இயற்கையை ரசிச்சுட்டே ரயில் பயணம் செய்யுங்க - ‘VisaDome’ பற்றி தெரியுமா?
நீங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் செய்ய விரும்பினால், அந்த பகுதியில் விஸ்டாடோம் ரயில் இருக்கிறதா என்று பாருங்கள். அந்த வழித்தடத்தில் விஸ்டாடோம் ரயில் இருந்தால், கண்ணாடி ரயிலில் பயணத்தைத் திட்டமிடுங்கள்.
நீங்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் சுற்றுப்பயணம் செய்ய விரும்பினால், அந்த பகுதியில் 'Vista dome' 'விஸ்டாடோம்' ரயில் இருக்கிறதா என்று பாருங்கள்...
அந்த வழித்தடத்தில் விஸ்டா டோம் ரயில் இருந்தால், கண்ணாடி ரயிலில் பயணத்தைத் திட்டமிடுங்கள்.
இந்தியன் ரயில்வே பயணிகளை ஈர்ப்பதற்காக பல்வேறு விதமான ரயில்களையும், அதிநவீன வசதிகளைக் கொண்ட ரயில் பெட்டிகளையும் உருவாக்கி வருகிறது. அந்த வகையில் கண்ணாடி மேற்கூரை மற்றும் விசாலமான கண்ணாடி ஜன்னல்களால் ஆன விஸ்டா டோம் கோச்சின் சிறப்பம்சங்கள், வழித்தடங்கள், டிக்கெட் விலை விவரம் போன்றவை குறித்து பார்க்கலாம்...
விஸ்டா டோம் சிறப்புகள் என்ன?
மத்திய ரயில்வேயின் விஸ்டா டோம் பெட்டிகள் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மும்பை-கோவா வழித்தடத்தில் உள்ள பள்ளத்தாக்குகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைப் பார்ப்பதற்கும், மும்பை-புனே வழித்தடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அற்புதமான அழகைக் காண்பதற்கும், கண்ணாடி மேல்புறம் மற்றும் அகலமான கண்ணாடி ஜன்னல்கள் கொண்ட விஸ்டா டோம் பெட்டிகள் பயணிகளுக்கு அற்புதமான உணர்வைத் தருகின்றன.
தற்போது, விஸ்டா டோம் பெட்டிகளுடன் இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் 45 ரயில்களை இயக்கி வருகிறது. சமீபத்தில் ராஜ்யசபாவில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,
“விஸ்டாடோம் ரயில் பயணத்திற்கான வழித்தடங்கள் இயற்கையான இயற்கை அழகின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாகவும், விஸ்டாடோம் பெட்டிகளின் இருப்பு, அதன் செயல்பாட்டு சாத்தியம், ரயிலின் பகல் நேரப் பயணம், சுமை வரம்புகள் மற்றும் பயணிகளின் தேவை போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விஸ்டாடோம் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும்,” கூறியுள்ளார்.
விஸ்டா டோம் கோச்:
இந்தியன் ரயில்வே விஸ்டா டோம் கோச் முதன் முறையாக 2018ம் ஆண்டு மும்பை டூ மட்காவ் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளின் பெரும் தேவை காரணமாக, சென்ட்ரல் ரயில்வேயின் மூன்றாவது விஸ்டா டோம் கோச் ஆகஸ்ட் 15, 2021 முதல் டெக்கான் குயினில் பயணிகளுக்கு அற்புதமான அனுபவத்தை வழங்குகிறது.
மேலும், நான்காவது விஸ்டாடோம் கோச் 25 ஜூலை 2022 அன்று பிரகதி எக்ஸ்பிரஸில் சேர்க்கப்பட்டது. இப்போது, விஸ்டா டோம் கோச் புனே - செகந்திராபாத் சதாப்தியில் சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பின் போது ரத்து செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில், விஸ்டா டோம் பெட்டியுடன் கூடுதலாக ஆகஸ்ட் 10 முதல் மீண்டும் இயக்கப்பட்டு வருகிறது.
புனே - செகந்திராபாத் சதாப்தி எக்ஸ்பிரஸ் பயணிகள் உஜ்னியின் உப்பங்கழி மற்றும் பிக்வான் அருகே உள்ள அணையை கண்டு ரசிக்கலாம். இது பல நீர்வீழ்ச்சிகள் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளுக்கு பிரபலமானது, விகாராபாத் அருகே உள்ள அனந்தகிரி மலைகள் வழியாக மலையேற்றம் செய்யும் போது காடுகளின் இயற்கை அழகை ரசிக்கலாம்.
விஸ்டா டோம் கோச்சில் என்னென்ன இருக்கு?
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விஸ்டாடோம் கோச் கண்ணாடி கூரை மற்றும் ஆடம்பரமான உட்புறங்களைக் கொண்டுள்ளது. இந்தப் பெட்டிகள் சுற்றுலாப் பெட்டிகள் என அழைக்கப்படுகின்றன. இந்திய இரயில்வேயின் வழக்கமான ரயில் பெட்டியில் இருந்து வித்தியாசமான விஸ்டாடோம் கோச்சின் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
- ஐரோப்பிய பாணி ரயில்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட விஸ்டா டோம் பெரிய கண்ணாடி ஜன்னல்களைக் கொண்டுள்ளது. பயணிகளை விட கண்காணிப்பு அறையில் பெரிய அளவிலான கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.
- பகலில் மலைகள் மற்றும் பள்ளத்தாக்கின் அழகையும், இரவில் நட்சத்திரம் மற்றும் சந்திரனின் அழகையும் கண்டு ரசிக்கும் படியான கண்ணாடி ரூஃப்-டாப் அம்சம் விஸ்டா டோம் கோச்களில் இடம் பெற்றுள்ளது.
