ரூ.1,400 மாத வருமானத்தில் தொடங்கி, ரூ.43.7 கோடி மதிப்பு ஆடை நிறுவனத்தை உருவாக்கிய தொழில்முனைவர்!
அனுஜ் முந்த்ரா தொடங்கிய Jaipurkurti.com ஆடை வணிகம் கடந்த நிதியாண்டு 43.7 கோடி ரூபாய் டர்ன்ஓவரை எட்டி 2023-ம் ஆண்டில் 100 கோடி ரூபாய் மதிப்புடைய வணிகமாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளது.
அனுஜ் முந்த்ரா 2001-2003 ஆண்டுகளிடையே ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள புடவை ஷோரூம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவரது மாத சம்பளம் 1,400 ரூபாய். இந்த வருவாய் போதாது என்பதை விரைவிலேயே உணர்ந்தார். வேலையை விட்டு விலகினார். சூட் ஆடை வகைகளை வர்த்தகம் செய்யத் தொடங்கினார்.
சூட் வகைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடமிருந்து வாங்கி மற்ற விற்பனையாளர்களுக்கும் கடை உரிமையாளர்களுக்கும் விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதன் மூலம் வருவாய் ஈட்டத் தொடங்கினார். ஜெய்ப்பூரிலேயே சொந்தமாக பிளாக் மற்றும் ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிற்சாலை அமைத்தார்.
2012-ம் ஆண்டு அனுஜ், டெல்லி சென்றிருந்தார். ஜபாங், ஸ்நாப்டீல் போன்ற மின்வணிக சந்தைப்பகுதிகளின் மிகப்பெரிய விளம்பரப் பலகைகளைப் பார்த்தார். இந்தியாவின் வருங்கால ஷாப்பிங் என்பது மின்வணிகம் சார்ந்ததாகவே இருக்கும் என்பதை அந்தத் தருணத்தில் அவர் உணர்ந்தார்.
ஜெய்ப்பூர் திரும்பியதும் பட்டயக் கணக்காளர் ஒருவரிடம் நிறுவனத்திற்கான ஒழுங்குமுறைகள் மற்றும் இணக்கம் குறித்து விசாரித்தார்.
2012-ம் ஆண்டு Nandani Creation Pvt Ltd தொடங்கினார். மின்வணிக சந்தையில் Jaipurkurti.com என்கிற பிராண்டுடன் செயல்பட்டார். முதல் ஆண்டிலேயே இந்நிறுவனம் 59 லட்ச ரூபாய் டர்ன்ஓவரை எட்டியது.
வளர்ச்சிப் பாதை
அனுஜ் மிகக்குறைந்த வளங்களைக் கொண்டே தொழிலைத் தொடங்கினார். நெருங்கிய நண்பர்களிடமிருந்து 50,000 ரூபாய் நிதி திரட்டினார். இதுதவிர வங்கியில் கடன் வாங்கினார்.
இவ்வாறு திரட்டிய நிதி கொண்டு குர்த்தி, சூட் ஆகியவற்றைத் தைக்க 10 தையல் இயந்திரங்கள் வாங்கினார்.
அனுஜின் மனைவி வந்தனா முந்த்ரா குர்த்தி வடிவமைக்கிறார். அதன் பிறகு ஜெய்ப்பூரின் கர்தர்பூர் இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் உள்ள தொழிற்சாலையில் சாயமேற்றுதல், பிரிண்டிங், தையல் பணிகள் போன்றவை மேற்கொள்ளப்படுகின்றன.
தனது தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவற்றை ஸ்நாப்டீல், ஜபாங் போன்ற தளங்கள் மூலம் விற்பனை செய்யத் தொடங்கினார். ஆரம்பகட்டத்தில் போட்டி அதிகம் இல்லை என்றாலும் வணிகத்தை நடத்துவது கடினமாகவே இருந்துள்ளது.
