23 வயதில் சிறிய இடத்தில் தொடங்கி, இன்று 160 கோடி டர்ன்ஓவர் நிறுவனத்தை கட்டமைத்த இளைஞர்!
வாடகை கொடுக்க முடியாததால் மழலையர் பள்ளி வளாகத்தில் பகுதி நேரமாக வணிக முயற்சியைத் தொடங்கிய பியூஷ் சோமனி மிகப்பெரிய வெப் ஹோஸ்டிங் சப்போர்ட் வணிகத்தை கட்டமைத்துள்ளார்.
பியூஷ் சோமனி மகாராஷ்டிராவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். சராசரியாக படிக்கும் மாணவராகவே இருந்தார். இவரது அப்பா வங்கி அதிகாரி. எனவே இவரது குடும்பத்தினர் அடிக்கடி வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகி வந்தனர். 1989ம் ஆண்டு நாசிக்கில் செட்டில் ஆனார்கள். 1999-ம் ஆண்டு பொறியியல் படிப்பிற்காக புனே சென்றார்.
“என் குடும்பத்தில் கிட்டத்தட்ட அனைவருமே வங்கியில் வேலை செய்து வந்தார்கள். நான் வங்கிப் பணியில் சேரக்கூடாது என்று குடும்பத்தில் அனைவரும் அறிவுறுத்தினார்கள். எத்தனை ஆண்டுகள் பணியாற்றினாலும் உரிய மரியாதை கிடைக்காது என்பதையே இதற்கான காரணமாக சுட்டிக் காட்டினார்கள்,” என்று பியூஷ் பகிர்ந்துகொண்டார்.
பியூஷ் தொழில் தொடங்க குடும்பத்தினர் ஊக்குவித்தனர். ஆனால் அவருக்கு விருப்பமில்லை. மும்பையில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார். குறைந்த சம்பளமே கிடைத்தது.
மும்பையில் தங்கியிருந்து செலவுகளை சமாளிக்க அந்தத் தொகை போதுமானதாக இல்லை. இதனால் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர நாசிக் சென்றார். ஓராண்டில் இரண்டு வேலை மாறிவிட்டார். அப்பாவும் உறவினர்களும் சொன்னது சரியோ என்று அவருக்குத் தோன்றியது. பணியிடங்களில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றே எண்ணினார்.
”அந்த காலகட்டத்தில் பெரும்பாலான இந்திய நிறுவனங்களின் நிலை இதுதான். ஐடி துறையில் பணியாற்றிய நண்பர்களும் இதே கருத்தை பகிர்ந்துகொண்டனர். எனவே சொந்தமாக தொழில் தொடங்க முடிவு செய்தேன். இந்தச் சூழலை மாற்றி என்னுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரையும் சமமாக மரியாதையுடன் நடத்த விரும்பினேன்,” என்றார்.
தொழில் முயற்சியின் தொடக்கம்
2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் பியூஷ் தனது நண்பர்கள் ஏழு பேருடன் சேர்ந்து சிறியளவில் வெப் ஹோஸ்டிங் சப்போர்ட் பிசினஸ் தொடங்கத் தீர்மானித்தார். அப்போது அவருக்கு 23 வயது. அலுவலக அறை எடுத்து செயல்படும் அளவிற்கு பணம் இல்லை.
பியூஷின் பார்ட்னர்களில் ஒருவரின் அம்மா மழலையர் பள்ளி நடத்தி வந்தார். குழந்தைகள் பள்ளி நேரம் முடிந்து சென்ற பிறகு பள்ளி இடத்தை பயன்படுத்திக்கொள்ள அவர் அனுமதித்தார். பியூஷ் இதற்கு ஒப்புக்கொண்டார்.
பியூஷும் அவரது நண்பர்களும் சில கம்ப்யூட்டர்களைக் கொண்டு வந்து மழலையர் பள்ளி செயல்பட்ட இடத்தில் வேலையைத் தொடங்கினார்கள். பியூஷின் அப்பா இணைய இணைப்பிற்காக 25,000 ரூபாய் கொடுத்துள்ளார். இப்படித்தான் தொடங்கியது பியூஷின் பிசினஸ். 2005-ம் ஆண்டு ESDS Software Solution என்கிற பெயரில் வணிகத்தைப் பதிவு செய்தார்.
செயல்பாடுகள்
மழலையர் பள்ளி செயல்பட்ட ஒரு சிறிய இடத்தில் இருந்து தொடங்கப்பட்டாலும் தற்போது இந்நிறுவனம் டேட்டா மையம் மற்றும் க்ளௌட் ஹோஸ்டிங் சர்வீஸ் புரொவைடராக 850 ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. 160 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது.
“முதல் தலைமுறை தொழில்முனைவராக நிறுவனத்தில் பல பொறுப்புகள் ஏற்றுக்கொண்டேன். அனைவருடனும் இணக்கமாக செயல்பட்டு வணிகத்தை வளர்ச்சியடையச் செய்திருக்கிறேன்,” என்கிறார்.
ESDS சேவைகள் மற்றும் சாஃப்ட்வேர் பிராடக்ட்ஸ் வங்கிகள், அரசு நிறுவனங்கள் என பல்வேறு துறைகள் டிஜிட்டல் செயல்பாடுகளுக்கு மாற உதவியுள்ளது.
“15 ஆண்டுகளில் க்ளௌட் ஹோஸ்டிங் தளங்கள், டேட்டா செண்டர் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்ஸ், டிஜிட்டல் வங்கி தீர்வுகள், பல்வேறு க்ளௌட் சார்ந்த SaaS சேவைகள் என பரந்து விரிந்து செயல்பட்டு வருகிறோம்,” என்கிறார்.