- விபத்து அல்லது எதிர்பாராத இயற்கை சீற்றங்களின் போது கூட விஸ்டா டோம் கோச்சின் மேற்கூரை மற்றும் ஜன்னல்கள் நொறுங்கிப் போவதைத் தடுக்க லேமினேட் கண்ணாடியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்தை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மண்டல ரயில்வே எடுத்துள்ளது.
- ஒவ்வொரு விஸ்டாடோம் பெட்டியிலும் சரக்குகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
- அனைத்து விஸ்டாடோம் பெட்டிகளிலும் பார்வையற்ற அல்லது பார்வைக் குறைபாடுள்ள பயணிகளுக்காக பிரெய்லி அடையாளங்கள் வசதியான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
- ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும் இந்தப் பெட்டிகள் GPS அடிப்படையிலான பொது முகவரி மற்றும் பயணிகள் தகவல் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளன.
- அனைத்து பெட்டிகளிலும் தானியங்கி தீ கண்டறிதல், அலாரம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
- ஆடம்பரமான பயண அனுபவத்தை தர வைஃபை, ஜிபிஎஸ் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
- பயணிகள் எப்போதும் சுற்றுச்சூழலை அழகாக பார்க்கும் வகையில், சுழற்றக்கூடிய இருக்கைகள் மற்றும் புஷ்பேக் நாற்காலிகள் உள்ளன.
- விஸ்டா டோம் கோச், இரண்டு எக்சிகியூட்டிவ் கிளாஸ் ஏசி கோச்சுகள் மற்றும் ஒன்பது ஏசி நாற்காலி கார் பெட்டிகள் உள்ளன.
- மின்சாரத்தில் இயங்கும் தானியங்கி ஸ்லைடிங் கம்பார்ட்மென்ட் கதவுகள், பரந்த பக்க நெகிழ் கதவுகள், தடையில்லா இணையத்தை பெற வைஃபை வசதி, எல்இடி விளக்குகள், மொபைல் சார்ஜிங் சாக்கெட்டுகள், பயோ-டாய்லெட், ஸ்டீல் லக்கேஜ் அலமாரிகள், லவுஞ்ச் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.
கட்டண விவரங்கள்:
செகந்திராபாத் முதல் புனே வரை உள்ள அழகை பார்க்க விரும்பும் பயணிகளுக்கு விஸ்டா டோம் கோச்சில் பயணிக்க ஒரு நபருக்கு 2,110 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் கோச்சில் பயணிக்க ஒரு நபருக்கு ரூ.1935/-. முன்பதிவு செய்யும் போது உணவு தேவைப்படுவோர் ரூ.385-யை கூடுதலாக செலுத்த வேண்டும்.
ஏசி நாற்காலி காரில் பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.905/-லிருந்து தொடங்குகிறது
விஸ்டா டோம் கோச் உள்ள ரயில்கள்:
விசாகப்பட்டினம் - கிரந்துல் எக்ஸ்பிரஸ்
அலிபுர்துவார் - நியூ ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் 9ரயில் எண் 15777/78)
குவஹாத்தி - பதர்பூர் எக்ஸ்பிரஸ் ( ரயில் எண் 15887/88 )
டின்சுகியா - நஹர்லகுன் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 15907/08)
டார்ஜிலிங் இமாலயன் ரயில்வே (52593/95/98/44, 52541, 52540, 52556)
அகமதாபாத் - கேவாடியா எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 20947/48)
மோவ் - படல்பானி - கலகுண்ட் (எம்ஜி) ரயில் எண்கள்: 52965/66)
பில்லிமோரா - வாகாய் (என்ஜி) (ரயில் எண்: 09501/02, 09071/7)
யஸ்வந்த்பூர் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16539/40 )
யஸ்வந்த்பூர் - கார்வார் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16515/16 ) யஸ்வந்த்பூர் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16575/76)
யஸ்வந்த்பூர் - ஷிவமோக்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 16579/80)
கல்கா - சிம்லா எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 52453/54 மற்றும் 52459/60)
மைலானி - பிச்சியா சிறப்பு (எம்ஜி) (ரயில் எண் 05319/20)
முன்பதிவு செய்வது எப்படி?
விஸ்டாடோம் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய நீங்கள் பயணிக்க விரும்பும் வழித்தடத்தை முதலில் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் முடிவு செய்தவுடன், டிக்கெட்டை முன்பதிவு செய்ய கீழே உள்ள வழிமுறையைப் பின்பற்றவும்:
- IRCTC இணையதளத்திற்குச் செல்லவும்.
- ரயில் நிலையம், ரயில் எண், ரயில் பெயர், பயணத் தேதி மற்றும் வகை ஆகியவற்றை உள்ளிட்டு விவரங்களை நிரப்பவும்.
- விஸ்டாடோம் கோச் முன்பதிவுக்கு ஏசி நாற்காலி கார் அல்லது எக்ஸிகியூட்டிவ் நாற்காலி காரைத் தேர்ந்தெடுக்கவும்.
- அடுத்து, கட்டண விவரங்கள் காண்பிக்கப்படும், அதில் உங்களுக்கு பொருத்தமானதை தேர்வு செய்ய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து விஸ்டாடோம் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய “இப்போதே முன்பதிவு செய்” என்ற ஆப்ஷனைக் கிளிக் செய்ய வேண்டும்.
சென்னை டு மைசூர் ஜெட் வேகத்தில் ‘வந்தே பாரத்’ ரயில் - எவ்வளவு நேரத்தில் போகும் தெரியுமா?