“2012ம் ஆண்டு உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் அறிமுகமாகி இருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை புதிதாகவே இருந்தது. இந்தியர்கள் ஆன்லைனில் வாங்கத் தயக்கம் காட்டினார்கள்,” என்று எஸ்எம்பிஸ்டோரியிடம் பகிர்ந்துகொண்டார்.
லாஜிஸ்டிக்ஸ், பார்கோடிங், ஷிப்பிங் விவரங்கள் தயார் செய்தல் என அனைத்துமே சவாலாக இருந்துள்ளது. குர்த்திக்களை சரியான அளவில் வாங்கத் தெரியாததால் வாடிக்கையாளர்கள் திருப்பியனுப்பும் விகிதம் அதிகமாக இருந்தது.
பல பிரபல பிராண்டுகள் ஆன்லைனில் செயல்படத் தொடங்கியதும் மக்கள் மெல்ல ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். மேலும் டெலிவரி பேக்கேஜுடன் பிராண்ட் விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். அத்துடன் வாடிக்கையாளர் சேவை எண்ணைப் பகிர்ந்துகொண்டு தள்ளுபடி கூப்பன்களும் வழங்கியுள்ளனர்.
இவ்வாறு மெல்ல வாடிக்கையாளர்களைக் கவர்ந்த இந்த பிராண்ட் இன்று குர்த்தி, ஃப்யூஷன் வேர், பாட்டம்வேர் மற்றும் இதர ஆடை வகைகளைத் தயாரித்து விற்பனை செய்கிறது.
இந்த பி2சி நிறுவனம் யூகே, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்த பிராண்டின் சூட் வகைகள் சராசரியாக 900 ரூபாய்க்கும் குர்த்தி வகைகள் 650 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டது
வணிகத்தில் இருந்து ஈட்டபட்ட வருவாய் மீண்டும் வணிகத்திலேயே முதலீடு செய்யப்படுவதாக தெரிவிக்கிறார் அனுஜ். இருப்பினும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தார்.
NSE-யின்கீழ் இயங்கும் National Stock Exchange Emerge என்கிற தளம் ஸ்டார்ட் அப் மற்றும் நடுத்தர அளவில் செயல்படும் நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட உதவுகிறது. Jaipurkurti.com தொடங்கப்பட்ட நான்கு ஆண்டுகளில் இந்தத் தளத்தில் பட்டியலிடப்பட்டது.
2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் Nandani Creation பொதுப் பங்கு வெளியீடு செய்ய உள்ளதாக அறிவித்தது. மொத்தம் 14,44,000 ஈக்விட்டி பங்குகள் 4,04,32,000 ரூபாய்க்கு சப்ஸ்கிரைப் செய்யப்பட்டது.
இந்த நிறுவனம் நிறுவனரின் கட்டுப்பாடில் இருப்பதையே அனுஜ் விரும்பினார். இதில் சமரசம் செய்துகொள்ள விரும்பாததால் வென்சர் கேப்பிடலிஸ்ட் முதலீட்டாளர்களை இணைத்துக்கொள்ளவில்லை. இந்தக் காரணத்தினாலேயே பொதுப் பங்கு வெளியிடுவது குறித்து விரைவாகவே முடிவெடுத்துவிட்டார். வரும் நாட்களில் NSE முக்கிய தளத்தில் பட்டியலிடப்படவேண்டும் என திட்டமிட்டுள்ளார்.
டி2சி முதல் ஆஃப்லைன் வரை
அனுஜ் ஆரம்பத்தில் வலைதளத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதற்கான புரொமோஷன் மற்றும் சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முதலீடு அவசியம் என்பதே இதற்குக் காரணம். முதலில் ஜபாங், ஸ்நாப்டீல் போன்ற சந்தைப்பகுதிகள் மூலமாகவும் பின்னர் மிந்த்ரா, ஃப்ளிப்கார்ட், Tata Cliq போன்றவற்றின் மூலமாகவும் இந்த பிராண்ட் அதிகளவில் ஆர்டர்களைப் பெற்றது.
