'சொந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு பயணித்த முதல் நபர்’ - பிரிட்டிஷ் கோடீஸ்வரர் சாதனை!
’நான் நினைத்ததை விட மேஜிக் நிறைந்தது' எனப் பெருமிதம்!
சமீபத்தில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ், விண்வெளிக்குச் சுற்றுலா செல்ல இருப்பதாகத் தெரிவித்தார். ஜூலை 20ம் தேதி அவரின் சொந்த நிறுவனமான ப்ளு ஆர்ஜின் நிறுவனம் மூலமாக இந்தப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். ஆனால் இந்தப் பயணத்துக்கு முன்னதாக அதாவது ஜெப் பெஸோஸ் பயணம் செய்ய இருக்கும் ஜூலை 20ம் தேதிக்கு 9 நாட்கள் முன்னதாக, ஜூலை 11ம் தேதி இதேபோல விண்வெளிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறது என அறிவிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தை செய்யவிருப்பது பிரிட்டிஷ் கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் என்பவர் தான். இவரும் விண்வெளி சுற்றுலா நிறுவனம் ஒன்றை நிறுவினார். விர்ஜின் கேலக்டிக் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிறுவனம் அறிவிக்கப்பட்டபடியே, தனது முதல் சோதனை பயணத்தை நேற்று துவங்கியது.
பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் இருந்து இந்தப் பயணம் துவங்கியது. விர்ஜின் கேலக்டிக் நிறுவனம் உருவாக்கிய யுனிட்டி என்ற விண்வெளி விமான ராக்கெட் மூலம் இந்தப் பயணம் நிகழ்ந்தது. சுமார் ஒன்றரை மணி நேரம் வரை இந்த பயணம் இருந்தது. பின்னர் வெற்றிகரமாக பூமிக்கும் திரும்பியது.
இந்த யுனிட்டி ராக்கெட்டை, மிகப்பெரிய இரண்டு விமானங்கள் சுமந்துகொண்டு நியூ மெக்ஸிகோவின் ஸ்பேஸ்போர்ட்டில் இருந்து புறப்பட்டது. பின்னர் 15 கி.மீ. உயரத்தை, அதாவது 50 ஆயிரம் அடி உயரத்தை அடைந்த பிறகு இரண்டு விமானங்களும் விலகிக்கொள்ள, ராக்கெட் மட்டும் விண்வெளி நோக்கி பயணிக்கத் தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம், 90 கி.மீ. உயரத்தில் விண்வெளியை எட்டிய பின் ராக்கெட் தனது பயணத்தை முடித்துக்கொண்டு பூமி திரும்பியது.
இந்த 90 கி.மீ. உயரம் என்பது 2 லட்சத்து 95 ஆயிரம் அடி உயரம் ஆகும். இந்த உயரத்தில் எடை அற்றுப் போய் ராக்கெட்டிலேயே ரிச்சர்ட் பிரான்சன் விமானத்திலேயே பறந்தார். இந்த வீடியோ காட்சிகளை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். கூடவே,
“நான் சிறுவயதிலிருந்தே இந்த தருணத்தைப் பற்றி கனவு கண்டேன், ஆனால் விண்வெளிக்குச் செல்வது நான் நினைத்ததை விட மேஜிக் நிறைந்ததாக இருந்தது. இந்த பயணம் என் வாழ்நாளின் சிறந்த அனுபவம்," என்று நெகிழ்ந்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பயணம் மூலம் பிரான்சன் தனது சொந்த விண்கலத்தில் விண்வெளிக்கு பயணித்த முதல் நபராக ஆனார். பிரான்சன் தனது இந்த பயணம் விண்வெளி சுற்றுலாத் துறையை மேம்படுத்த உதவும் என்று நம்புகிறார். இந்த நம்பிக்கைக்கு ஏற்ப 2022 ஆம் ஆண்டில் வழக்கமான வணிக நடவடிக்கைகளை இந்த நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2004ல் விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்ற கனவை காணத் தொடங்கியவர் பிரான்சன். பல தடைகளைக் கடந்து தனது வாழ்நாள் கனவை 71 வயதில் நனவாக்கி இருக்கிறார், அதுவும் தனது சொந்த பணத்தில் உருவாக்கிய ராக்கெட் மூலம். இவரின் இந்த கனவு நிச்சயம், ஊக்கம் அளிக்கக் கூடிய ஒன்று அனைவருக்கும்.