‘நான் மோடி ரசிகன்’ - பிரதமரை சந்தித்த பிறகு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட எலான் மஸ்க்!
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை சந்தித்தார். இந்தியாவில் முதலீடுகள், தொழில்நுட்பத் துறையில் உதவி மற்றும் பிற விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி இன்று டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கை சந்தித்தார். இந்தியாவில் முதலீடுகள், தொழில்நுட்பத் துறையில் உதவி மற்றும் பிற விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடி நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று காலை டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட மோடி, இன்று முதல் அமெரிக்காவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்தியா-அமெரிக்க கூட்டுறவை மேலும் வலுப்படுத்த இந்த பயணம் உதவும் என்று புறப்படும் முன் பிரதமர் தெரிவித்தார்.
முக்கியப் பிரபலங்களுடன் சந்திப்பு:
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நோபல் பரிசு பெற்ற பொருளாதார மோதை பால் ரோமர், எழுத்தாளர் நிக்கோலஸ் நாசிம் தலீப், விண்வெளி விஞ்ஞானி நீல் டிகிராஸ் டைசன், முதலீட்டாளர்கள் ரே டேலியோ, ஸ்டீபன் கிளாஸ்கோ, சந்திரிகா டாண்டன், டேனியல் ரசல், மைக்கேல் ஃபுரோமேன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
எலான் மஸ்க் உடன் சந்திப்பு:
டெஸ்லா நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் புதன்கிழமை (ஜூன் 21) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எலோன் மஸ்க், நாட்டின் வளர்ச்சியில் இந்தியப் பிரதமர் தனி அக்கறை கொண்டுள்ளதாகவும், நாட்டில் முதலீடு செய்ய டெஸ்லாவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மோடியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எலான் மஸ்க்,
“நான் மோடியின் ரசிகன். பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் உற்சாகமான சூழ்நிலையில் நடைபெற்றது. விரைவில் இந்தியா வரவுள்ளேன். ஸ்டார் லிங்க் இன்டர்நெட்டை இந்தியாவிற்கு கொண்டு வருவதன் மூலம் தொலைதூர கிராமப்புறங்களுக்கு இணைய சேவைகளை வழங்குவது குறித்தும் இருவரும் ஆலோசித்தோம்,” எனக்கூறினார்.
2015ம் ஆண்டு பிரதமர் மோடி தனது ஃப்ரீமாண்ட் தொழிற்சாலைக்கு வருகைபுரிந்ததை நினைவு கூர்ந்த எலான் மஸ்க்,
“உலகின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா இருப்பதால், அந்த நாட்டில் பல வாய்ப்புகள் உள்ளன. பிரதமர் மோடியும் நாட்டின் மீது மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அதனால் தான் இந்தியா வருமாறு வற்புறுத்துகிறார். அதனால்தான் எதிர்கால இந்தியாவை தொடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
நாட்டுக்கு நல்ல விஷயங்களைச் செய்யவே மோடி விரும்புவதாகவும், அவர்கள் புதிய நிறுவனங்களை திறந்த மனதுடன் அழைத்து, ஆதரவாக அளிக்க விரும்புவதாகவும் கூறிய எலான் மஸ்க், இந்தியாவுக்கு பலனளிக்கக்கூடிய விஷயங்களை மேற்கொள்ள தனது நிறுவனம் நடவடிக்கை தயாராகி வருவதாகவும் கூறினார்.
இந்திய வருகை:
ட்விட்டர் குறித்து பேசிய எலான் மஸ்க், உள்ளூர் அரசாங்க விதிகளை பின்பற்றுவதைத் தவிர ட்விட்டருக்கு வேறு வழியில்லை. அந்த அரசாங்க சட்டங்களுக்கு நாங்கள் இணங்கவில்லை என்றால், நாங்கள் நிறுவனத்தை மூட வேண்டியிருக்கும். எனவே, இது எங்களால் செய்யக்கூடிய சிறந்த விஷயம். சட்டத்தின் கீழ் முடிந்தவரை பேச்சு சுதந்திரத்தை வழங்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் எனக்கூறினார்.
"அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளேன். டெஸ்லா இந்தியாவிற்குள் நுழையும் என்று நான் நம்புகிறேன். மோடியின் ஆதரவுக்கு நன்றி. எதிர்காலத்தில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் வர வாய்ப்புள்ளது," என்றார்.
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு வர உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளது மோடியின் அமெரிக்க பயணத்தில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.