வாங்கிய எலான் மஸ்க்!
10,000 டாலருக்கு புக் செய்த மஸ்க்!
பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் தனது விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்தார். விர்ஜின் கேலக்டிக் என்ற அவரின் சொந்த நிறுவனம் மூலம் ஒன்றரை மணி நேர சாதனைப் பயணத்தை பிரிட்டன் நேரப்படி நேற்று முன்தினம் பிற்பகல் 3.30 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து தொடங்கினார். விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற ராக்கெட் விமானம் மூலம் இந்தப் பயணம் நிகழ்ந்தது.
இந்தப் பயணத்தை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், உலகின் முன்னணி பணக்காரர் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் மூலம் விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
இதற்காக அவர் ஒரு டிக்கெட்டை 10,000 டாலர் கொடுத்து புக் செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை பின்னர் பிரான்சனும் உறுதிப்படுத்தினார். இதற்கிடையே, பிரான்சன் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக, எலான் மஸ்க் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தப் புகைப்படத்தை பகிர்ந்திருந்த பிரான்சன்,
“ஒரு பெரிய நாளுக்கு முன்னாள் ஒரு நண்பருடன் அந்த நாளை தொடங்குவது மிகவும் நல்லது. நன்றாக இருக்கிறது. உற்சாகமாக இருக்கிறது. தயாராக இருப்பதாக உணர்கிறேன்," என்று ட்வீட் செய்திருந்தார்.
எலான் மஸ்க், சொந்தமாக ஸ்பேஸ்எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், பிரான்சன் நிறுவனத்தில் பயணிக்க இருக்கிறார். ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பயணம் தாமதம் ஆகும் என்பதால், மஸ்க் இப்போது விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்தில் பயணிக்க இருக்கிறார். மஸ்க் டிக்கெட் வாங்கியதை உறுதிப்படுத்திய பிரான்சன்,
“எலான் என் நண்பர், நான் ஒரு நாள் அவருடைய விண்வெளி நிறுவனத்தில் பயணம் செய்வேன்," என்று அவர் கூறியிருக்கிறார்.
விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் விமான டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும், 250,000 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், நிறுவனம் ஏற்கனவே 80 மில்லியன் டாலர் விற்பனை மற்றும் வைப்புத்தொகையை ஈட்டியுள்ளது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
விண்வெளி சுற்றுலாப் பயணிகள் நான்கு நிமிட பூஜ்ஜிய ஈர்ப்பை அனுபவிக்க அனுமதிக்கும் இந்த விமானம், 2022ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சோதனை பயணங்களை மேற்கொள்ள இருக்கிறது.
முன்னதாக நேற்று முன்தினம் மேற்கொண்ட பயணத்தில், இரண்டு விமானிகள் மற்றும் மூன்று மிஷன் நிபுணர்களைக் கொண்ட குழுவுடன் பயணித்த பிரான்சன், விண்வெளியின் விளிம்பை அடைய ஒரு மணிநேரம் எடுத்துக் கொண்டனர், அங்கு அவர்கள் நான்கு நிமிடம் எடையற்ற தன்மையை அனுபவித்தனர். இந்த வித்தியாச அனுபவத்தை,
“ஒரு மேஜிக்கல் அனுபவம்' என்று அழைத்த பிரான்சன், 17 வருட கடின உழைப்புக்குக் கிடைத்த வெற்றி," என்று நெகிழ்ந்துள்ளார்.