ட்விட்டர் நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் ஏன் இணையவில்லை? காரணத்தை வெளியிட்ட ட்விட்டர் சிஇஓ!
எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைந்தால் பல அதிரடி மாற்றங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ட்விட்டர்வாசிகள் இதனால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் உலகிலேயே நெம்பர் ஒன் பணக்காரராக வலம் வருகிறார். பெரும் பணக்காரர் என்பதாலேயெ எலான் மஸ்க், உலக பிரபலம் என்றாலும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக செயல்பட்டு தன்னை மேலும் பிரபலப்படுத்தி வருகிறார்.
தனது நிறுவனம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முதல் சர்ச்சைக் கருத்துக்கள் வரை ட்வீட் செய்து, சர்ச்சையில் சிக்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், எலான் மஸ்க் திடீரென உலகின் முன்னணி சோசியல் மீடியாக்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை கைப்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது. ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கிய எலான் மஸ்க், 11 பேர் கொண்ட டிவிட்டர் நிர்வாகக் குழுவில் இணைய உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. இதற்காக எலான் மஸ்க் 2.89 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளார்.
ட்விட்டரின் நிர்வாகக் குழுவில் இணைய உள்ளதை அறிவிப்பார் என அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்தால், ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா? என கருத்துக்கணிப்பு நடத்தினார். எலான் மஸ்க்கின் இந்த செயலால் பதறிப்போன ட்விட்டர் சிஇஓ பராக் அகர்வால்,
“இதற்கு நீங்கள் கொடுக்கும் வாக்குகளின் விளைவுகள் மிகவும் முக்கியமானவை. எனவே சரியானதை தேர்ந்தெடுங்கள் என பதிலளித்தார். இதனால் பொறுப்பேற்கும் முன்பே எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்தை பதறவைத்துவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இதனிடையே எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இடம் பிடிக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ட்விட்டர் நிறுவன சிஇஓவான பராக் அகர்வால் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஏன் ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணையவில்லை என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
"எலான் மஸ்க் எங்கள் குழுவில் சேர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார். என்ன நடந்தது என்பதைப் பற்றி இங்கே நான் பகிர்ந்து கொள்கிறேன். எலான் குழுவில் சேர்வது பற்றியும், எலானுடன் நேரடியாகவும் பல விவாதங்கள் நடத்தினோம். நாங்கள் ஒத்துழைத்து, அபாயங்களைப் பற்றி தெளிவுபடுத்துவதில் உற்சாகமாக இருந்தோம். எலானை நிறுவனத்தின் நம்பிக்கையாளராகக் கொண்டிருப்பது, அனைத்து நிர்வாகக் குழு உறுப்பினர்களைப் போலவே, நிறுவனம் மற்றும் எங்கள் பங்குதாரர்கள் அனைவரின் நலன்களுக்காகவும் செயல்பட வேண்டும், முன்னோக்கிச் செல்லும் சிறந்த பாதை என்று நாங்கள் நம்பினோம். இதனால் எலான் மஸ்கிற்கு நிர்வாகக் குழுவில் இடம் ஒதுக்கினோம். பேக்ரவுண்ட் செக்அப் மற்றும் முறையான ஆவண பரிமாற்றத்திற்கு பிறகு எலானை நிர்வாக குழுவில் இணைக்க முடிவெடுத்தோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏப்ரல் 4ம் தேதி அன்று இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவிருந்த நிலையில், அதே காலையில் தான் இனி ட்விட்டர் குழுவில் சேரப் போவதில்லை என்று எலான் பகிர்ந்து கொண்டதை பராக் தனது ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எலான் மஸ்க் நிர்வாகக் குழுவில் இடம் பிடிக்காமல் விட்டாலும் எங்கள் பங்குதாரர்களிடமிருந்து வரும் கருத்துக்களை எப்போடும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
“எங்கள் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகள் மாறாமல் இருக்கும். நாம் எடுக்கும் முடிவுகளும், எப்படி செயல்படுத்துவதும் நம் கையில்தான் உள்ளது, வேறு யாருடையது அல்ல. சர்ச்சையைக் குறைப்போம்,” எனக்கூறியுள்ளார்.
எலான் மஸ்க் ட்விட்டர் நிர்வாகக் குழுவில் இணைந்தால் பல அதிரடி மாற்றங்கள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த ட்விட்டர்வாசிகள் இதனால் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஆங்கிலத்தில்: அபராஜிதா | தமிழில்: கனிமொழி