“ஆரம்பத்தில் 99.9 சதவீத பொருட்களை மற்ற போர்டல்கள் மூலமாகவே விற்பனை செய்து வந்தோம். நாங்கள் எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாமலேயே மெல்ல வாடிக்கையாளர்கள் எங்கள் வலைதளத்திற்கு மாறத் தொடங்கினார்கள்,” என்றார்.
இத்தனை ஆண்டுகளில் வாடிக்கையாளர்களிடம் சிறப்பான புரிதல் ஏற்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் திருப்பியளிக்கும் விகிதம் 50 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைந்துள்ளது.
2019-ம் ஆண்டு இந்த பிராண்ட் ஜெய்ப்பூரின் அமைவா பகுதியில் முதல் ஸ்டோரைத் தொடங்கியது. ஆனால் வாடிக்கையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை.
2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்நிறுவனம் Jaipurkurti.com என ரீபிராண்ட் செய்தது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஜெய்ப்பூரிலேயே இரண்டு ஸ்டோர்கள் தொடங்கப்பட்டன.
அனுஜ் வணிகத்தைத் தொடங்கியபோது இந்திய ஆடை சந்தையில் அதிகளவிலானோர் செயல்படவில்லை. ஆனால் இன்று இந்தச் சந்தையில் செயல்படுவோர் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துள்ளது.
வணிகத்தில் போட்டி இருப்பது சகஜம்தான் என்று குறிப்பிடும் அனுஜ் போட்டி அதிகம் இருக்கிறது என்பதற்காக போட்டியாளர்கள் முன்னோக்கிச் செல்ல அனுமதித்துவிட்டு அமைதியாக இருக்கமுடியாது என்கிறார்.
கோவிட்-19 பாதிப்பும் வருங்காலத் திட்டங்களும்
ஆன்லைன் பிராண்ட் என்பதால் பணமதிப்பிழப்பு போன்ற பிரச்சனைகளையும் சமீபத்திய கொரோனா பெருந்தொற்று பிரசனையையும் எளிதாகக் கையாள முடிந்தது என்கிறார் அனுஜ்.
சில்லறை வர்த்தகத்தைக் காட்டிலும் ஆன்லைன் வர்த்தகத்தை அதிகரிக்கச் செய்ததால் கோவிட்-19 ஒருவகையில் நல்ல வாய்ப்பாகவே அமைந்தது என்கிறார்.
2019-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்நிறுவனம் 7.12 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. 2020-ம் ஆண்டில் ஊரடங்கு காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டபோதும் 7.37 கோடி ரூபாய் ஈட்டியது. கடந்த நிதியாண்டின் டர்ன்ஓவர் 43.7 கோடி ரூபாய். 2023-ம் ஆண்டில் 100 கோடி வணிகமாக உருவெடுக்க இந்நிறுவனம் விரும்புகிறது.
இந்த இலக்கை எட்டுவதற்காக ராஜஸ்தான், டெல்லி போன்ற நகரங்களிலும் லக்னோ, இந்தூர், ஜோத்பூர், லூதியானா உள்ளிட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்காம் நிலை நகரங்களிலும் ஸ்டோர் திறக்க அனுஜ் திட்டமிட்டுள்ளார். மூன்றாம் நிலை நகரங்களில் தேவை அதிகம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மேலும் 2023-ம் ஆண்டில் 15-20 ஸ்டோர்களைத் திறக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வணிகத்தை விரிவடையச் செய்து வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய பல வகையான தயாரிப்புகளை வழங்குவதே இந்த இலக்கை எட்ட உதவும் என்கிறார்.
ஆங்கில கட்டுரையாளர்: பவ்யா கௌஷல் | தமிழில்: ஸ்ரீவித்யா