அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் உருவாக்கி விற்பனையில் அசத்தும் பொறியாளர்!
Okinawa Scooters நிறுவனர் ஜீதேந்தர் ஷர்மா வெற்றிகரமான வணிக உத்திகள் பற்றியும் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான ஏற்புத்தன்மை சார்ந்த சவால்களை சமாளிப்பது பற்றியும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
ஜீதேந்தர் ஷர்மா மெக்கானிக்கல் பொறியாளர். இண்டர்நேஷனல் பிசினஸில் பிஜி டிப்ளமோ முடித்துள்ளார்.
இவர் ஹோண்டா மோட்டர்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் நிறுவனத்தில் ஆபரேஷ்னஸ் ஹெட் பதவியில் இருந்த சமயத்தில் ஜப்பானில் உள்ள ஒகினவா தீவிற்குச் சென்றுள்ளார். இந்தத் தீவில் வசிப்பவர்களுக்கு ஆயுள் அதிகம். மாசில்லாத சுற்றுச்சூழலே இங்கிருப்பவர்களின் ஆரோக்கியம் மேம்படுவதற்குக் காரணம் என்பதை ஜீதேந்தர் புரிந்துகொண்டார்.
“இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்களிக்கும் வகையில் நிறுவனம் ஒன்றைத் தொடங்க இந்த அனுபவமே உந்துதலாக இருந்தது. மாசுபாட்டைக் குறைக்க உதவும் வகையில் எலக்ட்ரிக் வாகனம் வணிகத்தைத் தொடங்க முடிவு செய்தேன்,” என்று எஸ்எம்பிஸ்டோரியின் பிரத்யேக நேர்காணலில் ஜீதேந்தர் தெரிவித்துள்ளார்.
ஆட்டோமொபைல் தயாரிப்பு, தர உறுதி போன்ற துறைகளில் 25 ஆண்டுகால அனுபவமிக்கவர் ஜீதேந்தர். எனவே இந்த அனுபவங்களை ஒன்றுதிரட்டி 2015ம் ஆண்டு குருகிராமில் எலக்ட்ரிக் இருசக்கர வாகன வணிகத்தைத் தொடங்கினார். ஒகினவா தீவைக் கண்டு வியப்படைந்த ஜீதேந்தர் தனது நிறுவனத்திற்கு Okinawa Scooters எனப் பெயரிட்டார்.
”இரண்டாண்டு கால ஆய்விற்குப் பின்னர் 2017ம் ஆண்டு Okinawa Ridge என்கிற முதல் தயாரிப்பை சந்தையில் அறிமுகப்படுத்தினோம். அப்போதிருந்து ஏழு வெவ்வேறு வகையான மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இந்தியாவில் அதிவேக மின்சார இருசக்கர வாகனங்கள் பிரிவில் அதிகபட்ச சந்தை அளவைக் கைப்பற்றியிருக்கிறோம். தற்போது 60,000 இருசக்கர வாகனங்கள் சாலையில் பயன்பாட்டில் இருக்கின்றன,” என்கிறார்.
ஆட்டோகார் புரொஃபஷனல் அறிக்கையின்படி, 2020 நிதியாண்டில் Okinawa 10,000-க்கும் மேற்பட்ட யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஹீரோ எலக்ட்ரிக் 7399 யூனிட்களும் Ather 2,908 யூனிட்களும் விற்பனை செய்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜீதேந்தர் வெற்றிகரமான வணிக உத்திகள் பற்றியும் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான ஏற்புத்தன்மை சார்ந்த சவால்களை சமாளிப்பது பற்றியும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
அவருடன் நடந்த உரையாலின் தொகுப்பு:
எஸ்எம்பிஸ்டோரி: மின்சார வாகனங்களின் ஏற்புத்தன்மையில் நுகர்வோரின் மனநிலை மிகப்பெரிய சவாலாக இருக்கும் சூழலில் உங்களுடைய ஆரம்பகட்ட சவால்கள் என்னவாக இருந்தன?
ஜீதேந்தர் ஷர்மா: 2015ம் ஆண்டு Okinawa Scooters யோசனை புதுமையானதாக இருந்தது. குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் யோசனையைப் பகிர்ந்துகொண்டபோது அனைவரும் ஆதரவளித்தனர். முதலீடு செய்யவும் முன்வந்தனர். ஆனால், வெளியிலிருந்து முதலீடு வாங்கவில்லை.
நாங்கள் சந்தையை ஆய்வு செய்தபோது சார்ஜ் செய்வதற்குப் போதிய கட்டமைப்பு வசதி இல்லாததே மிகப்பெரிய சவால் என்பது புரிந்தது. மக்களிடையே மின்சார வாகனங்கள் மீது தயக்கம் இருந்தது. மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்தோம்.
இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் மும்முரம் காட்டினோம். விரைவில் மின்சார ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தினோம். இந்த வாகனத்தில் இருக்கும் லித்தியன் அயன் பேட்டரிகள் அகற்றக்கூடியவை என்பதால் அவற்றை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று சார்ஜ் செய்துகொள்ளலாம். இதுவே இதன் சிறப்பம்சம்.
இந்தத் தீர்வு மக்களைக் கவர்ந்தபோதும் மின்சார வாகனங்களை ஏற்றுக்கொண்டு எளிதில் மாறிவிடவில்லை.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் தயாரிப்பு வகைகளை எவ்வாறு உருவாக்கினீர்கள்?
ஜீதேந்தர் ஷர்மா: குறைந்த வேகம் முதல் அதிவேக மின்சார ஸ்கூட்டர்கள் வரை வழங்கத் தொடங்கினோம். லெட் ஆசிட் முதல் லித்தியம் அயன் பேட்டரி வரை கொண்ட தயாரிப்புகளை விரிவுபடுத்தியிருக்கிறோம். தற்சமயம் 100 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்படும் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பைப்லைனில் உள்ளது.