இன்ஃபோசிஸ், முத்தூட் குழுமம், LTI, பாரத் பெட்ரோலியம், MUDRA, அம்புஜா சிமெண்ட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, அரசு அமைப்புகள் என இந்நிறுவனத்தின் கிளையண்ட் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
“ESDS க்ளௌட் சேவைகள் வழங்கும் நிறுவனம் மட்டுமல்ல. நாங்கள் டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிக்கும் வலுவான ‘மேட் இன் இந்தியா’ நிறுவனம்,” என்கிறார் பெருமிதத்துடன்.
திவாலாகும் நிலையில் இருந்து மீண்டது
ஆரம்பத்தில் ESDS அமெரிக்கா மற்றும் யூகே-வைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப சப்போர்ட் வழங்கி வந்தது.
“தொடக்க காலத்தில் பல்வேறு சர்வதேச பிராஜெக்டுகளை நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருந்தது. இதனால் சில பிராஜெக்டுகளை நிறுத்திக்கொண்டோம். பல வாடிக்கையாளர்கள் சொந்தமாக வெப் ஹோஸ்டிங் நிறுவனங்களை உருவாக்கிக்கொண்டனர். எங்கள் வருவாய் குறையத் தொடங்கியது,” என்று நினைவுகூர்ந்தார்.
தொழில்நுட்ப சப்போர்ட் அவுட்சோர்ஸ் செய்ய நிறுவனங்கள் தயக்கம் காட்டியதை பியூஷ் உணர்ந்தார். எனவே ESDS நிறுவனத்தை வெப் ஹோஸ்டிங் நிறுவனமாக மாற்ற முடிவு செய்தார்.
“60 ஊழியர்களை 25-ஆக குறைத்தோம். ஊழியர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக பழகியதால் இந்த முடிவு கடினமாக இருந்தது. அமெரிக்கா மற்றும் யூகே-வைச் சேர்ந்த நிறுவனங்கள் லாபகரமாக மாற கடுமையாக உழைத்தோம்,” என்கிறார் பியூஷ்.
வளர்ச்சி மற்றும் வணிக மாதிரி
புதிதாக இணைந்த நிறுவனங்கள் மூலம் ESDS வருவாய் ஈட்டத் தொடங்கியது. இந்நிறுவனங்களுக்கு ESDS தொழில்நுட்ப சப்போர்ட் வழங்கியதால் இவை பிரபலமடையத் தொடங்கியது.
“2010-ம் ஆண்டு இந்தியாவில் ESDS முதல் டேட்டா மையம் தொடங்கினோம். வங்கி மற்றும் அரசாங்க அமைப்புகளில் கவனம் செலுத்தினோம். இந்நிறுவனங்களுக்கு க்ளௌட் மற்றும் டேட்டா செண்டர் சேவைகள் வழங்கினோம். 2016-ம் ஆண்டு மும்பையில் மிகப்பெரிய டேட்டா மையங்களில் ஒன்றை உருவாக்கினோம். இப்படி தொடர்ந்து வளர்ச்சியடைந்து இன்று நாட்டின் மிகச்சிறந்த டேட்டா சென்டர்களை உருவாக்கி வருகிறோம்,” என்கிறார்.
க்ளௌட் மற்று டேட்டா மையம் சேவைகள், பிராடக்ட் ஆர்&டி என இரண்டு பிரிவுகளின்கீழ் ESDS வணிக மாதிரி அமைந்துள்ளது.
ESDS சேவைகள் பிரிவில் eNight Cloud, eNlight 360°, eMagic, VTMScan போன்ற பிராடக்ட்ஸ் மூலம் க்ளௌட் ஹோஸ்டிங் மற்றும் டேட்டா சர்வீஸ் வழங்குகிறது. R&D பிரிவில் ESDS ஸ்ட்ராடெஜிக் பிராடக்ட் டெவலப்மெண்டில் கவனம் செலுத்துகிறது. பிரதமர் அலுவலகத்திற்கு MUDRA, Stand-Up India ஆகிய போர்டல்களை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது.
வருங்காலத் திட்டம்
ESDS தொடங்கப்பட்ட நாட்களில் இந்நிறுவனம் வழங்கிய சேவைகளை எந்த ஒரு டேட்டா செண்டரும் ஹோஸ்டிங் புரொவைடரும் வழங்கவில்லை.
“அமெரிக்கா மற்றும் யூகே ஹோஸ்டிங் வணிகங்கள் மூலம் எங்களுக்கு அனுபவம் கிடைத்தது. முழுமையான டிஜிட்டல் தீர்வுகளை வழங்கியவாறே எங்கள் க்ளௌட் கட்டமைப்புகளை தொடர்ந்து நவீனப்படுத்தி வந்தோம். இதுவே போட்டியாளர்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவியது,” என்கிறார்.
வரும் நாட்களில் உலகளாவிய டேட்டா செண்டர் சந்தையில் இந்நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது.
ESDS தென்னிந்தியாவில், குறிப்பாக சென்னை மற்றும் பெங்களூருவில் கட்டமைப்பு பிரிவில் முதலீடு செய்கிறது. ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளிலும் டேட்டா செண்டர் அமைக்க விரும்புகிறது. மத்திய கிழக்கு, வட ஆப்பிரிக்கா, தெற்காசியா, அமெரிக்கா போன்ற பகுதிகளில் டேட்டா அமைக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆங்கில கட்டுரையாளர்: ரிஷப் மன்சூர் | தமிழில்: ஸ்ரீவித்யா