எங்கள் தயாரிப்புகளை உற்பத்தி செய்து இந்தியா முழுவதும் உள்ள 350 டீலர்கள் மூலம் விற்பனை செய்கிறோம். உள்நாட்டு செயல்பாடுகளுக்கும் உயர் தரத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். நவீன தொழில்நுட்பங்களுக்கான தேவை சந்தையில் அதிகம் இருப்பதால் அதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: உங்கள் மின்சார இருசக்கர வாகனங்கள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?
ஜீதேந்தர் ஷர்மா: எங்கள் தொழிற்சாலை ராஜஸ்தானின் குஷ்கெரா அல்வர் பகுதியில் அமைந்துள்ளது. எங்கள் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலை ஒன்று முழுவீச்சில் செயல்பட உள்ளது.
அகற்றக்கூடிய லித்தியம் அயன் பேட்டரி, மைக்ரோபிராசசர் கண்ட்ரோலர், பெர்மனண்ட் மேக்னெட் BLDC மோட்டார் போன்றவற்றுடனும் மொபைல் சார்ஜிங், கீலெஸ் ஸ்டார்ட், ஆப் கனெக்டிவிட்டு போன்ற இதர அம்சங்களுடனும்கூடிய மின்சார ஸ்கூட்டர்கள் எங்கள் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகின்றன.
எஸ்எம்பிஸ்டோரி: மின்சார வாகனங்கள் பொதுவாக விலையுயர்ந்தவையாக இருக்கும். உங்கள் தயாரிப்பின் விலை என்ன? எந்த வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டிருக்கிறீர்கள்?
ஜீதேந்தர் ஷர்மா: எங்கள் தயாரிப்புகள் 59,000 ரூபாய் முதல் 1.09 லட்ச ரூபாய் வரை கிடைக்கின்றன. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன.
இரண்டாம் நிலை நகரங்களில் எங்கள் தயாரிப்புகளுக்குக் கிடைத்த வரவேற்பு ஆச்சரியப்படும் வகையில் இருந்தது. எங்கள் ரீடெயில் ஸ்ட்ராடெஜியின் ஒரு பகுதியாக இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் விரிவடையும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள் சிரமமின்றி வாங்குவதற்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: விற்பனை அல்லது சந்தைப்படுத்துதலுக்கு உங்கள் நிறுவனம் டிஜிட்டல் தளங்களை எவ்வாறுப் பயன்படுத்திக்கொள்கிறது?
ஜீதேந்தர் ஷர்மா: மின்சார வாகனங்கள் பற்றிய தவறான கண்ணோட்டங்களை தகர்த்தெறிவதில் எங்கள் மார்க்கெட்டிங் குழு பணியாற்றி வருகிறது. இதற்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி Google AdSense மூலமாக தயாரிப்பை விளம்பரப்படுத்துகிறோம்.
எஸ்எம்பிஸ்டோரி: Okinawa பயணத்தின் முக்கிய மைல்கல்லாக எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
ஜீதேந்தர் ஷர்மா: மின்சார இருசக்கர வாகனப் பிரிவில் FAME-II ஒப்புதல் பெற்ற முதல் தயாரிப்பாளர் என்கிற அங்கீகாரம் பெற்றது எங்களது முதல் மைல்கல். இதனால் எங்கள் பிராண்ட் மீதான நம்பகத்தன்மை அதிகரித்தது. 2018-ம் ஆண்டு குருகிராம் முதல் லடாக் வரை எங்கள் iPraise மின்சார ஸ்கூட்டரில் பயணம் ஏற்பாடு செய்தோம். இது இரண்டாவது மைல்கல்.
எஸ்எம்பிஸ்டோரி: மின்சார வாகனங்கள் சந்தையில் எத்தனையோ புதிய நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில் போட்டியைத் தாண்டி எவ்வாறு தனித்துவமாக செயல்படுகிறீர்கள்?
ஜீதேந்தர் ஷர்மா: கடந்த இரண்டாண்டுகளில் மின்சார வாகனங்கள் துறையில் பல நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியிருப்பது உண்மைதான். ஆனால், சந்தை அளவு மிகப்பெரியது என்பதால் எல்லோரும் தங்களை வலுப்படுத்திக்கொண்டு பங்களிக்க முடியும்.
தற்சமயம் அனைவரும் சேர்ந்து நுகர்வோரின் மனநிலையை மாற்றி அவசியத்தைப் புரியவைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும். அதேபோல் உள்நாட்டு சந்தையில் மின்சார வாகனங்களின் தேவையை விநியோகத்தையும் முடுக்கிவிடும் வகையில் கட்டமைப்பை உருவாக்கவேண்டும்.
எஸ்எம்பிஸ்டோரி: கொரோனா பெருந்தொற்று உலகளவில் வணிகங்களை எவ்வாறு பாதித்துள்ளது? உங்கள் வருங்காலத் திட்டங்கள் என்ன?
ஜீதேந்தர் ஷர்மா: கொரோனா பெருந்தொற்று மின்சார வாகனங்கள் சார்ந்த வணிகங்களை மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் மின்வாகன நிறுவனங்கள் சவால்களை சந்தித்தன. இருப்பினும் Okinawa உள்நாட்டு தயாரிப்பு என்பதால் அதிகம் பாதிக்கப்படவில்லை.
வரும் நாட்களில் மின்சார வாகனங்களுக்கான சந்தை தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் எங்கள் டீலர்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறோம். இந்தக் கடினமான நேரங்களில் டீலர்களுக்கு உதவும் வகையில் அவர்களது லாபத்தை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா